வெள்ளி, 18 ஜூன், 2021

திரு கக்கன்! இந்தி எதிர்ப்பு போராட்டம்.. துப்பாக்கி சூட்டுக்கு 700 மாணவர்கள் வரை .. (June 18, 1908)

Yasir RM : கக்கனின் மறுபக்கமும், திராவிட இயக்க தலைவர்களின் மாண்பும்:  திராவிட ஆட்சியாளர்களை பிடிக்காதவர்கள், கக்கனை போன்று எளிமையான எம்.எல்.ஏ வர வேண்டும் என்று வாதம் வைப்பதுண்டு.

கக்கன் உண்மையில் எளிமையானவர் தான். ஆனால் 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கலைக்க மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, 70 மாணவர்கள் இறந்ததற்கு காரணமும் அவர் தான். அவர் தான் அப்போதைய தமிழக உள்துறை அமைச்சர்.
1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி சட்டம் நேரு கொண்டு வந்த போது, பெ.சீனிவாசன், கா.காளிமுத்து, நா.காமராசன், பா.செயபிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர்.சு.துரைசாமி, சேடப்பட்டி முத்தையா, துரைமுருகன், கே.ராஜா முஹம்மது, நாவளவன், எம்.நடராசன், எல்.கணேசன், உலோ.செந்தமிழ்கோதை, சி.ப.வேந்தன் உள்ளிட்ட பதினெட்டு மாணவ இயக்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள். ஒரு புறம் அண்ணா தலைமையில் 3000 பேர் கைதானார்கள்.
1965 ஜனவரி 25 ஆம் தேதி, மதுரை திலகர் திடலை நோக்கி மாணவர் பேரணி நடைபெற்றது. வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகத்திற்கு அருகில் பேரணி சென்ற போது, காங்கிரஸ் காரர்கள் மாணவர்களிடம் மோதலில் ஈடுபட்டனர். வன்முறை வெடித்தது.
மதுரை சம்பவம் தமிழகம் முழுவதும் பரவி போராட்டம் தீவிர மடைந்தது. மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி அடக்க நினைத்தனர் முதல்வர் பக்தவச்சலமும் மற்றும் போலிஸ் மந்திரி கக்கனும். அப்போது காமராஜர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த நேரம்.

முதல்வர் பக்தவச்சலம் ஒருபடி மேலே போய், துணை ராணுவத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்து மாணவர்களை ஒடுக்க ஏவினார்.
நேரு இறந்த பின்பு லால்பகதூர் சாஸ்திரி தான் அப்போதைய பிரதமர். அவர் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் மற்றும் இணை அமைச்சர் அழகேசன் இந்தி திணிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக பதவி விலகினர்.
தமிழகத்தில் யாரும் ராஜினாமா செய்யவில்லை. ஆட்சி முடியும் வரை கக்கன் தான் உள்துறை அமைச்சர்.
இதை ஏற்கச் சொல்லி சாஸ்திரி, அப்போதைய குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத்திற்கு பரிந்துரை செய்தார். தமிழகம் தனி நாடு ஆக வேண்டுமா என்று அந்த பரிந்துரையை நிராகரித்தார் பிரசாத்.
அரசின் கணக்கின் படி தான் 70 மாணவர்கள், ஆனால் 500 மாணவர்கள் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். லால் பகதூர் சாஸ்திரி பின்வாங்கினார். போராட்டம் ஓய்ந்தது. ஆனால் மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகளை கூட வாபஸ் வாங்கவில்லை கக்கன் அவர்கள். மார்ச் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்று, எதிர்ப்பை சந்தித்த பின்னரே மாணவர்களின் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது.
இப்படி மாணவர்கள் மீது வன்முறையை ஏவிய கக்கனை தான், சிறந்த அரசியல்வாதி என்கிறார்கள். சிறந்த அரசியல்வாதிக்கு எளிமை மட்டும் போதாது என்பதற்கு 91% மக்கள் அளித்த வாக்கை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் வன்முறை கையாண்டால் சுடாமல் கொஞ்சுவார்களா என்று சிலர் வாதம் வைக்கலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதியில் மாணவர்கள் தீ வைத்தனர் என்ற சம்பவங்கள் நினைவுக்கு வரலாம். அது போக 1968 ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போதும் மாணவர் போராட்டம் வெடித்தது. மும்மொழி திட்டம் எதிர்ப்பு, NCC யில் இந்தி கட்டளைக்கு எதிர்ப்பு, இந்தி கல்வி முறைக்கு எதிர்ப்பு போன்ற கொள்கைகளை வைத்து டிசம்பர் 19 ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டம், 21 ஆம் தேதி கலவரமாக மாறியது.
ஆனால் கக்கனை போல அண்ணா சுட உத்தரவிடவில்லை. மாறாக மாணவர்களை அழைத்து பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ் வழி கல்விக்கு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
கக்கன் அவர்கள் எளிமையானவர் மற்றும் நேர்மையானவர் தான். அதனால் தான் 1957 ஆம் ஆண்டு மேலூர் தொகுதி மற்றும் 1962 ஆம் ஆண்டு சமயநல்லூர் தொகுதியில் கக்கன் போட்டியிட்ட போது, அவரை எதிர்த்து திமுக வேட்பாளரை கூட நிறுத்தவில்லை. அந்த அளவிற்கு அவர் மீது மரியாதையை வைத்திருந்தது திமுக.
ஆனால் 1965 ல் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பின்பு, 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மேலூரில் கக்கனை எதிர்த்து ஒ.பி.ராமனை நிறுத்தியது திமுக. மக்கள் ஆதரவால் வென்றார் ராமன்.
சுயமரியாதை இயக்கத்தின் சார்பாக ராமனின் படத்தை பெரியார் எரித்த போது, இது சமூக விரோத செயல், ராமன் காந்தி விரும்பும் கடவுள் என்றவர் தான் கக்கன். காந்தி என்ன சொன்னாலும் சரி என்ற வாதமுடையவர் கக்கன்.
வைத்தியநாத ஐயர், கக்கன் உள்ளிட்ட வெறும் 5 நபர்கள் 1939யில் நடத்திய மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவு போராட்டமும் கூட காந்தியின் பெயரை காக்கத் தான் நடத்தினார்கள் என்ற வாதமுண்டு. காந்தி மீது தலித்துகளுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காகவும், அம்பேத்கரின் பேச்சை கேட்டு மதம் மாறி விடக்கூடாது என்பதற்காகவும் தான் அந்த ஆலய நுழைவு போராட்டமே நடந்தது.
காந்தி இந்து மதத்தின் மீது தீவிர பற்றுள்ளவர். ஆனால் தலித் மக்களின் ஆதரவு அம்பேத்கர் பக்கம் செல்வதில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை பெற்றுத் தந்தார் அம்பேத்கர்.
காந்தி இதை கடுமையாக எதிர்த்து, இந்துக்களை பிளவுபடுத்தும் செயல் என்று உண்ணாவிரதமும் இருந்தார். இதனால் காந்தி கைது செய்யப்பட்டு, புனே சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் தலித் மக்கள் மீது வன்முறை ஏவக்கூடிய சூழல் உருவானது. இதனை புரிந்து கொண்ட அம்பேத்கர், காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரட்டை வாக்குரிமையை விட்டுகொடுத்து, தனித் தொகுதிகளை மட்டும் பெற்றார். இருவருக்கும் நடந்த ஒப்பந்தம் தான் 1931 யில் நடைபெற்ற புனே ஒப்பந்தம்.
அப்போது பேசிய அம்பேத்கர், காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாதி. தாழ்த்தப்பட்ட மக்கள் கடைசி வரை இந்து மதத்தின் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து காந்தி அவர்கள் தலித் மக்களை அவதூறாக பேசியதும், அம்பேத்கரின் விடுதலை குரலை கேட்டும் தலித் மக்கள், இந்து மதத்தை விட்டு, மதம் மாறிவிடக்கூடாது என்பதற்காக தான், ஆலய நுழைவு போராட்டம் 1939 யில் நடத்தினார்கள் வைத்தியநாத ஐயரும், கக்கனும்.
1981 ஆம் ஆண்டு கக்கன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, அவரின் நிலையை கண்ட எம்.ஜி.ஆர் அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அது தான் திராவிட இயக்க தலைவர்களின் மாண்பு.
இந்த வரலாறு பலருக்கு புதியதாக தெரியலாம். அதற்கு காரணமும் திராவிட இயக்க தலைவர்கள் தான்.
மாணவர்களின் மீது வன்முறை ஏவிய கக்கனின் செயலைப் பற்றி எந்த மேடையிலும் திராவிட இயக்க தலைவர்கள் பேசியதில்லை. அவரிடம் இருத்த நிறையான, நேர்மை மற்றும் எளிமையை பறைசாற்றினர் திராவிட கட்சி தலைவர்கள். தலைவர்களின் தனிப்பட்ட தவறுகளை சுட்டிக்காட்டி மோசமான அரசியலை செய்யும் பழக்கம் அறிஞர் அண்ணாவிடமும் இருந்ததில்லை. அவர்களின் தம்பிமார்களிடம் இல்லை. அதுவே அண்ணாவின் வார்ப்பு.
இந்த பதிவும் கக்கனை இழிவுபடுத்துவற்காக பதியப்பட்டது அல்ல. மாறாக திராவிட இயக்க தலைவர்களையும், அவர்களின் சமூக நீதி அரசியலையும் பிடிக்காதவர்கள் அனைவரும், அவர்களின் சேவைகளை மறைக்க கக்கனை போன்ற எம்.எல்.ஏ வரவேண்டும் என்று சொல்வதற்கு பின்னால் உள்ள அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் பதியப்பட்டுள்ளது.
ஒரு அரசியல்வாதிக்கு எளிமையும். நேர்மையும் மட்டும் போதாது. மக்களின் மீது வன்முறையை ஏவி அடக்காதவராக, மக்களின் கோரிக்கையை செவி சாய்ப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எழுத்து - யாசிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக