minnambalan :உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சோதனைக்காக நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சப்ளை 5 நிமிடம் நிறுத்தப்பட்டது.
இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏராளமானோர் உயிரிழந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பரிசோதனைக்காக ஆக்சிஜன் சப்ளையை 5 நிமிடம் நிறுத்திய மருத்துவமனை உரிமையாளரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் ‘பராஸ்’ என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகரில் மற்ற மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாலும், இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு அதிகம் இருப்பதாலும் இங்கு நோயாளிகள் அதிகமான அளவில் வருவதாக கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனையின் உரிமையாளர் ஜெயின் பேசும் ஒரு வீடியோ வெளியானது. அதில், "ஆக்ரா முழுவதும் ஆக்சிஜன் இருப்பு இல்லை. அதனால், நோயாளிகளை வேறு மருத்துவமனைகளில் சேர்க்குமாறு கூறினோம். ஆனால் யாரும் மருத்துவமனையை விட்டு போகவில்லை.
அதனால் நானே ஒரு ஐடியா செய்தேன். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் யார் உயிர் பிழைப்பார்கள், யார் உயிர் பிழைக்கமாட்டார்கள் என்பதை அறிந்துகொள்ள டெஸ்ட் செய்தேன். அதன்படி, ஏப்ரல் 26 அன்று காலை 7 மணியளவில் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த ஆக்சிஜனை ஒரு 5 நிமிடங்களுக்கு நிறுத்திவிட்டேன். உடனே 22 நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர்களின் உடல்கள் நீல நிறமாக மாறத் தொடங்கின. அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பதை அறிந்தோம்.
இந்தச் சம்பவத்தை வைத்து அந்த நோயாளிகளால் ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை அவர்களுக்கு உணரவைத்து, சிகிச்சையிலிருந்த மற்ற 74 நோயாளிகளின் உறவினர்களை அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர்களை சொந்தமாக எடுத்து வரச்சொல்லி வலியுறுத்தினேன்" என்று பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர்களை ஈரகொலையை நடுங்க செய்தது.
இதுகுறித்து மருத்துவமனை உரிமையாளர் ஜெயின் கூறுகையில், ”அந்த வீடியோவில் பேசியது நான்தான்.. ஆனால் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள நோயாளிகளை கண்டறிந்து காப்பாற்றவே அப்படி செய்தேன். இதுவரை 7 நோயாளிகள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 22 பேர் உயிரிழக்கவில்லை” என மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
மருத்துவமனைக்கு சீல் வைத்து மூட உத்தரவிட்ட அதிகாரிகள், நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றவும் உத்தரவிட்டனர்.
இருப்பினும், மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என்றும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் எந்த நோயாளியும் இறக்கவில்லை என்றும் மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச கேபினெட் அமைச்சர் சித்தார்த் நாத் சிங், ”இது ஒரு கொடூரமான குற்றம், இது ஒரு வகை கொலை. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
இதுகுறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், "பராஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து புகார்கள் வந்தன. விசாரணை நடந்து வருகிறது, விசாரணை முடிந்ததும் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைவர் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில்,, “5 நிமிடங்களில் நடத்தப்பட்ட ஆக்சிஜன் தடை ஒத்திகையால் 22 நோயாளிகள் இறந்து இருப்பது, பாஜக ஆட்சியில் மனிதநேயம் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது, கொடூர குற்றத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
-வினிதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக