செவ்வாய், 1 ஜூன், 2021

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் காலமானார்!

marxist communist party leader passed away in chennai

நக்கீரன் செய்திப்பிரிவு  :  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மைதிலி சிவராமன் கரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று (30/05/2021) காலமானார்.
அவருக்கு வயது 81.
இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இருந்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணை தலைவராக இருந்துள்ளார்.  
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி உண்மைகளை ஆவணப்படுத்தியவர் மைதிலி சிவராமன்.
1966- 1968 ஆம் ஆண்டு வரை ஐ.நா.மன்றத்தின்  உதவி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்துள்ளார். கீழ்வெண்மணி படுகொலை சம்பவம் குறித்து மைதிலி சிவராமன் எழுதிய தொடர் கட்டுரை ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியானது.
தோழர் மைதிலி சிவராமன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவருமான மைதிலி சிவராமனின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பெண்ணுரிமை போராளியான அவர், முதலில் நியூயார்க் பட்ஜெட் டிவிஷனிலும், பிறகு ஐ.நா. மன்றத்தில் உதவி ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்து மைதிலி சிவராமன், ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவராக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் அயராது குரல் கொடுத்த ஒரு புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர்.
 
கீழ்வெண்மணி துயரத்தை அந்த கிராமத்திற்கே நேரில் சென்று விசாரித்து, நீண்ட தொடர் கட்டுரை எழுதியவர். அவை 'Hunted by Fire' என்ற புத்தகமாக வெளிவந்து, இன்றும் வரலாற்று ஆவணமாக இருக்கிறது. தருமபுரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களுக்கு நேர்ந்தக் கொடுமைகளைத் தட்டிக் கேட்கப் போராடி, அம்மக்களுக்கு நீதி கிடைத்திட இரவு பகலாக உழைத்தவர். பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடைபெற்றாலும், அங்கே வெகுண்டெழும் ஆவேசக் குரலாக மைதிலி சிவராமனின் குரல்தான் இருக்கும்.

போர்க்குணமும், துணிச்சலும் நிரம்பிய ஒரு பெண்ணுரிமைப் போராளியை தமிழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பறிகொடுத்திருப்பது பேரிழப்பாகும்.

மைதிலி சிவராமனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், அவரோடு இணைந்து பணியாற்றிய மகளிருக்கும் எனது ஆழந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக