புதன், 5 மே, 2021

இன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்

இன்று ஆளுநரைச் சந்திக்கிறார் ஸ்டாலின்

 minnamblam :வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஏப்ரல் 4) மாலை புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் வாக்குகள் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு திமுக 133 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மை பெற்றது.   இந்த நிலையில், மே 4ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற திமுக உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.                            இந்தக் கூட்டத்தில். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி வரவேற்புரையாற்றிட பொதுச்செயலாளர் துரைமுருகன், சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்தார். அதை முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று அறிவித்ததும் அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்ல உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு மக்கள் நாடு தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்துக்கொண்டார்கள். வேல்முருகன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்டோர் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

ஸ்டாலினை சட்டமன்றக் கட்சித் தலைவராக முன்மொழிந்து பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், “அண்ணா மற்றும் கலைஞர் திறமையாக ஆட்சி செய்திருக்கிறார்கள். கலைஞருடன் நான் இருந்திருக்கிறேன். இப்போது ஸ்டாலினுடனும் இருக்கிறேன். ஸ்டாலின் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்கப் போகிறார். அடுத்த 25 வருடங்களுக்கு அவர்தான் தொடர்ந்து முதல்வராக இருப்பார். அவரது தலைமையிலான ஆட்சி சிறப்பாகச் செயல்படுவதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம்” என வழக்கமாக உருக்கமாகவும் பேசினார்.

கூட்டத்துக்கு வந்த பலரும் அமைச்சரவைப் பட்டியல் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் இன்று (மே 5) காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, தான் திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அளிக்கிறார்.

-வணங்காமுடி வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக