திங்கள், 24 மே, 2021

சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து...

May be an image of Subashini Thf, standing and outdoors

Subashini Thf  : நூல் திறனாய்வு: இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும்
நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி!
முனைவர்.க.சுபாஷிணி - பகுதி 8 - இறுதிப் பகுதி
இலங்கை சிங்களவர் வரலாறு பற்றி நீண்டகாலமாகவே வட இந்திய தொடர்புகளை மட்டுமே உறுதிசெய்யும் வரலாற்றுப் பின்னணி செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் மகாவம்சம், தீபவம்சம், சூளவம்சம் ஆகிய புராணக்கதைகளை மூல பாலி மொழியிலிருந்து மொழிபெயர்த்த ஜெர்மானியரான வில்கெம் கெய்கர் மற்றும் மாக்ஸ்முல்லர் போன்றவர்களின் சிங்களவர்கள் வட இந்தியப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்ற வகையிலான கருத்தாக்கமும் ஒரு காரணம்.
இது மட்டுமன்றி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் பரணவிதான எழுதிய இலங்கை வரலாறு,
அதாவது இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மன்னன் எல்லாளனுக்கும் சிங்கள மன்னன் துட்டகாமினிக்கும் இடையில் நடைபெற்ற போர் பற்றிய செய்திகள் இன்றுள்ள தலைமுறையினர் வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது என்று கூறுகிறார் நூலாசிரியர். 

 subashini.thf சுபாஷினி த ம அ க


மேற்குறிப்பிட்ட இந்த கருத்தாக்கங்கள் இலங்கையிலேயே நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வரும் தமிழர் இலங்கைக்கு  அன்னியர் என்ற பார்வையை முன்வைத்து துட்டகாமினி தொடுத்த போர் சிங்கள மக்களுக்கான ஒரு விடுதலைப் போராட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியது.
இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் அனுராதபுரத்தில் ஆட்சி செய்தவன் தமிழ் மன்னன் எல்லாளன். இவனைப் பற்றி பௌத்த பிக்கு மகாநாமதேரர்  தனது நூலான மஹாவங்ச என்ற நூலில் விளக்கியிருந்தாலும் அதற்கு விளக்கம் கூறும் சிங்கள தேசியவாத வரலாற்றாசிரியர்கள் இதற்குத் தவறான விளக்கங்களைக் கூற முற்பட்டனர் என்பதும் இது ஒரு பக்கச் சார்பாக அமைந்துவிட்டது என்றும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
சிங்கள மொழி வளர்ச்சி பெற்ற விதத்தை நான்கு கட்டங்களாக அறிஞர்கள் பிரிக்கின்றனர்.
1. ஸ்ரீலங்கா பிராகிருதம் இது பொ.ஆ.மு. 400க்கும் முந்தியது
2. தொடக்ககால சிங்களம் பொ.ஆ 400 இல் இருந்து 700 வரை
3. இடைக்கால சிங்களம் பொ.ஆ 700 இல் இருந்து 1200 வரை
4. தற்கால சிங்களம் பொ.ஆ 1200 முதல்
இன்றைய நிலையில் இலங்கையில் ஏழு முக்கிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன.
1. சிங்களம் 2. தமிழ் 3. திவேகி (மாலத்தீவில் பேசப்படும் மொழி) 4. அரபு 5. கிரியோல -  மலேசியாவிலிருந்து வந்து சேர்ந்த மலாய் மக்கள் பேசும் பல கலப்புகள் கொண்ட ஒரு மொழி 6. போர்த்துகீசியமும் சிங்களமும் கலந்த வகையில் போர்த்துக்கீசிய வம்சாவழியினர் பேசும் ஒரு கலப்பு மொழி 7. சாமுண்டி வேடர்கள் பேசும் ரோடியா மொழி.
நூலாசிரியர் நூலில் குறிப்பிடும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் காணும் போது சிங்கள மொழியின் வளர்ச்சியைக் கீழ்காணும் வகையில் காணலாம்.
1. இலங்கை பூர்வ குடியினர் வழக்கில் இருந்த 'எளு' என்பது சிங்கள மொழியில் ஆரம்பகால மொழியாக இருந்தது.
2. புத்த மதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொ.ஆ.மு 3ம் நூற்றாண்டில் பவுத்தர்கள் வருகையால் மகதி மொழி இலங்கைக்கு வந்தது. இது பாலி மொழியாக வளர்ச்சி பெற்றது.
3. இலங்கையில் கலையும் அறிவியலும் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் சமஸ்கிருதம் அறிமுகமானது.
4. சமஸ்கிருதம் கலந்த மொழியில் இருந்த மகாயான அல்லது வைத்தூலிய பௌத்த மதப் பிரிவு இலக்கியங்கள் வழியாகவும் சமஸ்கிருதம் பரவியது. இதன் காலம் பொ.ஆ 3ம் நூற்றாண்டு.
5. அதே காலகட்டத்தில் தென்னிந்தியாவின் இன்றைய கேரள  (அன்றைய தமிழகம்) பகுதியிலிருந்து அரசியல் மாற்றங்களின் காரணத்தால் நாட்டை விட்டு வெளியேறிய பௌத்தர்களும் சமணர்களும் இலங்கைத் தீவிற்கு வந்த நிகழ்வும் நடைபெற்றது. இக்காலகட்டத்தில் சிங்களத்தில் சமஸ்கிருத பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
6. சிங்கள இலக்கிய உருவாக்கம் நடைபெற்ற காலம் பொ.ஆ. 1250.
7. சிங்கள மொழி இலக்கணமும் தொடரிலும் திராவிடம் சார்ந்திருக்கின்றன.
8. கால ஓட்டத்தில் மேலும் பல ஐரோப்பிய மொழிகளையும் உள்வாங்கிய வகையில் இக்கால சிங்கள மொழி உள்ளது
சிங்கள இலக்கியங்கள் எனக் காணும் போது அதில் பழமையானது 'சித்தத் சங்கரவா'  எனும் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இந்த நூல் இரண்டு வகையான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது.
1. எளு வரி வடிவம் ( பாலி மற்றும் சமஸ்கிருத மொழிகள் கலக்காதவை)
2. மிஸ்ர என்னும் பாலி மற்றும் சமஸ்கிருத ஒலிகள் கலந்த கலப்பு வடிவம். இந்த நூல் வீரசோழியத்தைத் தழுவி எழுதப்பட்டது. இதனை எழுதியவர் சங்கராஜா அனோமதச்சி.
இன்றைய சிங்கள மொழியின் மாற்றங்களிலும் வளர்ச்சியிலும் இலங்கையில் பௌத்த மத அறிமுகம் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது கண்கூடு.
சாதாரணமாகப் பார்த்தாலே சிங்கள மொழியின் எழுத்து வரிவடிவம் தமிழ் வட்டெழுத்து வகையில் அமைந்திருப்பதைக் காணலாம். இன்றைய மலையாள எழுத்துக்கு மிக நெருக்கமான வகையில் இந்த எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. சிங்கள மொழி உருவான சமயத்தில் பொறிக்கப்பட்ட சிகிரியா கல்வெட்டுக்களை காணும்போது அதில் பல இடங்களில் தமிழ் மலையாள சிங்கள எழுத்துக்களும் கலந்திருப்பதைக் காண்கின்றோம்.  
சிங்களப் பண்பாடு மொழி ஆகிய இரண்டுமே திராவிடமொழி மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்து அமைந்திருக்கின்றன. புராணங்களைச் சார்ந்த கருத்தாக்கங்களை விலக்கிவிட்டு, மொழியியல், மரபணு மற்றும் மானுடவியல் பார்வையில் ஆய்வுகளைச் தனிச்சார்பற்ற நிலையில் மேற்கொள்ளும்போது தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்த முடியும்.
சிங்கள வாழ்வியல் மொழி பண்பாடு என விரிவான பல்வேறு தகவல்களை வழங்கும் சிறந்த ஒரு ஆய்வு நூலாக இந்நூல் அமைகிறது. வரலாற்று ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும்.
-சுபா
புகைப்படம்: கந்தரோடை, பௌத்த சின்னங்கள், யாழ்ப்பாணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக