புதன், 12 மே, 2021

கொரோனா பணியில் உரிழந்த இளம் கர்ப்பிணி டாக்டர் சண்முக பிரியா .. தேனீ மாவடடம் சின்ன மனூர்

 மாலைமலர் : வேலைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் சொல்லியும் மருத்துவ சேவை ஆற்றி கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்தவர் சண்முகபிரியா (வயது 32). இவர் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்த போதிலும் கொரோனா தொற்று காலத்திலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் சண்முக பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.



ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இது சக ஊழியர்கள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காலத்தில் கர்ப்பிணி என்றும் பாராமல் தொடர்ந்து மருத்துவ சேவையாற்றி வந்த நிலையில் சண்முகபிரியா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறியதாவது:-

8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சண்முக பிரியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என வலியுறுத்தி வந்தோம். ஆனால் கொரோனா தடுப்பு பணியில் டாக்டர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நான் பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் கர்ப்பிணியாக இருந்ததால் அரசு வழி காட்டுதல்படி தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. அவரது உடல் நிலையை பொருட்படுத்தாது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி தற்போது உயிரை இழந்துள்ளார்.

இவ்வாறு அவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் நலச் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவியும், சின்னமனூர் மருத்துவ மனையின் முன்னாள் மருத்துவரும், 8 மாத கர்ப்பிணியுமான டாக்டர் சண்முக பிரியா உயிரிழந்த சம்பவம் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. டாக்டர்கள் தயவு கூர்ந்து கவனத்துடனும், முன் எச்சரிக்கையுடனும் பணியாற்றும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

போரில் மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தரும் இறுதி மரியாதையை போல இவருக்கும் மரியாதை வழங்க வேண்டும். கணவர் குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு பலியான டாக்டர் சண்முக பிரியா மதுரையை சேர்ந்த ஓட்டல் அதிபர் முத்துக்குமார் என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக