திங்கள், 10 மே, 2021

20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்! 7,000 போதுமானதாக இல்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

“7,000 போதுமானதாக இல்லை; 20,000 ரெம்டெசிவிர் மருந்துகள் வேண்டும்” : முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
kalaignarseithigal.com : மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசியில் வாயிலாக தொடர்புகொண்டு தமிழகத்துக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்துக்கு ஒதுக்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து தமிழக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்தைத் தேவையான அளவிற்குக் கொள்முதல் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், ஆறு பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த மருந்திற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரம் குப்பிகள், அதாவது நாளொன்றுக்கு 7 ஆயிரம் குப்பிகள் என்ற குறைந்த அளவிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டை உடனடியாக உயர்த்தித் தரவேண்டுமென மாண்புமிகு மத்திய இரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்கள்.

நாளொன்றுக்கு தமிழகத்திற்குக் குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறும், அவ்வாறு செய்தால் மட்டுமே தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய முடியுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தினார்கள். மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக