வெள்ளி, 21 மே, 2021

போர்க்கொடி தூக்கிய மம்தா பானர்ஜி : மாநில முதல்வர்கள் மோடியின் கைப்பாவைகள் அல்ல!

BBC : இந்திய பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் அழைப்பு விடுத்த கொரோனா நிலவரம் தொடர்பான மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் தங்களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்ட செயலை கடுமையாகச் சாடியிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
“பிரதமரின் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் பிறகு ஏன் முதல்வர்களை அழைக்க வேண்டும்.
இதை மாநில முதல்வர்கள் எதிர்க்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார் மமதா பானர்ஜி.
முதல்வர்களுடனான பிரதமரின் சமீபத்திய கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில் 10 மாநில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதல்வர்கள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் மாநில முதல்வராக மமதா பானர்ஜி கலந்து கொண்டதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் அதில் பங்கேற்கவில்லை.


இதில்தான் முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார் மமதா பானர்ஜி. அந்த கூட்டத்தை, சூப்பர் ஃபிளாப் (சூப்பர் தோல்வி() மற்றும் முதல்வர்களுக்கு நேர்ந்த “அவமதிப்பு” என்று காணொளி காட்சி கூட்டம் முடிந்த பிறகு விமர்சித்துள்ளார் மமதா.

அந்த கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறுகிறார். பிறகு ஏன் நாட்டில் மரணங்கள் அதிகரிக்கின்றன? என்று மமதா கேள்வி எழுப்பினார். கொரோனா தடுப்பூசி, கருப்புப்பூஞ்சை, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கபடவில்லை என்று மமதா குறிப்பிட்டார்.

கூட்டத்தில் ஆளும் மத்திய ஆட்சிக்கு சாதகமாக பேசுபவராக கருதப்பட்ட வெகு சில ஆட்சியர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்பட்டார்கள்.

இதை தமது விமர்சனத்தின்போது சுட்டிக்காட்டிய மமதா, “இப்போதும் கூட அவர்கள் அரசியல் செய்கிறார்கள். மேற்கு வங்கத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறார்கள். பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதப்பதாக தகவல் வந்ததும் எத்தனை குழுக்களை இவர்கள் அங்கெல்லாம் அனுப்பினார்கள்? ஆனால், மேற்கு வங்கம் என வரும்போது ஒரு கவனிப்பும் கிடையாது,” என்று சாடினார்.

இதற்கு முன்பு மாநில முதல்வர்களுடன் இந்திய பிரதமர் மோதி கடந்த ஏப்ரல் மாதம் காணொளி வாயிலாக பேசினார். அப்போது அவருடன் தான் பேசிய காட்சியை நேரலையாக தமது சமூக ஊடக பக்கத்தில் ஒளிபரப்பு செய்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.

அவரது செயலை, சம்பிரதாய வழிமுறைகளுக்கு எதிரானது என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டினர்.

வியாழக்கிழமை கூட்டத்துக்கு மிக சமீபமாக, கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக இந்திய பிரதமர் பேசினார். அப்போது அவரது காட்சிகள், காணொளியில் நேரலையாக ஒளிபரப்பாயின. இதை மேற்கோள்காட்டி டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா பேசும்போது, இதே நேரலையை அரவிந்த் கேஜ்ரிவால் செய்தால், அது சம்பிரதாய வழிமுறைகளுக்கு எதிரானது என்பார்கள். இப்போது பிரதமர் பேசும் காட்சி நேரலையாக ஒளிபரப்பாகும்போது அத்தகைய வழிமுறைகள் மீறப்படவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில்தான் மமதா பானர்ஜி, மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான இந்திய பிரதமரின் வியாழக்கிழமை கூட்ட நிகழ்வில் முதல்வர்கள் அவமதிக்கப்பட்டதாகக் கூறி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமர் மாநில முதல்வர்களுடன் பேசுகிறார். அதில் முதல்வர்கள் பேச அனுமதிக்காததன் மூலம் பிரதமர் உரையை கேட்கும் கைப்பாவை போல முதல்வர்கள் ஆக்கப்பட்டுள்ளனர் என்று மமதா குற்றம்சாட்டினார். இவர்களின் சொல்பேச்சுப்படி செயல்பட நாங்கள் ஒன்றும் அடிமைகள் அல்ல என்றும் மமதா பானர்ஜி விமர்சித்தார்.

இத்தகைய சூழலில் பிரதமருக்கு மமதா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், தமது மாநிலத்துக்கு குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் கோவிட்-19 தடுப்பூசி மருந்துகள் தேவை என்று கேட்டிருக்கிறார். கொரோனா தடுப்பு முன்களப்பணியில் பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறையினரும் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் தேவை என்று அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மமதா பானர்ஜியின் இன்றைய விமர்சனத்தை பாரதிய ஜனதா கட்சியின் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்தார்.

“வழக்கமாக மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் பிரதமர் மட்டுமே பேசுவார். மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் கூட்டம் என்பதால் மரியாதை நிமித்தமாக முதல்வர்கள் அதில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். இதற்கு முன்பும் பிரதமர் மோதி பல முதல்வர்கள் உடனான சந்திப்புகளை காணொளி வாயிலாக நடத்தியுள்ளார். அதில் எல்லாம் மமதா பானர்ஜி பங்கேற்கவில்லை. ஆனால், திடீரென்று இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டு தனக்கு பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்,” என்று சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக