ஞாயிறு, 16 மே, 2021

கவிஞர் நா முத்துக்குமார் இயற்கை வைத்தியத்தால் இறந்தாரா? உண்மை என்ன?

May be an image of 2 people and beard

மீண்டெழுந்து மரணத்தை தழுவிய நா. முத்துக்குமார்- கடைசி நிமிடங்கள் குறித்து நக்கீரன் கோபால் உருக்கம்  
Mathi - /tamil.oneindia.com :  சென்னை: அண்மையில் மறைந்த கவிஞர் நா. முத்துக்குமாரின் கடைசி நிமிடங்கள் குறித்து நக்கீரன் ஆசிரியர் கோபால் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
தம்பி நா. முத்துக்குமாரின் இழப்பு, மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்முன் ஒரு வானவில்லாய் ஜாலம் காட்டிவிட்டு, எதிர்பாராத ஒரு ஒற்றைநொடியில் மின்னல்போல் மறைந்துவிட்டார் முத்துக்குமார்.
அவரை நான் நீண்டகாலமாகப் பார்த்தும், பழகியும், ஒரு சகோதரனாய் அன்புசெலுத்தியும் வந்திருக்கிறேன்.
ஒரு சாமான்ய நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அந்தத் தம்பி, கடும் உழைப்பால் படிப்படியாக முன்னேறி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக்கொண்டவர்.
அவரது பாடல்கள் ஒவ்வொரு நொடியிலும் காற்றுவெளி எங்கும் இழைந்துகொண்டே இருக்கிறது. திரைப்பாடல்கள் மூலம் அவர் எட்டாத உயரத்தை அடைந்தபோதும், தன் தலைமீது கர்வம் ஏற அவர் அனுமதித்ததே இல்லை.


தன்னடக்கக் கோட்டினை அவர் தாண்டவே இல்லை.
அவரது அந்த எளிமைதான் என்னை மிகவும் கவர்ந்தது.
திரைத்துறைக்குள் நுழைவதற்கு முன்பே, "இனிய உதய'த்திலும், "சிறுகதைக் கதிரி'லும் தன் பங்களிப்பைச் செலுத்தி, எங்களோடு பயணித்தவர் நா. முத்துக்குமார். திரைப்படப் பாடல்களால் அவர் புகழ்பெற்று வந்ததை சற்று தள்ளிநின்றே ரசித்தவன் நான்.
படைப்பு மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அவரது எந்தத் திரையுலக முயற்சியிலும், நான் கைகோர்த்துக் கொண்டதில்லை.
அதேசமயம், அவரது திருமண நிகழ்வு உள்ளிட்ட அவர் குடும்பம் சார்ந்த அத்தனை நல்லது கெட்டதுகளிலும், ஒரு மூத்த சகோதரனாய் நான் உரிமையோடு பங்கெடுத்திருக்கிறேன்.
தம்பி நா. முத்துக்குமாரை, நான் படைப்புகள் சார்ந்து கவனம் வைத்துப் பாராட்டத் தொடங்கியது அண்மைக் காலமாகத்தான்.
ஒரு நாள் அவரெழுதிய பாடல் ஒன்றை நான் கேட்டேன். அது, இயக்குனர் வசந்தபாலனின் "வெயில்'' படத்தில் இடம்பெற்ற பாடல். "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே'
என்று தொடங்கிய அந்தப் பாடலின் வரிகளில் நான் மிகவும் மகிழ்ந்துபோனேன். அந்தப் பாடல் என்னை, வெய்யிலில் ஆடிப்பாடி விளையாடித் திரிந்த எங்கள் கிராமத்தின் பால்ய காலத்துக்கே இழுத்துப்போனது.
மணிப்பூரில் என் மூத்தமகள் பிரபாவதி, படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஒருமுறை வந்திருந்தார். இரவு 10.30 மணி இருக்கும்...
அவர் என்னை அழைத்து, ""அப்பா, முத்துக்குமார் மாமா டைரக்டர் ராம் இயக்கிய "தங்க மீன்கள்' படத்தில் ஒரு பாட்டு எழுதியிருக்காங்க. ரொம்பவும் அருமையான பாட்டுப்பா. கேட்டுப் பாருங்கப்பா'' என்று மனம்பூரித்துச் சொன்னதோடு, அந்தப் பாடலை நான் கேட்கும்படி செய்தார்.
 "ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்! அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!'

என, அப்பா- மகளுக்கிடை யிலான உறவுநிலையின் உன்னதத் தைச் சொன்ன அந்தப் பாடலைக் கேட்டு நெகிழ்ந்துபோனேன். அந்தப் பாட்டின் ஒவ்வொரு வரியிலும் அப்பா- மகள் உறவைக் கொண்டாடி யிருப்பார் முத்துக்குமார். மகிழ்ந்துபோன நான், அந்த இரவிலேயே தம்பி முத்துக்குமாரை போனில் அழைத்து, "தம்பி, இந்தப் பாட்டுக்கு உங்களுக்கு தேசியவிருது இருக்கு. குறிச்சி வச்சிக்கங்க தம்பி''' என்றேன். தூக்கம் கலைந்த அவர் நெகிழ்ச்சியாக, ""நன்றிண்ணே'' என்றார். நான் சொன்னதுபோலவே அந்தப் பாடலுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வந்த அடுத்த நிமிடமே என்னைத் தொடர்புகொண்டு, '""உங்க வாக்கு பலிச்சிடுச்சிங்கண்ணே... நன்றிங் கண்ணே'' என்று தழுதழுத்தார் முத்துக்குமார். அவருக்கு அந்தப் பாடல் கூடுதல் நெகிழ்ச்சியைக் கொடுத்த பாடல். அதற்குக் காரணம், அவருக்குப் பிறந்த ஆனந்த யாழ்.

முத்துக்குமார் குடும்பத்தில் பெண் குழந்தைகள் யாரும் இல்லை. அந்த ஏக்கம் அவரது அப்பாவுக்கு இருந்தது. அதே ஏக்கம் தம்பி முத்துக் குமாருக்கும் இருந்தது. இந்த நிலையில்தான் இரண்டாம் பிரசவத்துக்காக முத்துக்குமாரின் மனைவி ஜீவலட்சுமி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். அவருக்கு சிசேரியன் பிரசவம் நடந்தபோது, முத்துக்குமார் அருகில் இல்லை. பிரசவம் பார்த்த டாக்டர் தமிழ்ச்செல்வி, முத்துக் குமாரின் கல்லூரிப் பேராசிரியர் மா.கி. தசரதன் அவர்களின் மகளாவார். பிரசவத்திற்குப் பின், அரைகுறை மயக்கத்தில் இருந்த ஜீவலட்சுமியிடம் டாக்டர் தமிழ்ச்செல்வி, '""ஜீவா, உனக்கு ஆனந்தயாழ் பிறந்திருக்கிறது'' என்று, பெண்மகவு பிறந்திருப்பதைச் சொன்னார்.

இதை முத்துக்குமாருக்கு போன்மூலம் தெரிவித்த ஜீவலட்சுமி, ""நமக்கு ஆனந்தயாழ் பிறந்திருப்பதாக டாக்டர் சொன்னாங்க'' என்று சொல்ல, தான் எழுதிய ஆனந்தயாழ், தனது மகளுக்கே குறியீட்டுப் பெயராக மாறிவிட்டதை எண்ணி மிகவும் நெகிழ்ந்து பூரித்துப்போனார். தனக்கு மகள் பிறந்த செய்தியை என்னிடம் ஏகப்பட்ட சந்தோசத்தோடு அவர் சொன்னவுடன், நானும் என் துணைவியாரும் மருத்துவமனைக்குப் போய்ப் பார்த்தோம்.

'உலகை ஆளவந்த எங்கள் குட்டி இளவரசிக்கு' என்று, ஒரு வாழ்த்து அட்டையையும் எழுதிக் கொடுத்து வாழ்த்தினோம். அப்போது தம்பி முத்துகுமாரிடம்.... ""பொம்பளைப் பிள்ளை வேற பொறந்துடுச்சி. இனி நீங்க ரொம்பவும் கவனமா இருக்கனும் தம்பி. நீங்க போகவேண்டிய தூரம் இன்னும் இருக்கு. உடம்பைப் பத்திரமாப் பார்த்துக்கங்க'' என்று அறிவுறுத்தியதோடு, சில உறுதிமொழிகளையும் அவரிடம் வாங்கினேன்.

அவர் தவமாய்த் தவமிருந்து பெற்ற ஆனந்தயாழ் மீது, அவர் நெஞ்சுகொள்ளாப் பேரன்பு கொண்டிருந்தார். எனவேதான் தனது ஆனந்த யாழ் பாடலுக்கு தேசியவிருது என்றதும், அவருக்குப் பன்மடங்கு பூரிப்பு உண்டானது. இதேபோல், "சைவம்' படத்திற்காக தம்பி முத்துக்குமார் எழுதிய '"அழகே அழகே...' என்ற பாடலை நான் கேட்க நேர்ந்தது. '"அழகே அழகே எதுவும் அழகே அன்பின் விழியில் எல்லாம் அழகே...''

என்று தொடங்கி... "மழை மட்டுமா அழகு... சுடும் வெயில் கூட ஒரு அழகு'' என்று அபாரமாக எழுதியிருந்தார்.
இதைக்கேட்டதும் ஒரு குபீர் உற்சாகம் ஏற்பட்டது. உடனே முத்துக்குமாரைத் தொடர்பு கொண்டு... '""சுட்டெரிக்கும் வெய்யிலையும் அழகுன்னு சொன்ன ஒரே கவிஞர் உலகத்திலேயே நீங்களாத்தான் இருக்கும். இந்தப் பாட்டுக்கும் ஒரு தேசியவிருது இருக்கு தம்பி''' என்று வாழ்த்தினேன். இதுவும் பலித்தது. இதற்கும் பூரிப்போடு நன்றிசொன்னார் முத்துக்குமார்.

தேசியவிருது பற்றிய முத்துக்குமார் குறித்தான என் நம்பிக்கைகள் எல்லாம் முழுதாகப் பலித்துவிட்டது. ஆனால், இன்னும் நீண்டகாலம் இருந்து, முத்துக்குமார் சாதிப்பார் என்று நான் கண்ட கனவு மட்டும் பொய்த்துப்போய்விட்டது. நடந்தது எல்லாம் ஒரு கனவுபோல் இருக்கிறது.

ஜூலை 12. இதுதான் முத்துக்குமாரின் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளன்றும் அவர் என்னைத் தேடிவந்து வாழ்த்து பெற்றுச்செல்வார். இந்த ஜூலை 12-ல் அவர் வரவில்லை. உடனே அவரைத் தொடர்பு கொண்டு, ""தம்பி, எங்கே உங்களைக் காணோம்'' என்றேன்.

"உடம்பு சரியில்லைண்ணே'' என்றார். ""உடம்புக்கு என்ன'' என்றேன். ""டைபாய்டு'' என்றார். பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, '""உடம்பைப் பார்த்துக்கங்க தம்பி''' என்று வழக்கம்போல் அறிவு றுத்தினேன். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி (5-8-2016) இரவு ஒரு நம்பரில் இருந்து எனக்குத் தொடர்ந்து ஆறேழு மிஸ்டுகால் வந்தது. பொதுவாக எனக்குத் தெரியாத புதிய எண்கள் என்றால் நான் எடுக்க யோசிப்பேன். அதனால் அந்த அழைப்பை நான் ஏற்கவில்லை. அடுத்து, அந்த எண்ணிலிருந்து.. "நான் நா. முத்துக்குமார் மனைவி'' என்று குறுந்தகவல் வந்தது. வழக்கமாக முத்துக்குமார்தானே போன் பண்ணு வார். அவர் ஏன் பண்ணவில்லை என்று திகைத்த நான், உடனே அந்த எண்ணுக்குப்போய், ""எங்கம்மா முத்துக்குமார்? அவருக்கு என்னம்மா?'' என்றேன்.

ஜீவலட்சுமியோ உடைந்த குரலில்...'""அவங்க ஆபத்தான கட்டத்துல இருக்காங்க. டாக்டருங்க அவங்க உயிருக்கு ஆபத்துன்னு சொல்றாங்க. மஞ்சள் காமாலை முத்திப்போச்சாம். ஏதோ ரத்தத்தில் பில்ரூபினாமே... அது 23 அளவுக்கு இருக்காம். கல்லீரல் ஒரு பர்சன்ட்தான் வேலைசெய்யுதாம். எனக்கு பயமா இருக்குண்ணே!'' என்றார். பதறிப்போன நான், ""தம்பி இப்ப எங்கே?'' என்றேன். ""அப்பல்லோவில் அட்மிட் பண்ணியிருக்கோம். கல்லீரலை மாத்தணும்ன்னு சொல்றாங்கண்ணே. அவங்களுக்கு வேற ஒருத்தர் கல்லீரலை எடுத்து வைக்கனுமாம்'' என்றார் அழுகையோடு. ""லிவர் சிரோஸியஸ்னு சொன்னாங்களா?'' என்றேன். ""ஆமாண்ணே'' என்றார். ""அவருக்கு கல்லீரலை டொனேட் பண்ணப்போறது யார்?'' என்றேன்

"நாந்தாண்ணே. என் கல்லீரலை எடுத்து வைக்கச் சொல்லிட்டேன். சரின்னு டெஸ்ட்டெல்லாம் பண்ணிட்டாங்க'' என்றார். நான் மேலும் திகைத்தேன். '""ஏம்மா, உனக்குக் குழந்தை பிறந்தே 5 மாசம்தானே ஆகுது. தாய்ப்பாலையே அது மறந்திருக்காது. சிசேரியன் வேற பண்ணியிருக்கே. டோட்டலா பார்த்தா நீயோ பாதி நோயாளி. அப்படியிருக்க நீ எப்படி லிவர் டொ னேட் பண்ணமுடியும்?. தம்பி ரமேஷ் எங்க இருக்கார்? அவர்ட்டயும் நான் பேசணும். வேற டோனரைப் பார்க் கலாம். நான் காலைல அப்பல்லோ வர்றேன்'' என்றேன்.

"அண்ணே, அவங்க அட்மிட் ஆன விசயத்தை நான்தான் சொன்னேன்னு அவங்ககிட்ட சொல்லிடாதீங்கண்ணே. தனக்கு உடம்பு சரியில்லாத விசயமே யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்றாங்க. அவங்க தம்பி ரமேஷும் என் அண்ணன் பிரசாத்தும்தான், இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்க. என்ன பண்றதுன்னே தெரியலை'' என்றார் தேம்பலோடு. மறுநாள் காலை அப்பல்லோ சென்றேன். ஐ.சி.யூ.வில் இருந்த முத்துக்குமாரைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திகைத்தார். '""அண்ணே, யாரு உங்களுக்கு நான் இங்க இருக்கேன்னு சொன்னது?'' என்றார்.

நானோ, ' ""டி.வி.எஸ். பிரேக்ஸ் இன்டியாவில் சீனியர் மெடிக்கல் ஆபீஸராக இருக்கும் என் மைத்துனர் டாக்டர் ராஜாராம், இங்கே ஐ.சி.யூ.வுக்கு வந்திருக்கார். அப்பதான், நீங்க அட்மிட் ஆகியிருப்பதை அவர்ட்ட சொல்லியிருக்காங்க. அவர் என் துணைவியாரிடம் இதைச் சொல்ல, அவர் மூலம்தான் தம்பி எனக்குத் தகவல்''' என்றேன். ""பயப்படத் தேவையில்லண்ணே. எனக்கு சரியா யிடும்ண்ணே. எனக்கு ஜீவாதான் லிவர் கொடுக்குது. 15 நாள்ல கல்லீரல் மாற்று ஆபரேசன் பண்ணிடலாம்ன்னு டாக்டர்கள் சொல்லியிருக்காங்கண்ணே. 45 லட்ச ரூபா வரை செலவாகுமாம்'' என்றார் அப்போதும் நம்பிக்கையாய்.

""பணப் பிரச்சினை இருக்கா தம்பி?'' என்றேன். ""இல்லைண்ணே... வந்தவாசியில் இரண்டு இடம் வாங்கிப் போட்டிருக்கேன். 25 லட்சரூபா வரை போகும். அதை என் நண்பர் ஒருத்தர் வாங்கிக்கிறேன்னு சொல்லியிருக்கார். ஜீவா நகைகள்ல ஒரு 10 லட்சரூபா தேறும். தம்பி, ரமேஷ் கூட, இப்ப ஒன்றரை லட்ச ரூபா எடுத்துக்கிட்டு வர்றேன்னு சொல்லியிருக்கான். மேற்கொண்டு ஆவன ரமேஷ் புரட்டிவிடுவான். பார்த்துக்கலாம்ண்ணே. ஆபரேசனுக்கு பணத்தை ரெடி பண்ணவும், ஆபரேசனைத் தாங்கற அளவுக்கு உடம்பைக் கொஞ்சம் தேத்தவும், ஒருவாரம் வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்ன்னு இருக்கேண்ணேன். இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகறேன்''' என்றார்.
இந்த நிலையில், அவர் நேராக வீட்டுக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை. அவரது மைத்துனர் பிரசாத், தம்பி ரமேஷ், முத்துக்குமாரின் தாய்மாமா மகன் பரணி மற்றும் அவர் மனைவி ஜீவா ஆகியோருடன் ஆலோசித்தேன்.

மோசமான மஞ்சள்காமாலை நோயாளிகள்கூட, அடையாறு தர்மா கிளினிக்கில் மாற்று மருத்துவம் மூலம் குணமடைந்ததைச் சொல்லி, அவரிடம் ஆலோசனை பெறலாமா? என்று கேட்டேன். எல்லோருக்கும் அது உடன்பாடாக இருந்தது.
இதைத்தொடர்ந்து 6-ந் தேதியான அன்று, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குக் கிளம்பிய முத்துக்குமாரை, கைத்தாங் கலாகக் காரில் ஏற்றி, நேராக அந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். லிவர் தொடர்பான மருத்து, மாத்திரைகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. உணவுக் கட்டுப்பாடு பற்றியும் சொன்னார்கள்.
மருந்து மாத்திரை களை வாங்கிக்கொண்டு முத்துக்குமார் வீட்டுக்குச் சென்றார். அந்த மருத்துவம் முத்துக்குமாருக்கு விரைவாக வேலைசெய்தது. முத்துக்குமாரின் உடல்நிலையை அருகிலிருந்து கவனிக்க, செவிலியர் ஒருவரும் அமர்த்தப்பட்டார். முத்துக்குமார் எடுத்துக்கொண்ட மருந்துகளால், அவருக்குப் பசி எடுத்தது. ""இப்போது தான் எனக்கு நாக்கில் ருசியே தெரியுது'' என்றார் முத்துக்குமார்.

வயிற்றின் வீக்கமும், கால்களின் வீக்கமும் வெகு வாகக் குறையத் தொடங்கியது. மோசனும் சிறுநீரும் அவருக்கு இயல்பானது. பாத்ரூமுக்குத் தானாக எழுந்துபோகிற நிலைக்கு வந்துவிட்டார் முத்துக்குமார். தம்பி, கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார் என்று நானும், முத்துக்குமரின் தம்பி ரமேஷும், மாப்பிள்ளை பரணியும், மைத்துனர் பிரசாத்தும் மகிழ்ந்தோம். அவர் குடும்பமும் மகிழ்ந்தது. உடல்நிலை கொஞ்சம் தேறத்தொடங்கியதும், வழக்கம்போல் தன் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் முத்துக்குமார்.

தொடர்ந்து புத்தகம் படித்திருக்கிறார். டைரக்டர் விஜய் படத்துக்கு பாடல் எழுத, அதற்கான பின்னணிக் கதையைக் கேட்டிருக்கிறார். வி. சேகரின் படத்துக்கும் பாட்டு எழுதியிருக்கிறார். கடைசியாக, சிறுத்தைகள் திருமாவளவனின் பிறந்த நாளைக்கு வாழ்த்துக் கவிதை கேட்டார்கள் என்று, கவிதையும் எழுதியிருக்கிறார். 13-ந் தேதி காலை டைரக்டர் ராமுக்கு போன் செய்து, "என் மனசுக்குள் பாடல் தயாராகி விட்டது. போனிலேயே சொல்லுகிறேன் .எழுதிக்கொள்' என்றும் பேசியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் எல்லாம் எனக்குத் தெரிந்ததும், '""தம்பி, கொஞ்ச நாளைக்கு எழுதுவதையும் படிப்பதையும் நிறுத்துங்க. முழுசா ஓய்வெடுங்க'' என்றேன் கறார் குரலில்.
அவரோ, '""வர்ற வாய்ப்பை விட்றக்கூடாதுண்ணே'' என்றார். '""உடல் முக்கியம். அதை முதல்ல கவனிங்க தம்பி'' என்றேன். 6-ஆம் தேதியில் இருந்து 13-ஆம் தேதிவரை, அவர் உடல்நிலை, ஏறுமுகமாகவே இருந்தது. 13-ஆம் தேதி இரவு பேசும்போது கூட, '""நல்ல டெவலப் தெரியு துண்ணே. உடம்பு இப்ப நல்லா இருக்கு''' என்று, தான் ஆபத்தைத் தாண்டிவிட்டதாக நினைத்துப் பூரித்தார். நானும் இதை நம்பி மகிழ்ந்தேன். அன்று நள்ளிரவில் திடீரென்று முத்துக்குமாருக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டிருக்கிறது. செவிலியரே சமாளித்திருக்கிறார்.

14-ஆம் தேதி காலை விடிந்தது. இயல்பு நிலைக்கு முத்துக்குமார் திரும்பியிருக்கிறார். மருத்துவரிடம் கேட்டு, காலை 8 மணிக்கு முத்துக்குமார், கஞ்சி குடித்திருக்கிறார். காலை 9 மணிக்கு எதிர்பாராத வகையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
முத்துக்குமாரின் மனவி ஜீவா, என்னைத் தொடர்புகொண்டு இந்த விவரத்தைச் சொல்ல, வீட்டுக்கே சென்று ஆக்ஸிஜன் கொடுக்கும் ஒரு நிறுவனத்தைத் தொடர்புகொண்டேன். முன்பணம் 10 ஆயிரம் ரூபாய். தினசரி 400 ரூபாய் ஆகும் என்றார்கள். அவர்களை உடனடியாக முத்துக்குமார் வீட்டுக்குச் செல்லும்படி சொல்லிவிட்டு, ஆம்புலன்ஸுக்கு டிரிபிள் எம் மருத்துவமனையை தொடர்புகொள்ள முயன்றேன்.

சரியான தொடர்புகள் கிடைக்கவில்லை. உடனடியாக பில்ராத் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு, ஆம்புலன்ஸ் ஒன்றை உடனடியாக முத்துக்குமார் வீட்டு முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டேன். பின்னர் நானும் முத்துக்குமார் வீட்டை நோக்கி விரைந் தேன். நான் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்றபோது தான், அவருக்கு கடைசிக்கட்ட முதலுதவி முயற்சிகள் நடப்பதைப் பார்த்தேன்.
நின்றுவிட்ட சுவாசத்தை மீண்டும் ஏற்படுத்த, அவர் நெஞ்சில் தட்டியும், அழுத்தி யும் பல்வேறுவிதமாய் முயன்றுவிட்டு, உதடு பிதுக்கி னார்கள். எனக்கு திக்கென்றது. மனம் நிஜத்தை நம்பமறுத்தது.

15 நிமிடம் முன்னதாக வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றபடி மருத்துவ டீம் நகர்ந்தது. வீட்டை எளிதாய்க் கண்டு பிடிக்கமுடியாமல், ஆக்சிஜன் வாகனமும், ஆம்புலன்ஸும் அரைமணி நேரத்துக்கும் மேலாய் அலைந்ததால்தான் இந்தத் தாமதம்.

15 நிமிடங்கள் முன்னதாக இந்த முதலுதவிகள் முத்துக்குமாருக்கு கிடைத்திருந்தால், அந்தத் தம்பி இன்று நம்மோடு இருந்திருப்பார். தம்பி முத்துக்குமார் விடைபெற்றுப் போய்விட்டார். எடுத்த முயற்சிகள் எல்லாம் கைமீறிப் போய்விட்டன. அதிர்ச்சியில் அப்படியே அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்துவிட்டேன். உள்ளே முத்துக்குமாரின் மனைவி ஜீவாவின் கதறல் கேட்கத்தொடங்கியது.
அந்த நேரம் பார்த்து, தம்பிகளான நக்கீரன் முதன்மைத் துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடனும், தலைமை நிருபர் இளையசெல்வனும், முத்துக் குமாருக்காக "இனிய உதயம்' இதழ்களை எடுத்துக் கொண்டு, பழம் வாங்கிக்கொண்டு அங்கே வந்தனர்.

 '""முத்துக்குமார் நேத்து போன் பண்ணிக் கூப்பிட்டார்ண்ணே...''' என்றவர்கள், நிலைமையை உணர்ந்து திகைத்து திகிலடித்து நின்றனர். ""தம்பியைப் போய்ப் பாருங்கள்'' என்று அவர்களை உள்ளே போகச்சொன்னேன். முத்துக்குமாரின் மேல் உயிரையே வைத்திருக்கும் அவர் தம்பி ரமேஷுக்கும், அவர் துணைவியார் ஜீவலட்சுமிக்கும் எப்படி ஆறுதல் சொல்வது? அவர்களை எப்படித் தேற்றுவது என்று தெரியாமல் திணறிப்போய் நின்றேன்.

 "நெருனல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு' என்று, என்னதான் வள்ளுவன் வாழ்வின் நிலை யாமை பற்றிச் சொன்னாலும், இழப்பின் வலியையும் துயரையும் ஜீரணிக்க முடியவில்லை. "கடல்தாண்ட பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை... கலங்காமல் கண்டம் தாண்டுமே...'' என எங்கள் போராட்டங்களுக்கெல்லாம் உத்வேகம் தரக்கூடிய பாடல் வரிகளைப் படைத்தவர் தம்பி முத்துக்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக