சனி, 1 மே, 2021

நாஞ்சில் சம்பத் :"கூவத்தூர்" கூத்தும்.. டீக்கடையும்.. ராஜதந்திரிகளா.. இவங்களுக்கு இதான் கடைசி தேர்தல்..

 தேநீர் கடை

Hemavandhana - /tamil.oneindia.com : சென்னை: "இத்தனை ஊடகங்கள் கணித்து இருக்கும் எக்ஸிட் போலை, தவறு என்று சொல்வதற்கு இவங்க எல்லாம் மிக பெரிய ராஜதந்திரிகளா?
கூவத்தூர் கூத்தில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்தவரும், டீ கடையில் வேலை பார்த்துவிட்டு, தெருவில் நின்றவர் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், இவர்களுக்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?' என்று திராவிடர் கழக பேச்சாளர் நாஞ்சில் சத்பத் கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் முடிந்த நிலையில் நாளைக்கு ரிசல்ட் வர உள்ளது.. இதுவரை வந்த கருத்து கணிப்புகளின்படி, திமுகவே மெஜாரிட்டி பெறுகிறது..
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும்,வாக்குப்பதிவு அன்று கணிப்பும், தேர்தலுக்கு பிந்தைய கணிப்பும், திமுகவே அபாரமாக வென்று ஆட்சியை அமைக்கும் என்று அறுதியிட்டு சொல்லப்பட்டுள்ளது.. ஏராளமான அரசியல் நோக்கர்களும், தேர்தல் வல்லுநர்களும்கூட இதையேதான் சொன்னார்கள்..

அதாவது 170 இடங்களுக்கு குறையாமல் திமுக வெற்றி பெறும் என்றார்கள்.. அதேபோல, அதிமுகவோ 60ஐ தாண்டாது என்று கூறியுள்ளார்கள். இத்தகை எக்ஸிட் போல்கள் அதிமுக தலைமைக்கு பெருத்த ஷாக்காக இருந்தது.. இதன்மூலம் அதிமுக தொண்டர்கள் சோர்வடைய கூடாது என்பதற்காகவே நேற்றைய தினம் அதிமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இரட்டை இலையே என்றென்றும் வெல்லும். கடமைகள் அழைக்கின்றன; கண்மணிகளே வெற்றி மாலை சூடத் தயாராகுங்கள். வரலாறு வியக்கும் வகையில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்"... என்று கூறியிருந்தது. இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து, திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நக்கீரன் இதழ் ஒரு பேட்டி எடுத்துள்ளது. அந்த பேட்டி இதுதான்.

கேள்வி: கருத்துக் கணிப்புகள் சொல்லும் முடிவையே மே 2ஆம் தேதி எதிர்பார்க்க முடியுமா?



"நேற்று இந்தியாவின் புகழ் பெற்ற ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டதில், தமிழ்நாட்டில் திமுக அதித பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று வந்திருக்கும் செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. ஒரு நான்காண்டு காலமாக, திமுகவிற்கு ஆதரவாக நாடெல்லாம் பேசிய நான், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எனும் குருக்ஷேத்திர யுத்தத்திலும், ஸ்டாலின் முதல்வராக வேண்டியது காலத்தின் கட்டாயம் என உரை முழக்கம் செய்த நான், இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தும், கேட்டும் பரவசம் அடைந்திருக்கிறேன்.

அதிலும் இந்து குழுமத்தின் தலைவர் இந்து என். ராம், 200 தொகுதி வரைக்கும் வெற்றி பெறும் என்று சொன்னதுதான் சரியான கருத்துக் கணிப்பு என நம்புகிறேன். நாடு சுற்றிவந்தத்தில் நான் கணித்ததும், கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும். எதிர் கட்சி அந்தஸ்தை அதிமுக இழக்கும். 20 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் கட்சி பெற்றால் தமிழகத்தில் எதிர்க் கட்சி அந்தஸ்த்தை பெறும் வாய்ப்பும் காங்கிரஸுக்கு இருக்கிறது அதனை அலட்சியப்படுத்திவிட முடியாது.

ஆனால் இன்றைக்கு அஸ்தமனத்தை நோக்கி, அழிவின் விளிம்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும், இந்தக் கருத்துக் கணிப்புகளை எல்லாம் நம்பவேண்டாம் நாம் ஆட்சி அமைக்க போகிறோம் என இன்று அறிக்கை விட்டிருப்பது, ஏதோ இன்றோ நாளையோ ஆபத்தான் விளையாட்டை விளையாடுவதற்கு ஒத்திகை பார்க்கிறார்களா எனும் சந்தேகம் எனக்கு வருகிறது.

எனவே திமுகவினர் இன்றும் நாளையும் மிகுந்த விழிப்புணர்வோடு இருந்து, வாக்கு பெட்டிகளை கண்காணித்து வாக்கு எண்ணி முடிகிறவரை.. அறுவடை செய்த நெல் வீட்டுக்கு வந்து சேருகிற வரை, உழைக்கின்ற உழவன் எப்படி, கண்காணிப்போடும், கரிசனத்தோடும் இருப்பானோ அதுபோல் இருக்க வேண்டும். அழிந்துகொண்டிருக்கின்ற கட்சியை தற்காத்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரண்டு நாட்களுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள வழிதெரியாமல், விட்டிருக்கும் அறிக்கை கேலிகூத்தானது.

இத்தனை ஊடகங்கள் கணித்து இருக்கும் கணிப்பை தவறு எனச் சொல்வதற்கு இவர்கள் என்ன மிக பெரிய ராஜதந்திரிகளா? கூவத்தூர் கூத்தில் கோபுரத்தில் ஏறி உட்கார்ந்தவரும், தேநீர்க் கடையில் வேலை பார்த்துவிட்டு, தெருவில் நின்றவர் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், இவர்களுக்கும் அரசியலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

அடிமையாகவே இருந்து சுகம் கண்டுபோன இந்த அடிமைக் கூட்டம், மீண்டும் அதிகாரத்திற்கு வரமுடியும் என்று தொண்டர்களை ஏமாற்றுகிறார்கள். தொண்டர்கள் இவர்களை ஏமாற்றும் நாள் வரும். தொண்டர்கள் இவர்களை கேள்வி கேட்கும் சூழல் வரும். தமிழ்நாட்டில் திருப்பங்கள் ஸ்டாலின் தலைமையில், ஆட்சி அமைந்ததும் அதற்கு பிறகு நடக்கவிருப்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன்.

கேள்வி: அதிமுக அறிக்கையில் வாக்கு எண்ணும் மையங்களில் தில்லுமுல்லு நடக்கிறதா என்பதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்கிறார்களே..?

அணைய போகின்ற விளக்கின் பிரகாசமும், இறக்க போகின்ற நாயின் ஆரவார கூச்சலையும் அலட்சியப்படுத்த வேண்டியதுதான் நமது கடமை என்பதை நினைவூட்டுகிறேன். இந்தியாவில் ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளில் கணித்தது தப்பவில்லை என்ற அளவிற்கு, இந்த கணிப்பை வெளியிட்டுள்ளன. இவர்கள் எந்த எஜமானர்களை நம்பினார்களோ அந்த எஜமானர்களே செல்லா காசாக போகிறார்கள் என்பது இந்தத் தேர்தல் முடிவு சொல்லப் போகிறது. வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றை மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பெற இருக்கிறார்.

திருணாமுல் காங்கிரஸ் கட்சியை திசைக்கு ஒன்றாக சிதறடித்து, முக்கிய நிர்வாகிகளை எல்லாம் விலைகொடுத்து வாங்கி, எப்படியும் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்துவிடமுடியும் என கரோனா காலத்தில் மக்களை பற்றி கவலைப்படாமல், மே.வங்கத்தில் பிரச்சாரம் என்ற பெயரில், மம்தா பானர்ஜிக்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்கு, அவர்கள் கல்லறைக்கு போகப்போகிறார்கள்; மம்தா பானர்ஜி மீண்டும் முடி சூட்ட போகிறார் என்று செய்தி வந்துகொண்டிருக்கின்றது. பி.ஜே.பி. இல்லாத ஆட்சியை இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் தரவிருக்கும் இந்த சூழலில், தங்கள் அரசியல் வாழ்வுக்கே ஆபத்து வந்துவிட்டது, எஜமானர்களின் நிலையே கவலைக்கிடமாக ஆகிவிட்ட கவலையில், இன்றைக்கு அவர்கள் புலம்புகிறார்கள்.

கேள்வி: நேற்று வந்தவை கருத்துக் கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பு; பல கட்டங்களில் கருத்துக் கணிப்புகளை அதிமுக தவிடுபொடியாக்கி இமாலய வெற்றியை பெற்றிருக்கிறது என அமைச்சர் ஜெயகுமார் சொல்லிருக்கிறாரே?

ஜெயக்குமாரின் கடைசி பேட்டியாக அது இருக்கும். ஜெயக்குமாருக்கு இனி ஊடகங்களில் பேட்டிக் கொடுக்கும் வாய்ப்புகூட கிடைக்காமல் போகிற சூழல் தான் அரசியலில் வரப்போகிறது. அந்தக் கட்சியை இன்றைக்குத் தனதாக்கிக்கொண்டு, தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அனைவரும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதிமுகவிலேயே மிக பெரிய ரசாயன மாற்றங்கள் நடக்கும். அதிலேயே முதலில் ஓரம் கட்டப்படுபவராக ஜெயக்குமாராக இருப்பார்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக