வியாழன், 20 மே, 2021

சேலம் - ‘நாட்டிலேயே முதன்மையான சிகிச்சை மையம்’: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

minnambalam.com : தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் சுற்றுப்பயணமாகச் சேலம் சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

இன்று காலை 8.30 மணிக்கு சென்னையிலிருந்து சேலம் கிளம்பிய முதல்வர், சேலம் உருக்காலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டரை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து, திருப்பூர் செல்லும் வழியில், சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வழங்கப்பட்டு வரும் 24 மணி நேர அவசர மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவ வசதிகள் குறித்தும், கொரோனா தடுப்பூசி போடுவது குறித்தும், பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள்

முதல்வரின் இந்த ஆய்வைத் தொடர்ந்து சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், “சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 966 படுக்கைகளும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 617 படுக்கைகளும் என, மொத்தம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,583 படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2,896 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் 2,770 படுக்கைகளும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 600 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்புக் குழுக்கள்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்திடவும், ஊரடங்கினைக் கண்காணித்திடவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தனியாக உள்ளார்களா என்பதைக் கண்காணிக்கவும், கோவிட் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களின் உடல் நலனைக் கண்காணித்திடவும், சேலம் மாவட்டம் முழுவதும் 177 பகுதிகளில் 354 நபர்கள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, 24*7 கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

38 கோவிட் சென்டர்

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்குச் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் புதியதாக 26 கோவிட் பராமரிப்பு மையங்களும், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களில் 9 கோவிட் பராமரிப்பு மையங்களும் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 3 கோவிட் பராமரிப்பு மையங்கள் என மொத்தம் 38 கோவிட் பராமரிப்பு மையங்கள் (கோவிட் கேர் சென்டர்) தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், சித்த மருத்துவத் துறையின் சார்பில், சேலம் - 8, அரசு மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் 100 படுக்கை சித்த மருத்துவ கோவிட் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் தற்போது  கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் இன்று திறந்து வைத்த நிலையில்,  கூடுதலாக 500 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகளை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டுமெனவும், 10 நாட்களுக்குள் இப்பணிகளை முடித்திடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி

சேலம் ஆய்வைத் தொடர்ந்து திருப்பூர் சென்ற முதல்வர், நேதாஜி ஆயத்த ஆடை வளாகத்தில் நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலில் பதிவு செய்த 20 பேர் இந்நிகழ்ச்சியில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

பின்னர், திருப்பூர் பின்னலாடை மற்றும் அதன் சார்ந்த தொழில் துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து கோவை புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக