புதன், 5 மே, 2021

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்

maalaimalar.co:ென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார். கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போது அரங்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தி.மு.க. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந்தனர்.

அங்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் கவர்னர் தேனீர் வழங்கினார்.

நாளை மறுநாள் 7-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார். இதையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.


இதையடுத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்தார்.

133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சியமைக்க மு.க.ஸ்டாலின் உரிமை கோரிய நிலையில் கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு கடிதத்தை அவரது செயலாளர் அனந்தராவ் பட்டேல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடன் வழங்கினார்.

7ந்தேதி நடக்கும் பதவியேற்பு விழா பற்றி 20 நிமிடம் மு.க.ஸ்டாலினிடம் அனந்தராவ் பட்டேல் பேசினார்.

இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவும் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக