சனி, 5 ஜூன், 2021

நீட் விலக்கு ! முன்னாள் நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் குழு! நீட் தேர்வு சட்டப்படி செல்லாது .. அன்றே விரிவாக கூறியவர்

 மின்னம்பலம் :நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்குத் தமிழகத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடந்து வருகிறது. நீட் தேர்வு காரணமாக அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ, மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா என 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில்,
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற வேண்டும்” என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மாற்றுச் சேர்க்கை முறை - சட்ட வழிமுறைகளை ஆகியவை குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்திட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



அதில், ”சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும், தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12ஆவது வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பல கட்டப் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு. இந்தக் கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறை அந்த சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யும் வகையில் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத் தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கலைஞருக்காக நடைபெற்ற நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வில் பேசிய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன், “ 2007ல் நுழைவுத் தேர்வை ரத்து செய்யச் சட்டம் கொண்டு வந்தார் கலைஞர். அந்த சட்டம் இன்றைக்கும் செல்லுபடியாகும். எனவே இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குச் செல்லாது என்பது என்னுடைய எண்ணம். மிக நுணுக்கமாக, சரியான வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடினால், தமிழ்நாட்டுக்கு நீட் செல்லாது என்று நிலைநாட்ட முடியும்” என்று தெரிவித்திருந்தார்.

அதுபோன்று, இவர் சட்டத்துறைச் செயலராக இருந்தபோது மெட்ராஸ் என்பதைச் சென்னை என மாற்றி சட்டம் இயற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   -பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக