வெள்ளி, 4 ஜூன், 2021

ஊரடங்கில் சற்று தளர்வு?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை

 மாலைமலர் :கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வரும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை தளர்வுகள் இன்றி தொடரலாம் என்ற கருத்துக்களை நிபுணர்கள் கூறினார்கள்.
சென்னை:  கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. அந்த மாத இறுதியில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்தது.
இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இதையடுத்து பல மாநிலங்களில் பொது முடக்கம், ஊரடங்கு என கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு கடந்த மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. அந்த நேரத்தில் தமிழ்நாட்டிலும் கொரோனா அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.



இதனால் 10-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நோய் கட்டுக்குள் வரவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிவேகமாக நோய் பரவியது. உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.

இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களை அழைத்து பேசினார். மேலும் அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.

அதில் தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து கடந்த 24-ந்தேதி முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.

எனவே 1-ந்தேதி மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 7-ந்தேதி காலை 6 மணியுடன் முழு ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... முழு ஊரடங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இதை நீட்டிப்பு செய்யலாமா? அல்லது தளர்வுகளை அறிவிக்கலாமா? என அரசு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் ஊரடங்கை நீடித்துக் கொண்டே செல்ல முடியாது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனால் விரைவில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

தமிழ்நாட்டில் 2 வாரங்களுக்கு முன்பு இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மாறி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நோய் தொற்று குறைய தொடங்கி உள்ளது.

சென்னை நகரை பொறுத்தவரையில் தினசரி பாதிப்பு 7 ஆயிரம் வரை இருந்தது. இப்போது அது 2 ஆயிரமாக குறைந்துள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் இதே போன்று குறைந்து வருகிறது.

கோவை, ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருப்பூர், திருச்சி போன்ற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகி வந்தது. கோவையை பொறுத்தவரையில் சென்னையையும் தாண்டி திடீரென கொரோனா பாதிப்பு உச்சத்துக்கு சென்றது.

ஆனால் இப்போது அந்த மாவட்டங்களிலும் கணிசமாக குறைய தொடங்கியது. கோவையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 2,900 ஆக குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ்

தமிழகத்தில் நோய் பரவல் உச்சத்தில் இருந்தபோது தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டி இருந்தது. அது தற்போது 24 ஆயிரமாக குறைந்துள்ளது. தினசரி உயிர் பலியை பொறுத்தவரையில் 400-ல் இருந்து 500 வரைக்கும் இருந்து வருகிறது. நேற்றும் 460 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம்- நிபுணர் குழு பரிந்துரை

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கலாமா? அல்லது நீடிக்க செய்யலாமா? என்பது குறித்து நேற்று முன்தினம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

அதில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டம் வாரியாக உள்ள நிலைமைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அதில் ஆலோசிக்கப்பட்ட விவரங்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விரிவாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக