சனி, 29 மே, 2021

GST கவுன்சில் கூட்டத்தில் PTR பழனிவேல் தியாகராஜன் பேசிய முக்கிய விடயங்கள்

 Sundar P  :   GST கவுன்சில் கூட்டத்தில் PTR பழனிவேல் தியாகராஜன் பேசியது....
சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி அமைப்பின் கட்டமைப்பு/வடிவமைப்பானது, குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன.
எந்தவொரு வரிசையிலும் இல்லாமல், அவற்றில் சிலவற்றை நான் குறிப்பிடுகிறேன் இது முழுமையான பட்டியல் அல்ல:
1. ஜிஎஸ்டி கட்டமைப்பின் உரிமை, இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலனை செய்து வலுப்படுத்த வேண்டும்.
2 .ஜிஎஸ்டி கட்டமைப்பின் வடிவமைப்பின் காரணத்தால், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அக்கட்டமைப்புடன் முழுமையாக ஒருங்கிணைப்பது கடினமாகிறது,
 உள்ளீடுகள் அல்லது உள்ளீட்டு வரவுகளுடன் தொடர்புடைய குறைபாடுகள் தீர்க்கப்படவேண்டும்.
3. தனித்தனியாக இயங்கும் கண்காணிப்பு / அமலாக்க மாதிரி (மத்திய, மாநில அரசு ஆய்வாளர்கள் அதிகாரிகளுக்கு இடையில்) எளிமைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படல் வேண்டும்.


4. கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது.
5. மந்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கிளை வழங்குவதில் ஏற்படும் தாமதத்தின் காரணத்தால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது,
இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பங்கிளைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
6. ஜிஎஸ்டி செயலகத்தின் வடிவமைப்பு இருப்பிடம் மற்றும் செயல்பாட்டு மாதிரியை மீண்டும் பரிசீலித்து பல மடங்கு வலுப்படுத்த வேண்டும்.
7. கூட்டத்திற்கு முன் எந்த ஒரு கலந்துரையாடலும் இல்லாமல், அல்லது. ஒருமித்த கருத்தை அடைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாமல், ஒவ்வொரு பிரச்சினையும் ஜிஎஸ்டி மன்றத்திற்கு கொண்டுவரப்படும் தற்போதைய செயல்முறை பலவீனமாக உள்ளது.
மேலும், 10 பேர்களைக் கொண்ட இந்த குழு அதிகபட்சம், மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் கூடுகிறது.
8 .மேலே குறிப்பிட்டுள்ள செயல்முறைகளுக்கு மாற்றாக, CBICயின் வரி ஆராய்ச்சி பிரிவு போன்ற, ஜிஎம்டி மன்றத்திற்கு நேரடி தொடர்பில்லாத அமைப்புகளுக்கு அதிக அளவில் அதிகாரம் அளிப்பது. அரசியலமைப்பின்படி சட்டபூர்வமான தன்மை மற்றும் அடிப்படைத் திறன் ஆகிய கேள்விகளை எழுப்புகின்றது.
மேற்கண்ட பிரச்சினைகளைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஒன்றிய அரசிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவது ஆகும்.
ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் (குடிமக்கள். நிறுவனங்கள் மற்றும் ஒரு மாநிலத்தில் குடியேறிய ஒவ்வொருவரிடமிருந்தும்), மாநிலங்களின் பங்கு கணிசமாகக் குறைந்தமை, மாநில அரசின் வரிவிதிக்கும், வருவாய் ஈட்டும் அதிகாரத்தின் மீதான அணுகுமுறையில் ஒன்றிய அரசின் நம்பிக்கை இல்லாமை",
 குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை சமரசம் செய்வதில், கருணையின்மை மற்றும் பரிவின்மை கொண்ட ஒன்றிய அரசின் அணுகுமுறை, ஆகியவற்றினால் இந்த சீரழிவு ஏற்பட்டுள்ளது.
- முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மாண்புமிகு தமிழக நிதியமைச்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக