செவ்வாய், 18 மே, 2021

காவல் எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்!

காவல் எல்லைக்கு வெளியே செல்ல இ-பதிவு கட்டாயம்!

 minnambalam :சென்னையில் இன்று முதல் காலை 10 மணிக்கு மேல், காவல் எல்லையைத் தாண்டி வெளியே செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை தீவிரபடுத்த இன்று முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இன்று(மே 18) முதல் முறையான ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு காவல் நிலைய சரகங்களில் உரிய சாலை தடுப்புகள் அமைத்து, செக்டார்களாக ஏற்படுத்தி அப்பகுதியிலேயே வசிக்கும் மக்கள் அவர்களுக்கு வேண்டிய காய்கறி, உணவுப்பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மேற்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

சென்னையில் மொத்தம் 153 வாகனத் தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி வெளியே வருபவர்கள் இ-பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். இ-பதிவு செய்யாமல் வெளியே வருபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு காவல் நிலைய எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து உரிய சாலை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, செக்டார்களாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, சென்னை பெருநகரில் 348 செக்டார்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

பொதுமக்கள் வசிக்கும் சரகத்திலிருந்து மறு காவல் நிலைய எல்லைக்குள் செல்லாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மறு காவல் நிலைய எல்லைக்கு செல்பவர்கள் உரிய இ-பதிவு செய்திருக்க வேண்டும். இ-பதிவு இல்லாதவர்கள் மற்றொரு செக்டார் பகுதியில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள 181 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளை கண்காணித்தும், தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியில் வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாரும் வெளியே வர அனுமதியில்லை. அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 205 இருசக்கர ரோந்து வாகனங்களும், 309 நான்கு சக்கர ரோந்து வாகனங்களும் உரிய காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு காவல் நிலைய ரோந்து வாகனங்கள் குறிப்பிட்ட முக்கிய சந்திப்புகளில் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

மேற்கண்ட புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்திடும் பணியினை சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்கு மக்கள் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும்,முன்களபணியாளர்கள், காவல் பணியில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிட சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக