புதன், 12 மே, 2021

ஊரடங்கு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்” - தமிழக முதல்வர் அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் :கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கை செயல்படுத்துவது குறித்து தொழில் மற்றும் வணிக சங்க அமைப்புகளுடன் கடந்த 9-5-2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் சென்னையில் கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
1. சுயமுதலீட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க இந்த நிதியாண்டில் முதலீட்டு மானியத்திற்கான திட்டமதிப்பீடு ரூ.280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 60 விழுக்காடு தொகை (ரூ.168 கோடி) நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும். இதன் மூலம் நிலுவையில் உள்ள தகுதியானஅனைத்து நிறுவனங்களுக்கும் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் உதவி பெறும்போது செலுத்தவேண்டிய முத்திரைத் தாள் பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகிறது.



3. மே 2021 முதல்செப்டம்பர் 2021 வரை காலாவதியாக உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத் துறை, தொழிலாளர் துறை, தொழில் பாதுகாப்புத் துறை, வணிக உரிமம் உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வமான உரிமங்கள், டிசம்பர் 2021 வரை நீட்டிக்கப்படுகின்றன.

4. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கான முதலீட்டு மானியம் பெறுவதற்கு விற்றுமுதல் 25 விழுக்காடு அதிகரிக்க வேண்டுமென்ற விதிமுறையிலிருந்து ஏற்கெனவே 31-3-2021 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 31-12-2021 வரை 9 மாதகாலத்திற்கு நீட்டிக்கப்படுகிறது.

5. கடன் உத்தரவாத நிதிஆதாரத் திட்டம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பெறப்பட்ட கடனுக்கான ஐந்து விழுக்காடு பின் முனை வட்டி மானியம் நிறுவனங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்படும்.

6. சிட்கோமனைகள், Fast track அடிப்படையில் தொடர்ந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

7. சிட்கோ நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய மனை விலை, தவணைத் தொகை மற்றும் தொழிற்கூடங்களுக்கான வாடகை போன்றவற்றைச் செலுத்துவதற்கு, மேலும் ஆறு மாதகால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

8. அனைத்து மாவட்டங்களிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களில், (சிட்கோ தொழிற்பேட்டைகள், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் உள்பட) பணிபுரியும் 45 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்து, போடப்பட்டுள்ளது. தகுதியுடையஅனைவருக்கும் சிறப்புமுகாம் மூலம் கொரோனா தடுப்பூசி போட தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

9. ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கை மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்சி ஆகியவற்றுக்கான சாலைவரி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து கட்ட அவகாசம் வழங்கப்படுகிறது.

10. சிறு குறு தொழில் நிறுவனங்கள், ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி, வாகனம் வைத்திருப்போர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை கட்டுவதற்கும் காலநீட்டிப்பு வழங்குவது குறித்து ஒன்றிய அரசு மற்றும் மத்திய ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும்.

11. மே 2021ல் காலாவதியாகும் ஆட்டோ ரிக்ஷா, கால்டாக்சி போன்ற வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையைச் செலுத்துவதற்குக் காலநீட்டிப்பு வழங்கக் கோரி மத்திய அரசும், ஐசுனுஹ அமைப்பும் வலியுறுத்தப்படும்.

12. மே 2021 மாதத்தில் காலாவதியாகும் தீயணைப்புத் துறை, தொழில்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை ஆகியவற்றின் மூலம் பெறப்பட வேண்டிய சட்டரீதியான உரிமங்கள் மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து, உரிய ஆணைகள் வெளியிட சம்பந்தப்பட்ட துறைகள் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

13. தொழில்துறை மூலம் வழங்கப்படும் மூலதனமானியம் மூன்று தவணைகளாக வழங்குவதற்குப் பதிலாக, மாநில தொழில் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, ஒரே தவணையாக, தொழில் வளத்தை கருதி வழங்க முடிவு செய்யப்படுகிறது.

14. பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய தொழில்வரியை செலுத்த மேலும் மூன்று மாதகால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும், ஊரடங்கில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன:

1. காய்கறி, மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

2. அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

3. இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு “சேவைமையம்’’ 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். சென்னையிலுள்ள தொழில் வழிகாட்டி மைய அலுவலகத்தில் இயத சேவை மையம் இயங்கும். இதற்கான தொலைபேசி எண்கள் 96771-07722, 99943-39191, 78239-28262, 96291-22906, 99629- 93496, 99629-93497.

4. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று அதே நிபந்தனைகளுடன், நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக