ஞாயிறு, 13 ஜூன், 2021

மதுக்கடைகளை திறந்தது ஏன்? - அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி !.. கடுமையான 18 கட்டுப்பாடுகள்!

 மாலைமலர் :ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளில் 18 கட்டுப்பாடுகள்- தமிழக அரசு அறிவிப்பு
சென்னை:   கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கில் நாளை முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகம் முழுவதும் 5200 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள கடைகளில் நாளை முதல் மது விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 900 கடைகள் உள்ளன. இந்த கடைகளை திறப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் அதிக அளவில் கூட்டம் கூடி விடக்கூடாது என்பதற்காக டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

* மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பணியில் இருக்க வேண்டும்.

* மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

* மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும்.

* மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

* மதுபானை சில்லறை விற்பனைக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது.

இதையும் படியுங்கள்... 4 மாவட்டங்களில் 900 மதுக்கடைகளை திறக்க ஏற்பாடு

* மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் திறக்கும் போதும் மூடும் போதும் உட்புறமும் வெளிப்புறமும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

* மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் ஒரு நாளைக்கு இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்கள் வரிசையில் நின்று வருவதற்காக 1 அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்க வேண்டும்.

* மதுபான கடைகள் திறக்கும் போதும், மூடும் போதும், கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முககவசம், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய கையுறை ஆகியவற்றினை பயன்படுத்த வேண்டும்.

* குறைந்த பட்சம் இரண்டு பணியாளர்கள் மதுபானக் கடையின் வெளிப்புறம் நின்று மதுபானம் வாங்க வரும் நபர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் முககவசம் அணிந்துள்ளனரா? என்பதனை கண்காணிக்கவும் வேண்டும்.

* டாஸ்மாக் கடையின் நுழைவு வாயிலில் ஒரு பணியாளர் மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கிய பின்னர் மதுபான சில்லறை விற்பனைக் கடைக்குள் அனுமதிக்கும் பணியினை கட்டாயம் செய்ய வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கும் பணியாளர் கட்டாயம் மூன்றடுக்கு கொண்ட முககவசம், ஒரு முறை பயன்படுத்தக் கூடிய கையுறை ஆகியவற்றினை பயன்படுத்த வேண்டும்.

* டாஸ்மாக் கடை பணியாளர்கள் மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மதுபான விற்பனைக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் நபருக்கு அதிகமான அளவில் மதுபானங்கள் வழங்கக் கூடாது.

* மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.

* டாஸ்மாக் கடையில் விற்பனையின் போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக