செவ்வாய், 11 மே, 2021

கங்கை ஆற்றில் மிதந்து வரும் கொரோனா பிணங்கள்! பிகார் - உத்தர பிரதேச அவலங்கள்

 Aazhi Senthil Nathan  : கங்கைச் சமவெளி என்னும் உலகின் கடைசி அநாகரீக தேசம்...
அந்தப் புகைப்படங்களைப் பகிர விரும்பவில்லை. கங்கை ஆற்றின் கரைகளில், பிஹாரின் பக்சர் அருகே, நூற்றுக்கணக்கான பிணங்கள் ஒதுங்கியிருக்கின்றன எனச் செய்திகள் வருகின்றன.
ஒரு டஜன் சடலங்கள் ஒதுங்கி அலையும் காட்சிகள் அதிர்ச்சியாக உள்ளன.
இந்தப் பிணங்கள் அருகேயுள்ள கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதியிலிருந்து வருகின்றன என பிஹாரும், அவை பிஹாரின் பிணங்கள்தான் என உத்தரப் பிரதேசமும் அடித்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன.  கோவிட் தொற்று ஏற்பட்டு இறந்தவர்கள் நூற்றுக்கணக்கில் கங்கையில் எறியப்படுகிறார்கள் என்கிற அச்சம் இப்போது இந்தியாவை உறையச் செய்திருக்கிறது.
ஆனால், டேமேஜ் கன்ட்ரோலில் இறங்கியுள்ள மோடி மீடியா, "இல்லை இல்லை, இது வழக்கமாக நடைபெறுவதுதானே, கேட்பாரற்றச் சடலங்களை நாங்கள் இப்படித்தானே வீசுவது வழக்கம்" என்று சமாளிக்கத் தொடங்கியுள்ளன.  மனிதத்தன்மையற்று நடந்துகொள்வதுதானே நமது வழக்கம் என்கிற பதிலைக் கொண்டே சங்கிகள் நம் வாயை அடைக்கக்கூடும். இல்லையா பின்னே!


பரிதாபத்துக்குரிய வட இந்திய பாமர மக்களுக்கு இப்படித்தான் ராம ராஜ்யம் வந்துசேர்ந்திருக்கிறது. ஜீவன் கங்கையில் கரைந்தபிறகு சடலங்கள் எக்கேடு கெட்டு போனால் என்ன என்றொரு தத்துவமும் முன்வைக்கப்படலாம்.
நோய் பரவலைத் தடுக்கமுடியவில்லை, உயிரிழப்பை தடுக்கமுடியவில்லை என்பதை நாம் "புரிந்துகொள்ள முடிகிறது". தில்லியின் சுடுகாடுகள் நிரம்பி வழிந்ததற்கு பின்னாலுள்ள வரம்புகளையும் "புரிந்துகொள்ள" முடிகிறது.
ஆனால் உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் இப்படி கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆற்றில் வீசப்படுகின்றன என்பதை எப்படிப் புரிந்துகொள்வது? வாழ்வதற்கு வழியில்லாத அந்த மக்கள், மரியாதையோடு சாகவும் வழியில்லையா?  சடலங்களை ஆற்றில் விடுவது மதம் சார்ந்த நம்பிக்கை என்கிற ஒற்றை சால்ஜாப்பில் இதை கடந்துவிடமுடியாது. கடக்கிறோம் என்றால், அந்த எண்ணத்தைத்தான் முதலில் கேள்வி கேட்கவேண்டும்.
பிரச்சினை அந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்தாலும் நிலைமை மாறாமலிருப்பதுதான். இந்தி வட்டார மாநிலங்களில் மனிதர்களுக்கு மரியாதை என்பது இல்லவே இல்லை.
இதில் பாஜக ஆட்சிகள் நரகம் என்றால், முந்தைய ஆட்சிகள்  சொர்க்கம் அல்ல. உபி, மபி, பிகார் உள்ளிட்ட  மாநிலங்களில் பொதுச் சமூகம், சிவில் சமூகம், நவீனம், நிர்வாகம், ஆட்சி என்று எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் மக்களை காட்டுமிராண்டிகளாகவே (இந்த சொற்பயன்பாட்டுக்கு மன்னிக்கவும்) வைத்திருக்கிறார்கள். இதைப் பற்றி நாம் நிறைய எழுதிவிட்டோம்.
மோடி 2014 இல் இந்த மாநிலங்களில் வெற்றி பெற்றதற்கு முதன்மையான காரணம் அவர் தன்னை விகாஷ் புருஷ் (வளர்ச்சியின் நாயகன்) என்று சொல்லி மக்களை நம்பவைத்ததுதான். அதற்காகத்தான் குஜராத் மாடல் பெரிதும் ஊதிப்பெருக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு குஜராத் மாடல் என்பது தமாஷானதுதான் என்றாலும், உபி, பிஹாருக்கு அது முன்னுதாரணான மாடல்தான். அதை நம்பித்தான் மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் வந்தது விகாசம் அல்ல, விநாசம்.
உபி, பிஹாரில் பாஜக/பாஜகஆதரவு ஆட்சிகள் அடிப்படையில் எந்த வளர்ச்சியையும் செய்யவில்லை என்பதைத்தான் இந்த கொடூரமான சம்பவங்கள் காட்டுகின்றன.
ஆறு ஆண்டுகளில் மிகப்பெரிய உள்கட்டமைப்பை உருவாக்கிவிடமுடியாதுதான். ஆனால் வளர்ச்சியின் திசைவழியை உருவாக்கியிருக்கவேண்டும். (முன்பு) மகாராஷ்டிராவிலும்  குஜராத்திலும் கர்நாடகத்திலும் இமாச்சலிலும் ஆளும் பாஜகவினரால் அதை செய்யமுடிகிறதுதானே? ஏன் உபியில் முடியவில்லை? பிஹாரின் ஒரிஜினல் விகாஷ் புருஷனான நிதீஷ் குமார் ஏன் செயலற்று இருக்கிறார்?
ஏனென்றால் கங்கைச் சமவெளியின் சமூக அடித்தளமே வர்ணாசிரம தர்மத்தால் ஆளப்படுகிறது. பாமர மக்களுக்கு உழைப்பதைத் தவிர வேறு எந்த உரிமையும் கிடையாது. எனவே அவர்களுக்காக எந்த சமூக நலத்திட்டங்களும் வாழ்வாதார வளர்ச்சித் திட்டங்களும் தேவையில்லை. அவை அனாவசியம் என்பது மட்டுமல்ல, அந்த சிந்தனை வருவதற்கான வாய்ப்பே அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. கோவிட் வந்திருக்கிறதா, வெளியே சொல்லாதே என்பதுதான் யோகி அரசாங்கத்தின் கட்டளை.
அங்கேயுள்ள மேல்வர்ண மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு பல வசதிகள் உள்ளன. ஆனால் சூத்திர, பஞ்சம மக்களுக்கு ஒரு துளி வசதிகூட இருக்காது.
இந்தியாவில் வேறு எங்கும் ஏழைகள் இல்லையா, பஞ்சம-சூத்திரர்கள் இல்லையா? இருக்கிறார்கள். அங்கே அந்தப் பிரிவுகளையும் தாண்டி, அவர்கள் வளரக்கூடிய அரசியல் சூழல் பல மாநிலங்களில் நிலவுகிறது. அதனால்தான் பஞ்சாபும் தமிழ்நாடும் ஆந்திரமும் குஜராத்தும் கேரளமும் இமாச்சலப் பிரதேசமும் கர்நாடகமும் ஒரிசாவும் சமூக வளர்ச்சியில் போட்டிப்போட்டு வளர்கின்றன.
அப்படியென்றால் இந்த லாலூ, மாயவதி, முலாயம் போன்றவர்கள் எல்லாம் இருபதாண்டுகள் ஆண்டார்களே, அவர்கள் என்ன தான் செய்தார்கள் என்கிற கேள்வி எழலாம். ஆனால் உண்மையில் யாரிடமும் பதில் இல்லை. சாதிப் பிரதிநிதித்துவ அரசியல் சமூக நீதி அரசியலாக பரிணமிப்பதற்கு முன்பே வெறும் சாதி அடையாள அரசியலாக குன்றிப்போய்விட்டதா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது.
சுயமரியாதை அரசியலும் சமூக-ஜனநாயக பொருளாதார அரசியலும் உருவானதாகத் தெரியவில்லை. சாதி அடையாள அரசியல்தான் வியூகம் என்றால் அதில் இவர்களை விட அமித்ஷாதான் ஜித்தன். சோஷல் ஜஸ்டிஸா சோஷல் இஞ்சினீயரிங்கா என்றால் பாஜகதான் கில்லாடி.
அதனால்தான் எஸ்பி, பிஎஸ்பி, ஆர்ஜெடி, ஜேடியு போன்ற ஜனதா பரிவார ய பகுஜன் கட்சிகள்கூட தங்கள் மாநிலங்களை வளர்ப்பதில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்தவில்லை. அதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.
தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப் போல அங்கே தேசிய இனம் சார்ந்த ஓர்மை இல்லை என்பது மற்றுமொரு காரணம். பிஹாரிக்காவது கொஞ்சமாவது உண்டு, உபியில் அதுகூட கிடையாது. ஏனென்றால் உபி, மபி எல்லாம் செயற்கைப் பிரதேசங்கள்.
நாம் மாநிலங்கள், ஆனால் இயல்பில் தேசங்கள். அவையோ வெறும் பிரதேசங்கள். நாம் நமது மாநிலத்தை அரசியல் அலகாக நினைக்கிறோம். அவர்கள் அவற்றை வெறும் நிர்வாக அலகுகளாக நினைக்கிறார்கள்.
இந்தியாவே தங்களுக்குத்தான் சொந்தம் என நினைக்கக்கூடிய ஒரு உத்திரப் பிரதேசக்காரனுக்கு தனக்கென ஒரு தேசிய இன அடையாளம் இல்லை என்பது இதுவரை உறைக்கவில்லை.
திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை என்பது சமூக நீதி, தேசிய இன அரசியல், சமூக-ஜனநாயகப் பொருளாதாரம் சார்ந்த மக்கள்நல ஆட்சிமுறை ஆகியவற்றை பிணைத்ததுதான். (கேரளமும் பஞ்சாபும் இதை வேறுவிதங்களில் செய்தன).
ஒரு கப்பற்படையின் வேகம் அந்த கப்பல்படைத் தொகுப்பில் செல்லும் கப்பல்களிலேயே மிகவும் மெதுவாகச் செல்லும் கப்பலின் வேகத்தைப் பொறுத்ததுதான் என்று சொல்வார்கள். இந்தியாவின் வேகம் உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தது!
பேரிடரால் ஏற்படும் துயரங்களால் வரக்கூடிய சவால்களைவிட இந்தச் மனிதத்தன்மையற்ற சமூக-அரசியல் சூழலால் ஏற்படும் துயரங்கள்தான் மிகவும் வலிதருபவை. கோவிட்டால் வரக்கூடிய சமூக இடைவெளியைவிட வருணாசிரமத்தால் வரக்கூடிய சமூக இடைவெளிதான் மிகவும் ஆழமானது.
இந்த மாநிலங்கள் எதை நோக்கித்தான் செல்கின்றன என்பதை யோசிக்கும்போது திகைப்பாக இருக்கிறது. பாசிச கலாச்சாரும் மதவெறியும், இறுகிப்போன சாதி அடையாளமும் ஆணாதிக்க பிற்போக்கு கலாச்சாரமும் பின்தங்கிய உற்பத்தி முறையும் ஒரு பக்கம். ஆனால் பெரும்பான்மைவாத (இந்தி) அரசியலின் எழுச்சி என்பது மறுபக்கம்.  நினைத்தாலே தலைசுற்றுகிறது. நமது தலையெழுத்தோ இவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறது!
நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ளவாவது இந்த மாநிலங்களின் அரசியலில் தலையிட்டாக வேண்டும் என்று நினைக்கிறேன். அங்கே உள்ள முற்போக்கு, ஜனநாயக அரசியல் சக்திகளிடம் பேசவேண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக