செவ்வாய், 15 ஜூன், 2021

லியர் மன்னன் ராஜநாயஹம் : சாரு நிவேதிதா

May be an image of 5 people, including R.p. Rajanayahem, people standing and indoor

லியர் மன்னன்  ராஜநாயஹம்   : சாரு நிவேதிதா
25-05-2008
திருப்பூர் வரை சென்று வந்தேன். மரங்களே இல்லாத ஊரைப் பார்க்க மிக வினோதமாகவும், வேதனையாகவும் இருந்தது.
 பல வெளிநாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவில் மரங்கள் மிகவும் குறைவு.
நூற்றில் ஒரு மடங்கு கூட இல்லை என்று சொல்லலாம். அதன் காரணமாகவே இந்தியாவில் இயற்கை உற்பாதங்களும் அதிகமாக உள்ளன.
 ஆனால் எவ்வளவு அழிவு வந்தாலும் சரி , நாங்கள் திருந்த மாட்டோம் என்ற மனவுறுதி படைத்தவர்கள் இந்தியர்கள். திருப்பூரில் உள்ள சாயப் பட்டறைகளின் காரணமாகவே நொய்யல் நதி
சாக்கடையாகி செத்தே விட்டது.
இந்த ஊரிலிருந்துதான் மேல் நாட்டுக்காரர்களுக்காக சட்டை உற்பத்தியாகிப் போகிறது. படுபாவிகள், அதற்காக ஒரு நதியையே கொன்று விட்டார்கள்.
திருப்பூரில் பெயருக்குக் கூட ஒரு மரம் இல்லை. அடுத்த பயங்கரம் ஆட்டோ. ஒரு பர்லாங் தூரத்துக்கு 100 ரூ. கேட்டார்கள்.
நானும் நண்பரும் சாப்பிடச் சென்றோம். இருவருக்கும் சேர்த்து 450 ரூ. ஆயிற்று.
அது ஒன்றும் நட்சத்திர ஓட்டல் அல்ல. மொத்தத்தில் வாழ்வதற்குத் தகுதியே
இல்லாத ஊர் திருப்பூர்.


நான் இதுவரை யாரையும் நானாகச் சென்று சந்தித்ததில்லை. அதற்கு எந்த விசேஷமான காரணமும் இல்லை. கூச்சமும், பொதுவாகவே மனிதர்கள் மீது எனக்குள்ள மனக் கசப்புமே காரணமாக இருக்கலாம். சரியாகத் தெரியவில்லை.
அப்படிப்பட்ட நான் ஒருவரைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து அதற்காகவே திருப்பூர் வரை சென்றது இதுவே முதல் முறை.
எனக்குப் பொதுவாக என்னுடைய படிப்பைப் பற்றி ஒரு செருக்கு உண்டு. அந்தச் செருக்கைத் தலையில் தட்டி ஒரு மூலையில் உட்கார வைத்தவர் அரவிந்தன். அந்த அளவுக்குப் படித்தவர்.
அது மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்கள் உள்ளன. மொத்தத்தில் என்னை வியக்க வைத்த ஒரு மனிதர். இதுவரை நான் சந்தித்த மனிதர்களிலேயே என்னை வெகுவாகக் கவர்ந்தவர் என்றும் சொல்லலாம். இப்போதைய தமிழக முதல்வரின் மருமகன் என்பதால் அவரைப் பற்றி அதிகம் எழுத முடியாது.
அவருக்கு அடுத்து என்னைத் தன் அறிவினால் வியக்க வைத்தவர் R.P. ராஜநாயஹம்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு இவரைச் சந்திக்கிறேன்.
 மனிதர் அப்படியே இருக்கிறார்.
இறைவன் இவருக்குக் கொடுத்த வரம் இளமை.
மற்றொரு வரம் இவரது மனைவி. அவந்திகாவைப் போல் தெய்வீக அருள் பெற்றவர்களை நான் துறவிகளாகத்தான் பார்த்திருக்கிறேன்.
இல்லற வாழ்வை மேற்கொண்டவர்களாகக் கண்டதில்லை. இப்போது அவந்திகாவுக்கு அடுத்த படியாக அப்படி ஒரு தெய்வீக அருள் பெற்ற
ஒரு பெண்ணைப் பார்த்தேன். நற்குணங்கள் மட்டுமே வாய்க்கப் பெற்ற ஒரு நங்கை.
இந்தக் காலத்தில் கூட இப்படிப் பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
உதாரணமாக, தன் கணவர் ஒரு நாத்திகர் என்பதால் தானும் கோவிலுக்குச் செல்வதை நிறுத்திவிட்டாராம் மலர். பெயருக்கேற்ற தோற்றமும், குணமும் கொண்டவர். ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிரபலமான அரசியல்வாதியாக இருந்த எஸ்.எம்.டி. சந்திரன் என்பவரின் புதல்வி.
ராஜநாயஹம் முன்பு போலவே பெரும் செல்வந்தராக வாழ வேண்டும் என்று அடிக்கடி பிரார்த்தித்துக் கொள்வேன். ஆனால் இனி அப்படி பிரார்த்திக்கத் தேவையில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவருடைய மனைவி மலர்தான் அவருடைய மிகப் பெரிய செல்வம்.
ராஜநாயஹமும் என்னைப் போலவே ஒரு வெகுளியாகவும், வெள்ளந்தியாகவும் இருந்தது மற்றொரு ஆச்சரியம்.
அதன் காரணமாகவும்,
தான தர்மத்தினாலும் தன்னுடைய எக்கச்சக்கமான சொத்துக்களை இழந்து விட்டு இப்போது ஜீவனோபாயத்துக்காக ஏதோ ஒரு சிறிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்.
 அவர் சீரும் சிறப்புமாக இருந்த போது அவரிடம் வாங்கித் தின்ற ஒருவர், இப்போது ராஜநாயஹம் நலம் விசாரித்து ஒரு மின்னஞ்சல் போட்டாரென்று தாம் தூமென்று குதித்தாராம். ("எப்படி நீர் எனக்கு மின்னஞ்சல் போட்டு என் நேரத்தை வீணடிக்கலாம் ; என் மின்னஞ்சல் முகவரி உமக்கு எப்படிக் கிடைத்தது ?") குதித்தவர் ஒரு எழுத்தாளர்! ' ம்... பிச்சைக்காரப் பயல்கள் ' என்று நினைத்துக் கொண்டேன்.
இந்த ராஜநாயஹத்தைப் பற்றித்தான் "வீழ்ந்தாலும் லியர் மன்னன் மன்னன்தானே ?" என்று எழுதினேன்.
குட்டிக் கதைகளில் Kiss of the Spider Woman பற்றி எழுதியிருந்தேன் அல்லவா, மனிதர் அந்த நாவலைப் பற்றியும், அது சினிமாவாக வந்தது பற்றியும் மணிக்கணக்கில்
பேச ஆரம்பித்து விட்டார்.
அப்போதுதான் தோன்றியது,
இந்த ஆச்சரியமான மனிதரை நேரில்
பார்த்து விட வேண்டியதுதான் என்று.
ஒரு நாள் முழுவதும் பேசினோம்.
சங்கீதத்திலும் கரை கடந்த ஞானமுள்ளவர் ராஜநாயஹம். உலக இலக்கியத்திலும் அப்படியே.
 இப்படிப் பட்ட ஒருவரையா அந்த முழு மூடனான எழுத்தாளன் ' அரைகுறை ' என்று எழுதினான் என்று ஆச்சரியமாக இருந்தது. அது சரி, மூடனுக்கு அப்படித்தானே தெரியும் ?

R.p. Rajanayahem : "மணல் கோடுகளாய்.." புத்தகத்தில்
கி.ராஜநாராயணன் நாட்குறிப்பில்
R. P. ராஜநாயஹம் பற்றி
கதை சொல்லி 15வது இதழ், ஏப்ரல் 2004
கி.ரா.நாட்குறிப்பிலிருந்து
"R.P.ராஜநாயஹத்திடமிருந்து இன்று திடீரென்று தொலைபேசியில் குரல் வந்தது.
எங்கெயிருந்து பேசுறீக?
 திருப்பூரிலிருந்து.
திருப்பூருக்கு எப்பொப் போனீக ?
இப்போ திருப்பூரில தாம் இருக்கேன்.
திருச்சி என்ன ஆச்சி ?
திருச்சி என்னெக் கை விட்டுட்டது.
எனக்குப் பழக்கமானவர்களில்
 ராஜநாயஹம் முக்கியமானவர்.
சுவாரஸ்யமான ஆள்.
பழகிவிட்டால் அவரை மறக்கவே முடியாது.
அவர் நம்முன் உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
பேச்சாளர்கள் என்றால் இவர்கள் தான்
மெய்யான பேச்சாளர்கள்.
அரசியல் கட்சிக்காரர்கள்
இப்படி ஆட்களைஏன் தங்கள் கட்சியின்
முழுநேரப் பேச்சாளர்களாக வைத்துக்கொள்ளவில்லை என்று
கேட்கத் தோன்றுகிறது!
ஆனால் இந்த இவர்களுக்கு அரசியல் பேச வராது.
முழுப்பேச்சும் சமூகம் பற்றியது தான்.
அதுவும் முக்கியமாகத் தங்கள்
வாழ்க்கையில் நடந்த பிரச்னைகள், சம்பவங்கள்,தாங்கள் எப்படித் தோற்றோம் என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்ல அரசியல்காரர்களால்
முடியுமா? இவர்களால் முடியும்.
இந்தத் தோற்ற கதையைச் சொல்லுவதில்
தனம் குமாரசாமி என்று ஒரு நண்பர் இருக்கிறார்.அவரை யாரும் பீட்
பண்ணமுடியாது. அவரும் சிரித்து நம்மையும் சிரிக்க வைப்பார்.
இது சிரிக்க வைக்கும் சமாச்சாரம் இல்லை தான். ஆனாலும் என்ன செய்ய முடியும்?
 நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டே
இருக்க முடியுமா?
 சொல்லி அடுத்தவர்களையும்
 வருத்தப்பட வைக்க ஆரம்பித்தால்,
”நாம்” தூரத்தில் வருவதைப் பார்த்தாலே
ஓட்டம்பிடிக்க ஆரம்பித்து விடுவார்களே.
                    இவர்களை வாழ்க்கை ஓடஓட அடித்து விரட்டுகிறது, எங்கேயும்
எதிலும் தாக்குப் பிடித்து
 நிற்க முடியலை இவர்களால்.
”காலா அருகில்
வாடா ஒன்னைக் காலால் எத்தி மிதிக்கிறேன்” என்கிற ஒரு தைரியம் தான்.
வாழ்க்கையால் இவர்களை அழவைக்க முடியவில்லை.
                  ராஜநாயஹம் சொல்லுகிறார்.
இது நான் இப்போது இருபதாவது இடம்.
 நாள் ஒன்றுக்குப் பதினாலு மணி நேரம் உழைக்கிறேன் என்கிறார்.
தேர்ந்த இலக்கியவாசகர்.
கூட்டில் தேன் சேர்த்து வைத்திருப்பது போலப்
புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தார்.
இசைஞானம் உண்டு.
தேர்ந்த இசைத்தொகுப்புகளைச் சேகரம் பண்ணி வைத்திருப்பவர்.
புதுவையில் இவர் இருந்த போது வாரம்
ஒரு தடவை
எங்களைப் பார்க்க வருவார்.
வந்தவுடன் நானும் கணவதியும்
அவர் எதிரே உட்கார்ந்து அவர் பேச்சைக்
கேட்க ஆயத்தமாகிவிடுவோம்.
அப்படி ஒரு பேச்சு.
ராஜநாயஹம் வீட்டில் அந்த அம்மையார்
 ( அவர் மனைவி ) வவ்வா மீனை
அருமையாகப் பொரித்து வைப்பார்.
 அந்த மீனின் முட்களெல்லாம்கூட
முறுக்கு போல் தின்பதற்குப் பொருபொரு
 என்று சுவையாக இருக்கும்.
அப்படிச் சுவை எமக்குக் கிடைத்து
 அனேக வருடங்கள் ஆகி விட்டன.
கூட்டாகச் சேர்ந்து நண்பர்களோடு
உண்டு பேசி சிரித்து மகிழ்வதைவிட
வேற என்ன இருக்கிறது?
அந்தக் காலம் இனிவருமா?"
........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக