புதன், 12 மே, 2021

ரங்கசாமியை காப்பாற்ற ஸ்டாலினால் மட்டுமே முடியும்… ஸ்கெட்ச் போடும் அமித்ஷா - வீரமணி!

malaimurasu.com :  புதுவையைக் காப்பாற்றி (அடுத்த கட்டமாக) ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே விடியலை ஏற்படுத்த முடியும்! என திராவிட கழக தலைவர் வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் 2ஆம் தேதி மே 2021இல் வெளி வந்தன. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸ்-10 இடங்கள்; பா.ஜ.க – 6 இடங்கள்; தி.மு.க- 6 இடங்கள்; சுயேச்சைகள் – 6 இடங்கள்; காங்கிரஸ் – 2 இடங்கள்; மொத்தம் – 30 இடங்கள்   புதுவை சட்டப் பேரவைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக முன்னணி என்ற N.D.A.யில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட என்.ரங்கசாமியின் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும், பா.ஜ.க. 6 இடங்களையும் பெற்றுள்ளதால், 30-இல் 16 பெரும்பான்மை என்பதால் அவர் தான்தான் முதல் அமைச்சர், தனது கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கூறி, பா.ஜ.க.வுக்கு அமைச்சரவையில் இடம் தர ஒப்புக் கொண்டார்; ஆனால், பா.ஜ.க.வுக்குத் துணை முதல் அமைச்சர் பதவி என்பதை மனதார அவரோ, அவரது கட்சியினரோ ஏற்கவில்லை.

மே 7ஆம் தேதி என். ரங்கசாமி முதல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம், துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனால் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு நமது வாழ்த்துகள்! அவர் கரோனா தொற்று பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார்.

இந்நிலையில், வழக்கமான தனது ‘வித்தை’யை – எப்படி முன்பு நாராயணசாமி முதல் அமைச்சராக இருந்தபோது, அந்தஆட்சியைக் கவிழ்க்க முதல் உபாயமாக மூன்று பா.ஜ.க.வினரை – தேர்தலில் தோற்றவர்களை நியமன உறுப்பினர்களாக்கி, (ஆளும் கூட்டணியிலிருந்தவர்களான காங்கிரஸ் மற்ற இதர கட்சியிலிருந்தவர்களை (தி.மு.க.வில் வென்ற ஒருவரையும்) விலகச் செய்து) குதிரை பேரம் நடத்தி, ஆட்சியைத் தேர்தலுக்கு முன் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலாக்கியதை திட்டமிட்டே செய்ததே பா.ஜ.க. வெற்றிகண்டது! அதற்கு புதுச்சேரி அ.இ.அ.தி.மு.க.வும் உடந்தையாக இருந்தது; தேர்தலுக்குப்பின் ஆட்சியில் பங்கு கனவுடன் உலவினர் – அ.தி.மு.க.வினர். அடியோடு துடைத்தெறியப்பட்டு அதிமுக படுதோல்வி அடைந்தது. முன்பு இருந்த இரண்டு இடங்களையும் இழந்து, பூஜ்யத்தையே ராஜ்யமாக்கிக் கொண்டு திருதிருவென விழிக்கின்றனர் (இதை நாம் முன்கூட்டியே சொன்னோம்). மதவெறிக் கட்சியான பா.ஜ.க. “ஆக்டோபசின்” கொடுங்கரம் எளிதில் மற்ற கட்சிகளை இருக்க விடாது என்று முந்தைய நடப்புகளை சுட்டிக் காட்டி எச்சரித்தோம்! இப்போது ‘ஆப்பசைத்த’ நிலைக்கு ஆளாகிவிட்டது அ.தி.மு.க. புதுச்சேரியில்!

பதவியேற்ற முதல்வர் என். ரங்கசாமியின் ஆட்சி நாற்காலியில் அவர் அமர்வதற்கு முன்பே, அதனை ஆட்டிப் பார்க்கும் வகையிலும், அதன்கீழ் அரசியல் கண்ணிவெடியைப் புதைக்கும் தனது கொடுங்கரத்தை புதுச்சேரியில் பா.ஜ.க. நீட்டிட முழு ஆயத்தத்தில் இறங்கி விட்டது! மூன்று நியமன உறுப்பினர்களாக பா.ஜ.க.வினர் (ஒருவர் தி.மு.க.விலிருந்தும், மற்றொருவர் காங்கிரசிலிருந்தும் விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் – மற்ற ஒருவர் தேர்தலுக்கு சில நாள் முன்னர்தான் பா.ஜ.க.வில் சேர்ந்தவர்) மூவரை நியமனம் செய்து புதுச்சேரி சட்டமன்றத்தில் பா.ஜ.க. பலத்தை 9 ஆக ஆக்கிக் கொண்டனர். இது முதல் ஆபத்து என்.ஆர். காங்கிரஸ் என்ற ஆளுமைக்கு!

அடுத்த பா.ஜ.க.வின் திட்டமும் ஏற்பாடாகி விட்டது. 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் மூவரிடமிருந்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக கடிதங்களையும் இப்போதே பெற்றுவிட்டனர். இதன்படி, புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க.வின் பலம் 6 + 3 + 3 = 12 ஆக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதால், எந்த நேரத்திலும் இந்த “கண்ணிவெடி” அந்த ஆளும் கட்சிக்கே ஆபத்தை உண்டாக்கலாம்!

உடனடியாக இது துவங்கா விட்டாலும் அடுத்த கட்ட “புதுச்சேரி பொல்திக்” இதுவாக அமைந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை! மொத்தம் 33 ஆக உள்ள புதுச்சேரி சட்டமன்றத்தில் (3 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து) எப்படி ‘வித்தைகள்’ மூலம் பா.ஜ.க. தனது பலத்தை 12 ஆக உயர்த்திக் கொண்டு, Single Largest Party – பெரும்பான்மைபலம் கொண்டதன் கட்சி பா.ஜ.க. என்ற நிலையை உண்டாக்கிக் கொண்ட வேடிக்கை – வினோதம் பார்த்தீர்களா? முதல் அமைச்சர் ரங்கசாமியைப் பற்றிய கரோனா கொடுந் தொற்றைவிட, அவரது பதவிக்குப் பேராபத்து விளைவிக்கும் பா.ஜ.க.வின் இந்த மதவெறி விஷக் கிருமிகள் புதுவை ஜனநாயகத்திற்கு மிகப் பெருந் தொற்றாக அல்லவா அமைந்துவிட்டன!

இதிலிருந்து புதுவையைக் காப்பாற்றி (அடுத்த கட்டமாக) ஜனநாயகத்தைக் காப்பாற்றிட தி.மு.க.வினால் மட்டுமே விடியலை ஏற்படுத்த முடியும்! அதற்கு சரியான தலைமை அங்கும் மதச் சார்பற்ற கூட்டணியை தமிழ்நாட்டைப் போல பல களங் கண்டு, லட்சிய ரீதியான பலத்துடன் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியாகக் கட்ட வேண்டும். புதுவை மக்கள் ஆயத்தமாக இருப்பார்கள். அங்குள்ள தலைவர்கள் – தன் முனைப்பு, சுய அதிகார ஆசைகளைப் புறந்தள்ளி, லட்சியங்களுக்கே முன்னுரிமை தந்து – மற்ற முற்போக்குக் கொள்கைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஆரோக்கிய அரசியலைக் கட்ட இப்போதிலிருந்தே ஆயத்தமாக வேண்டும்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், புதுச்சேரி பக்கமும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும். புதுவை மண் புரட்சிக் கவிஞர் போன்றவர்களைத் தந்த மண் – காவி மண்ணாகாது, ஆகவும் கூடாது! இது மிகப் பெரிய அறைகூவல் ஜனநாயகத்திற்கு! கவனம்! கவனம்!! இவ்வாறு கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக