திங்கள், 17 மே, 2021

அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய மம்தா உத்தரவு!

minnambalam : மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில், பாஜகவுடனான கடும் மோதலில் மாபெரும் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி மே 5ஆம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற 12 ஆவது நாளிலேயே அம்மாநிலத்தின் அமைச்சர்களும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் இன்று காலை சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது கைதை எதிர்த்து மாநில முதல்வரான மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் பிரச்சினை இப்போது தேசிய அளவில் பரபரப்பாகியிருக்கிறது.

நாரதா ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தின் அடிப்படையில்... அம்மாநில அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுபத்ரா முகர்ஜி ஆகியோரையும் திரிணமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மதன் மித்ரா வையும் கொல்கத்தாவில் உள்ள அவரவர் வீடுகளுக்கு சென்று கைது செய்தது. மேலும் முன்னாள் கொல்கத்தா மேயர் சோவன்சாட்டர்ஜியும் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். இவர்களில் சோவன் சாட்டர்ஜி ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். ஆனால் பாஜகவில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சீட்டு மறுக்கப்பட்டதால், பாஜகவில் இருந்து விலகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கைது பற்றி சிபிஐ வெளியிட்ட அறிக்கையில்....

“நாரதா ஸ்டிங் நடவடிக்கை தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் (டி.எம்.சி) அமைச்சர்கள் ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ மதன் மித்ரா மற்றும் கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை மத்திய புலனாய்வுத் துறை திங்கள்கிழமை கைது செய்தது.

இந்த வழக்கு பொதுவாக நாரதா ஸ்டிங் ஆபரேஷன் என்று அழைக்கப்படும் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுடன் தொடர்புடையது, இதில் மேற்கண்ட பொது ஊழியர்கள் ஸ்டிங் ஆபரேட்டரிடமிருந்து சட்டவிரோதமாக லஞ்சம் பெறும்போது சிக்கினார்கள்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ ஏப்ரல் 16, 2017 அன்று ஒரு உடனடி வழக்கை பதிவு செய்தது.

விசாரணை முடிந்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 2021 மே 7 அன்று மேற்கு வங்க ஆளுநரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. இதன் அடிப்படையில் அவர்கள் இன்று (மே 17) காலை கைது செய்யப்பட்டனர்.

அமைச்சர்கள் ஃபிரத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகியோர் தலா ரூ .5 லட்சம் லஞ்சம் வாங்கியதை ஏற்றுக் கொண்டனர். மேற்சொன்ன நபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை இன்று சமர்ப்பிக்கப்படுகிறது”என்று சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 11 மணிக்கு தனது காரில் கொல்கத்தாவில் இருக்கும் சிபிஐ அலுவலகம் நோக்கி விரைந்தார். மாநில முதல்வரே அங்கு செல்கிறார் என்று தகவல் தெரிந்தவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் சிபிஐ அலுவலகத்துக்கு முன் குவிந்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய பாஜக அரசு சிபிஐ வைத்து கைது செய்திருக்கிறது என்று அங்கே கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

சிபிஐ அலுவலகம் சென்ற மாநில முதல்வர் மம்தா பானர்ஜி...."மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்வதற்கு மாநில சட்டமன்ற சபாநாயகர் அனுமதி தேவை என்பது சட்டம். ஆனால் அதையெல்லாம் பெறாமல் ஆளுநரிடம் இருந்து அனுமதி பெற்றோம் என்று சொல்லி அமைச்சர்களை கைது செய்து இருக்கிறீர்கள். அப்படி என்றால் என்னையும் கைது செய்யுங்கள்" என்று சிபிஐ அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சிபிஐ அதிகாரிகளோ கைது செய்யப்பட்ட நால்வரையும் பகல் 11.30 மணிக்கு பேங்க்‌ஷால் நீதிமன்றத்துக்கு சென்று அந்த நால்வர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகளில் இறங்கினர்.

இதேநேரம் சிபிஐ அலுவலகத்திற்கு முன்னால் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சிபிஐ அலுவலகத்திற்குள் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் கற்கள் வீசப்பட்டன.

அங்கே நடப்பதை அறிந்துகொண்ட மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தங்கர், " கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தில் கற்கள் வீசப்படுகின்றன. அங்கே நடக்கும் சட்டமீறல்களை மேற்கு வங்காள போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உடனடியாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

மம்தா பானர்ஜி அரசியல் அமைப்பு சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும்" என்று கடுமையாக இன்று பிற்பகல் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.45மணிக்கு, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தா போலீஸ் கமிஷனருக்கு எழுதப்பட்ட கடிதத்தில்..." மேற்கு வங்காள மாநில அமைச்சர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . சிபிஐ பாஜகவின் மாநில ஆளுநரின் கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது”என்று கூறப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி எழுதிய கடிதம் என்பதால் கிட்டத்தட்ட அது அரசு எழுதும் கடிதம்தான். இதையடுத்து மேற்கு வங்காளத்தில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற சூழல் எழுந்துள்ளது. சிபிஐ அதிகாரிகள் ஒரு வேளை கைது செய்யப்பட்டால் அது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான யுத்தமாக வெடிக்கக் கூடும்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக