வெள்ளி, 14 மே, 2021

மத்திய பிரதேசம் கொரோனா வார்டில் பெண் கற்பழிப்பு... 24 மணி நேரத்தில் உயிரிழப்பு

 தினமலர் :பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
:நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்று பரவும் அபாயம் இருப்பிலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்களுக்கு மருத்துவ சமூகம் அளிக்கும் சேவையை பாராட்ட வார்த்தைகளே கிடையாது.
அதேசமயம் ஒரு சிலரின் கொடூரமான மற்றும் கீழ்த்தரமான செயல்களால் மருத்துவ சமூகத்தின் மீதுள்ள மரியாதையும் நம்பிக்கையும் குறைகிறது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு முன்பு, கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நிரம்பிய பெண் நோயாளியை, ஆண் செவிலியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின்னர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அடுத்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.



இறப்பதற்கு முன்பு, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து டாக்டரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று அந்த பெண் கேட்டுக்கொண்டதால், விசாரணைக் குழுவினர் தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு பிறகு, இந்த வழக்கு குறித்த விவரங்கள் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆண் செவிலியர், இதற்கு முன்பு தன்னுடன் பணியாற்றும் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு செய்தது, பணியில் இருக்கும்போது மது அருந்தியது போன்ற குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக