ஞாயிறு, 30 மே, 2021

7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்

May be an image of one or more people, people standing, indoor and hospital

மாலைமலர் : பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
7,500 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி- சென்னையில் புதிய திட்டம் நாளை முதல் அமல்
சென்னைமாநகராட்சி அலுவலகத்தில் இன்றுவியாபாரிகளுக்கான மளிகைபொருட்கள் விற்பனைக்கு டோக்கன் வினியோகம் செய்த காட்சி
சென்னை:  கொரோனா பரவாமல் இருப்பதற்காக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை வருகிற 7-ந்தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்த நிலையில் பொது மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை (திங்கட்கிழமை) முதல் தெருத்தெருவாக சென்று விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விடலாம் அல்லது செல்போன் மூலமும் மளிகைப் பொருட்களை வாங்க தகவல் கொடுக்கலாம்.



கடைக்காரர்கள் இந்த பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கும் அரசு அனுமதி கொடுத்துள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கி உள்ளது.

இதற்காக சில்லரை வியாபாரிகள் தங்களுடைய கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு கடைகளை முழுவதுமாக திறப்பதற்கு பதில் பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க வாயிலாக பொருட்களை எடுத்து சென்று வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்.

கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் லைசென்ஸ் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன.

சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலகங்களிலும் இந்த டோக்கன்கள் இன்று வழங்கப்பட்டது. 7,500-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் டோக்கன்களை வாங்கி சென்றனர்.

டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் தொலைபேசி எண்கள்  www.chennaicorporation.gov.in  என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்-அப் நம்பர்கள் போன்ற முழு விவரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்கள் ஏரியாவில் உள்ள கடைகளை தேர்ந்தெடுத்து தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் கடைக்காரர்கள் மளிகைப் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு வந்து தருவார்கள் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

செல்போன் செயலி மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும், மொத்த வியாபாரிகளும் தங்களது பொருட்களை சில்லரை வியாபாரிகளுக்கு குடோன்களில் இருந்து எடுத்து வழங்குவதற்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.

அதுமட்டுமின்றி சென்னை கோயம்பேட்டில் உள்ள மொத்த உணவு தானிய மளிகை கடைகளை நாளை திறப்பதற்கும் அரசு அனுமதித்துள்ளது.

இதே போல் கொத்தவால் சாவடியில் உள்ள மொத்த மளிகை கடைகளும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ரிலையன்ஸ், நீல்கிரீஸ், மோர் சூப்பர் மார்க்கெட், பிக்பஜார், டெய்லி பிரஸ், ஸ்பென்சர்ஸ், கிரேஸ் சூப்பர் மார்க்கெட் போன்ற பெரிய நிறுவனங்களும் அத்தியாவசிய பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலம் அரசின் வழிகாட்டுதல் படி விநியோகிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நடமாடும் வண்டியில் மாளிகை பொருட்கள் விற்பனை

நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் தற்போது வீதிகளில் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இவர்களும் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

வீட்டு வாசலுக்கு சென்று பொருட்களை விற்பனை செய்யும் போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பொது மக்களும், வியாபாரிகளும் நடந்து கொள்ள வேண்டும்.

நிபந்தனைகளை மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த கடையின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் மாநகராட்சியில் டோக்கன் வாங்குவதற்கு வணிகர் சங்கங்கள் வியாபாரிகளுக்கு உதவி வருகின்றன.

இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள லைசென்ஸ் பெற்ற கடைக்காரர்கள் இன்று காலையில் மண்டல அலுவலகங்களுக்கு சென்று தங்களது கடை லைசென்சை காட்டி டோக்கன்களை பெற்று சென்றனர்.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளில் டோக்கன்களை பெற்று கடைக்காரர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் வீதி வீதியாக சென்று மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக