திங்கள், 3 மே, 2021

ஸ்டாலினுக்காக நள்ளிரவில் 'விழித்திருந்த' கலைஞர்

ஸ்டாலினுக்காக நள்ளிரவில்  'விழித்திருந்த'    கலைஞர்

 கலைஞர் மறைவுக்குப் பிறகு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 2019 minnambalm : நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றார். அதன்பின் இப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைத் தாண்டிய பலத்தோடு திமுக வெற்றி பெற்று ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்கிறது.

மே 2ஆம் தேதி இரவு தனது வெற்றிச் சான்றிதழை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் இரவு 11.55க்கு அங்கிருந்தே கலைஞர் நினைவிடத்துக்குத் திரும்பினார். ஸ்டாலினின் வெற்றிச் சான்றிதழை சேகர் பாபு பத்திரமாக எடுத்துக்கொண்டு பின் தொடர, நள்ளிரவில் கலைஞர் நினைவிடத்தை அடைந்தார்.

தேர்தல் நாளிலும், வாக்கு எண்ணிக்கை நாளிலும் கலைஞர் முற்று முழுதாக உறங்குவதில்லை. அதேபோல நேற்று இரவு நினைவிடத்தில் சிரித்துக்கொண்டிருந்த கலைஞரின் ஓவியம் முன்னே கண்ணீர் கசிய சில நிமிடங்கள் நின்றார் ஸ்டாலின். அப்போது அருகே இருந்த டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் போன்றோர் ஸ்டாலினின் உணர்ச்சிகளைக் கண்டு சிலிர்த்துப் போய் நின்றனர்.

“2016 இல் அப்பா இருந்தபோதே அவரை முதல்வராக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டோம். அப்பா மறைவின்போது முதல்வராகவே இருந்திருக்கணும். ஆனா, அப்ப அது முடியலை” என்று நேற்று தேர்தல் முடிவுகள் வரும்போதே சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார் ஸ்டாலின்.

தனது வெற்றிச் சான்றிதழை கலைஞரின் காலடியில்வைத்து வணங்கிய ஸ்டாலின் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தபோதும் இந்த ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.

“நடைபெற்று முடிந்திருக்கக் கூடிய சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கியிருக்கும் அனைவருக்கும் திமுக சார்பில் என் இதயபூர்வமான நன்றி, வணக்கம். பத்தாண்டுகளாக தமிழகம் பாதாளத்துக்குப் போயிருக்கிறது என்பதை புரிந்து, அதை சரி செய்ய திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு மிகப்பெரிய ஆதரவை மக்கள் எங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

எந்த எதிர்பார்ப்போடு, நம்பிக்கையோடு இந்தப் பொறுப்பை மக்கள் கொடுத்திருக்கிறார்களோ அதை எங்கள் ஆட்சி நிறைவேற்றித் தரும். எங்களை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞர் ஆற்றிய பணிகளை உணர்ந்து அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்கும் திமுக ஆட்சியில் கலைஞர் வழி நின்று எங்கள் கடமையை ஆற்றுவோம்.

கலைஞர் இருந்தபோதே திமுக ஆறாம் முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணியிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போனது எங்களுக்கு ஏக்கமாக இருந்தது. அது இப்போது நிறைவேறியிருப்பதால் ஓரளவுக்கு ஏக்கம் போயிருக்கிறது.

எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்த்தே பாடுபடுவோம், பணியாற்றுவோம். தேர்தல் நேரத்தில் நாங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை அவற்றை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றும் முழுமையான பணியில் எங்களை ஒப்படைத்துக்கொள்வோம்.

5 ஆண்டுக்கால தேர்தல் அறிக்கை போல பத்தாண்டுக் காலத்தை அடிப்படையாக வைத்து தொலைநோக்கான ஏழு அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம். அவற்றையும் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம்” என்றவர், மீண்டும், “கலைஞரை ஆறாவது முறையாக முதல்வர் ஆக்காததுதன் என் ஏக்கம்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக