சனி, 22 மே, 2021

ராமஜெயம் கொலையாளிகள் திமுக ஆட்சியில் கைது செய்யப்படுவார்களா ?

Ramajayam case Will they be arrested under the DMK regime?

 நக்கீரன் - இரா. இளையசெல்வன்  : தமிழக நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம், முந்தைய அதிமுக ஆட்சியின்போது கொல்லப்பட்டார்.
அவரது படுகொலை தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
நேருவின் வலதுகரமாக இயங்கிவந்த ராமஜெயத்தின் படுகொலை, நேரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்தது. இந்தப் படுகொலையில் சம்மந்தப்பட்ட கொலையாளிகள் முந்தைய அதிமுக ஆட்சியில் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்த வழக்கும் கிடப்பில் போடப்பட்டது.
இந்தச் சூழலில், மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது.
படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறது
ராமஜெயம் குடும்பம். கே.என். நேரு மீண்டும் அமைச்சராகியிருப்பதால், அவரது சகோதரரின் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் என்று திருச்சி மாவட்டத்தில் உள்ள நேருவின் ஆதரவாளர்களும் எதிர்பார்க்கிறார்கள்.


 
இந்த நிலையில், இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸின் மூத்தப் பிரமுகரான திருச்சி வேலுச்சாமி, “ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்ய ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. இதனாலேயே அந்த வழக்கு முடக்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சி வந்திருப்பதால், இந்தப் படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்.

திமுகவின் சீனியர் அமைச்சர்களில் ஒருவரான கே.என். நேருவின் சகோதரர் படுகொலையின் குற்றவாளிகள், திமுக ஆட்சியிலும் கைது செய்யப்படவில்லை எனில், திமுக தொண்டர்கள் சோர்ந்து போக வாய்ப்புண்டு. திமுக ஆட்சியில்கூட திமுக குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கவில்லையெனில், பிறகு எந்த ஆட்சியில் கிடைக்கும்? அதனால், இந்தப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில் முதல்வர் ஸ்டாலின் கவனம் செலுத்தினால் நல்லது” என்கிறார். இதுகுறித்து கோரிக்கையும் வைத்திருக்கிறார் திருச்சி வேலுச்சாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக