ஞாயிறு, 23 மே, 2021

நீட் தேவை இல்லை! அமைச்சர் பொன்முடி கோரிக்கை! பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் மட்டுமே இறுதி சேர்க்கை

மாணவர்கள் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் மட்டுமே இறுதி சேர்க்கை நடைபெறவேண்டும் இதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை ..

 மாலைமலர் : சென்னை,  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்தியது. காணொளி வாயிலாக  நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார்.
மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி மந்திரிகள், கல்வித்துறைச் செயலாளர்கள், மாநில கல்வி வாரிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனைகள் மற்றும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழகம் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.


இக்கூட்டத்திற்கு பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு. 

மாணவர்கள் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு இறுதி தேர்வு அடிப்படையில் மட்டுமே இறுதி சேர்க்கை நடைபெறவேண்டும் இதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை ..

அதை இன்றைய கூட்டத்தில் தெரிவித்தோம். இருந்தாலும் மருத்துவ படிப்புகளில் மத்திய அரசின் ஒதுக்கீடுகளுக்கு வேண்டுமானால் தேசிய அளவிலான நீட் தேர்வை நடத்திக்கொள்ளுங்கள்,


மேலும், புதிய கல்விக் கொள்கை வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்தும் கூட்டம் தொடங்கும்போதே பேசினோம். புதிய கல்விக்கொள்கையை தமிழகம் ஏற்காது என்ற கருத்தை அழுத்தம் திருத்தமாக கூறினோம். ஆனால், இதற்கு மத்திய அமைச்சர்கள் குழு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.     இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக