செவ்வாய், 15 ஜூன், 2021

சசிகலா அதிமுக! 700 கிளைச்செயலாளர்கள் தயார்... தேனி கர்ணன் அதிரடி..!

 நக்கீரன் -வே.ராஜவேல் : அதிமுக, அமமுக கட்சியினரிடம் சசிகலா பேசும் ஆடியோ தொடர்பாக சசிகலாவின் ஆதரவாளரும் அண்ணா திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவருமான தேனி கர்ணனை தொடர்புகொண்டோம்.
சசிகலா பேசும் ஆடியோக்களை வெளியிடுவது யார்? இந்த நேரத்தில் ஏன் வெளியிட வேண்டும்?
இந்த ஆடியோக்களை வெளியிடுவது தொண்டர்கள்தான்.
சென்னையில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு தொடர்ந்து தொண்டர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். கரோனா காலம் என்பதால் பதில் கடிதம் போய் சேருமா, சேராதோ என்பதால் கடிதத்தில் உள்ள தொண்டர்களின் எண்களுக்குத் தொடர்புகொண்டு சசிகலா பேசுகிறார்.
சசிகலா சம்மதம் இல்லாமல் வெளியிட முடியுமா? அல்லது சசிகலாதான் வெளியிட சொல்கிறாரா?
சசிகலா வெளியிட சொல்லவில்லை. மிகப்பெரிய ஆளுமை தன்னிடம் பேசியதைத் தொண்டர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அதனால் அதனை வெளியிட்டுவருகிறார்கள். தான் எழுதிய கடிதத்திற்கு சசிகலா ஃபோனில் பேசிவிட்டார் என்பதை சந்தோசமாக நினைக்கிறார்கள். அதனால் தொண்டர்களே வெளியிடுகிறார்கள்.



ஒருசில தொண்டர்கள்தான் பேசியிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். ஆனால் மற்ற நிர்வாகிகள் யாரும் சசிகலாவுடன் பேசவில்லை என்கிறார்களே?

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள 11 கிளைக் கழகச் செயலாளர்கள் என்னிடம் வந்தார்கள். சசிகலாவின் குரலைக் கேட்டோம். கட்சியை இப்படியே விட்டுவிட முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் வளர்ந்த கட்சி. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோரின் சுயநலத்துக்காக விட்டுவிட முடியாது.

கரோனா காலம் முடிந்தவுடன் நாங்கள் சசிகலாவை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோர் கொடுத்த அடையாள அட்டையுடன்தான் என்னை வந்து சந்தித்தனர். அப்போது அவர்கள் மேலும், அந்த அடையாள அட்டையைக் காண்பித்து இன்றிலிருந்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தரப்பிலிருந்து விலகுகிறோம். சசிகலாவின் ஆதரவாளர்களாக செயல்படுகிறோம். மேலும் 700 கிளைக் கழகச் செயலாளர்கள் சசிகலாவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர் என தெரிவித்துவிட்டுச் சென்றனர்.

கட்சியைக் காப்பாற்ற வேண்டும். அடுத்தமுறையாவது அதிமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பத்திற்காக மாவட்ட வாரியாக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் சந்திக்கப்போகிறார். உள்ளாட்சித் தேர்தல் வருவதற்குள் கட்சியில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கருவாடு கூட மீன் ஆகலாம். சசிகலா அதிமுகவில் இணைய முடியாது என்று கூறுகிறாரே சி.வி. சண்முகம்...

சின்னம்மா இல்லை. அம்மா என்று சொல்லுங்கள் என்று சொன்னவர் சி.வி. சண்முகம். இப்போது மாற்றிப் பேசுகிறார். இது தமிழக மக்களுக்குத் தெரியும்.

ஜெ. ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றால் சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்க வேண்டும் என்கிறாரே முனுசாமி...

தொடர்ந்து ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டவர் கே.பி. முனுசாமி. சசிகலாவைப் பற்றி பேச அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது. பாமகவின் ஸ்லீப்பர் செல்தான் முனுசாமி. இவரைப்போன்று நான்கு, ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்களால்தான் இந்தக் கட்சி வீணாகிவருகிறது.  இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக