ஞாயிறு, 9 மே, 2021

தமிழ்நாடு அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்

தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞர்!

minnambalm  :தமிழ்நாடு  அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு  ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தலைமை செயலாளர், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு  வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே தமிழ்நாடு  அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த விஜயநாராயணன், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு அனுப்பி வைத்தார்.   இந்த நிலையில், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

1953 அக்டோபரில் திருநெல்வேலியில் பிறந்தவர் சண்முகசுந்தரம். புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் என்.நடராஜனிடம் ஜூனியராகப் பணியாற்றியவர். பின்பு, 2002 - 2008இல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர். 1996 - 2001இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். 2015 - 2017 ஆண்டில் சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்திருந்தவர். சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடியவர்.

ஜெயலலிதாவின் ஊழலை எதிர்த்ததால் தாக்கப்பட்ட வழக்கறிஞர்களில் முக்கியமானவர் சண்முகசுந்தரம். 1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாளில், சண்முகசுந்தரம் மீது வெல்டிங் குமார் தலைமையிலான ரவுடிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், பல இடங்களில் வெட்டுக் காயமும், ஒரு விரலையும் இழந்தார்.

வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடந்து மூன்று வாரங்களுக்குப் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாற்றப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதிரியான பின்னணிகளைக்கொண்ட சண்முகசுந்தரம்தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

-வினிதா

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக