சனி, 8 மே, 2021

பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து கொடூரமாக தாக்கி பேயோட்டிய 'பிராந்தி சாமியார்' கைது!

nakkheeran.in - இளையராஜா :
'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them

 நாமக்கல் அருகே, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து சாட்டையாலும் பிரம்பாலும் கொடூரமாகத் தாக்கி பேயோட்டிய பிராந்தி சாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள காதப்பள்ளியைச் சேர்ந்தவர் அனில்குமார் (வயது 42). கடந்த சில ஆண்டுகளாக, மஞ்சநாய்க்கணூரில் உள்ள கருப்பண்ணசாமி கோயிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அருள்வாக்கு கூறி வந்தார்.

 உடல்நலம் சரியில்லாதவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர், மகன், மகள் திருமணத்தடை அகல வேண்டுவோர் என அவரிடம் ஏராளமான பக்தர்கள் அருள்வாக்கு கேட்டு வந்தனர். குறிப்பாக, பேய் பிடித்ததாகக் கருதப்படும் பெண்களுக்குப் பேய் ஓட்டும் பணிகளையும் செய்து வந்தார். 

 தனக்குள் கருப்பண்ண சாமி இறங்கியிருப்பதாகவும், தான் ஒரு சிவ பக்தன் என்றும் சொல்லிவந்தார். கழுத்தில் ருத்ராட்ச மாலை, முகத்திலும் உடலிலும் திருநீறு, திரிசடை, இடுப்பில் கொத்தாக கட்டப்பட்ட சலங்கைகள், கருப்பு நிறத்தில் அரைக்கால் டிரவுசர் என சாமியார் போல இருந்ததாலும், அவர் கூறிய சில அருள்வாக்குகள் பலித்ததாலும் படித்தவர்கள் கூட அவரிடம் அருள்வாக்கு கேட்டு வந்தனர். 

 பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களின் உடலில் இருந்து பேயை விரட்டி அடிக்கிறேன் பேர்வழி என்று, எதிரில் வந்து அமரும் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து முதுகில் கையால் குத்துவதும், சாட்டையால் சரமாரியாக அடிப்பதும், கன்னத்தில் பளீச் பளீச் என அடிப்பதும், குனிய வைத்து காலால் உதைப்பது என கொடூரமான முறைகளைக் கையாண்டு வந்தார். சாட்டை மட்டுமின்றி நீளமான மூங்கில் பிரம்பாலும் பேய் பிடித்ததாகச் சொல்லப்படும் பெண்களைத் தாக்கி வந்துள்ளார். 

 'Brandi Samiyar' arrested for grabbing women by the hair and brutally assaulting them


 தன் களைப்பு தீர, அடிக்கடி பிராந்தி குடித்துக்கொள்கிறார். பிராந்தியை ஒரு டம்ளரில் ஊற்றிக்கொடுப்பதற்காகவே உதவியாளர் ஒருவரையும் நியமித்துள்ளார். 

 அவர் பேய் ஓட்டும் காட்சிகள் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வேகமாகப் பகிரப்பட்டுவந்தது. அவர் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும், மூடநம்பிக்கை என்றும் விவாதங்களும் கண்டனங்களும் எழுந்தன. 

 இதையடுத்து, பொம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சஞ்சய்குமார் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் சாமியார் மீது புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் கமலக்கண்ணன், பேயோட்டி அனில்குமாரை வியாழக்கிழமை (மே 6) நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார். அப்போது நடந்த விசாரணையில், தற்போது வாட்ஸ்ஆப்களில் பகிரப்பட்டு வரும் பேயோட்டும் சம்பவம், மூன்று மாதத்திற்கு முன்பு நடந்தது என்று அனில்குமார் கூறியுள்ளார். 

 எனினும், அருள்வாக்கு, பேயோட்டுதல் என்ற பெயரில் பெண்களைக் கொடூரமாக தாக்குவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியதால், மாவட்ட எஸ்.பி. சக்திகணேசன் அவரை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் வேலகவுண்டம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் பேயோட்டி அனில்குமாரை வெள்ளிக்கிழமை (மே 7) கைது செய்தனர். 

 இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, ''சாமியார் அனில்குமார் பேயோட்டியதாக வாட்ஸ்ஆப்களில் வரும் சம்பவத்தில் தொடர்புடைய பெண்களிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. தற்போது, பெண்களைத் தாக்கியதாகக் கூறப்பட்ட புகாரில்தான் அனில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்,'' என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக