ஞாயிறு, 23 மே, 2021

கோவையில் திமுக, இடது, விசிக எந்த பிரச்சாரமும் உருப்படியாக செய்யவில்லை.. தோல்விக்கான காரணங்கள்.

Thangaraj Gandhi  : அதிமுக வெற்றி பெற்றது 65 இடங்கள் அதில் கோவை மாவட்டம் (10/10), திருப்பூர் மாவட்டம் (5/8), ஈரோடு மாவட்டம் (5/8), சேலம் மாவட்டம் (10/11) என்று 30 அதாவது தோராயமாக பாதி இடங்களைப் பெற்றுள்ளது.  
மற்ற 35 இடங்கள் என்பது பரவலாக அமைச்சர்களின் பணபலம் (பெரும்பாலான அமைச்சர்கள் வென்றுள்ளனர்) சில இடங்களில் குறிப்பிட்ட சாதி பலம், இரட்டை இலை சின்னம், எம்ஜியார் மற்றும் அதிமுக தொண்டர் பலம் என காரணிகள் இருக்கலாம்.  
மேலே குறிப்பிட்ட 30 இடங்களில் ஆதிக்கம் வகிக்கும் கொங்கு கவுண்டர்கள் மற்றும் வன்னியர்கள் என்றால் திமுக வும் அதே அதிகம் செறிவாக உள்ள சாதியினரைத்தான் நிறுத்தியது.
அதனால் அங்கு ஆதிக்க சாதியல்லாத மற்றோர் சாதியின் தொகுப்பே இந்த வெற்றியை நிர்ணயித்து உள்ளது.  குறிப்பாக வன்னியர் மற்றும் அருந்ததியர் சாதியத் தொகுப்பு ஒரு முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்பதாக ஊகிக்க முடிகிறது.

ஏன் வன்னியர் மற்றும் அருந்ததியர் சமூகம் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தது என்பதே மிக முக்கியமான புள்ளி.  இந்த புள்ளி தரும் செய்தி கவுண்டர், நாடார், வன்னியர் மற்றும் அருந்ததியர் மத்தியில் உருவாகியிருக்கும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டையும், இந்த சாதிய சமூகத்தினர் திராவிட அரசியலுக்கு வெளியில் அல்லது திமுக, விசிக, இடது அணிகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதையுமே.  இவர்களை திராவிட அரசியல் அல்லது கருத்தியலுக்குள் கொண்டுவராவிட்டால், ஆரிய இந்துத்துவத்தின் மிகப்பெரும் தமிழக அழிவு சக்தியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.

நேற்று அப்பகுதி நண்பர் ஒருவர் மிகவும் வருத்தத்துடன் ஒரு உண்மையை பகிர்ந்தார்.  
இங்கு அதிமுக, வன்னியர், அருந்ததியர் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அளவிற்கு, திமுக, இடது, விசிக எந்த பிரச்சாரமும் நிகழ்த்தவில்லை என்பதே.  வேட்பாளர்கள் உட்பட யாருமே அந்த பகுதிக்கு வரவில்லை.  அதிமுக கூட்டணி அந்த பகுதியை தீவிரமாக பிரச்சாரம் செய்வதும், கவனத்தில் வைப்பதுமாக இருந்துள்ளனர்.  

அதுதான் இங்கு திமுக கூட்டணியின் தோல்விக்கு காரணம் என்றார்.  
தொடர்ந்து அருந்ததியர் சமூகம் திமுக மற்றும் விசிகவால் புறக்கணிக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்துகொண்டே உள்ளது. இவை எல்லாம் இந்துத்துவ கருத்தியலை அப்பகுதிக்குள் அதிமுக, பாமக வழியாக உள்ளிறக்குவதற்கு ஏதுவாக அமைகிறது.  நாடைவில் அதிமுக, பாமக மற்றும் அருந்ததியர் சார்ந்த கட்சிகள் இல்லாமல் ஒழிந்து முழுக்க இந்துத்துவ பாஜகவாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  (இடதுகளை ஒழித்து மே.வங்கத்தில் பாஜக அழுத்தமாக 77 சீட்டுகளுடன் எதிர்கட்சியாக மாறியுள்ளது என்பதை தமிழக அரசியலில் கவனம் கொள்வது நல்லது.)

பெரியார் மண் என்பதை பாதுகாக்க குறைந்தபட்சம் பெரியார் பிறந்த ஈரோட்டிலாவது இந்த பணிகளை துவங்க வேண்டும்.  அருந்ததியர் சமூக மக்களிடம் பெரிய அளவில் பணியாற்றாவிட்டால் அங்கு என்ஜிவோக்களும்,  இந்துத்துவ நாஜிகளுமே நிறைந்துவிடக்கூடிய சூழல் உள்ளது என்பதை திராவிட, இடது ஜனநாயக சக்திகள் கவனத்தில் எடுக்க வேண்டும்.  

அருந்ததிய சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை அனைத்து கட்சிகளும் தந்து அவர்களது பிரச்சனைகளை உள்வாங்கி அங்கு பணி செய்வது அவசியம்.  கொங்குமண்டல ஆளும் வர்க்கம் எப்படி அங்குள்ள ஒடுக்கபட்ட சாதிகளை கையாளுகிறது, இந்துத்துவ சக்திகள் வழியாக என்பதையும் இத்தோடு இணைத்து சிந்திப்பது அவசியம்.
தோழர் திருப்பூர் குணா அவர்களின் இந்த பதிவும் முக்கிமாக கவனத்தில் எடுக்க வேண்டிய ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக