வெள்ளி, 2 ஏப்ரல், 2021

தூக்கிப்போட்டு மிதிப்பேன் - அண்ணாமலை: திமுககாரனை முடிஞ்சா தொட்டுப் பாரு - கனிமொழி

minnambalam :சட்டமன்றத் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் பிரச்சாரத்தின் சூடு ஒருபக்கம் ஏறிக் கொண்டிருக்க பிரச்சாரத்தின் தரம் ஒருபக்கம் இறங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில்தான் திமுக கரூர் மாவட்டப் பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி மீது அரவக்குறிச்சி பாஜக வேட்பாளரும், பாஜக மாநிலத் துணைத் தலைவருமான அண்ணாமலை நடத்தியிருக்கும் வார்த்தைத் தாக்குதல்.   மார்ச் 31ஆம் தேதி அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “செந்தில்பாலாஜியெல்லாம் தூக்கிப்போட்டு மிதிச்சா பல்லுகில்லெல்லாம் வெளிய வந்துடும், எவ்ளோ பெரிய ஃபிராடெல்லாம் பாத்துட்டு வந்திருப்பேன் நான். நீங்கள்ளாம் ஒரு ஆளுக, நீங்கள்லாம் ஒரு இது. உனக்கு பயந்து கை வைச்சா அண்ணாமலை வைலன்ஸ் பண்றான்னு மாத்துவியாம்.           அதனால இங்க இருக்குற திமுகக்காரனுக்கு எச்சரிக்கை வச்சிட்டுப் போறேன். நான் வன்மத்தைக் கையிலெடுக்க தயாராக கிடையாது. அஹிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம், அதைக் காட்ட வேண்டாம்னு நினைக்கிறேன்.

வந்து வீடியோ எடுக்குறியா எடுத்துட்டு போ... எலக்‌ஷன் கமிஷன்ல கொடுப்பியா, கொடுத்துக்க. இதுக்கெல்லாம் பயப்புடுற ஆளா நானு? நியாயப்படி தர்மப்படி என்ன இருக்கோ பண்ணுவோம்” என்று பேசியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்து நேற்று (ஏப்ரல் 1) போடிநாயக்கனூரில் பிரச்சாரத்தில் திமுக மகளிரணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி பேசுகையில்,

“அரவக்குறிச்சியில ஒரு கேண்டிடேட் இருக்காரு. அவர் தொகுதியில போய் எனக்கு இன்னொரு முகம் இருக்கு, செந்தில்பாலாஜியை தூக்கிப் போட்டு மிதிச்சுடுவேன்னு பேசுறாரு. நீ தொட்டுப் பாரு தம்பி... திமுகக்காரன் மேல கை வச்சுப் பாரு. அதுவும் நீங்க பிஜேபி... உங்கள மாதிரி எத்தன பேர நாங்க பாத்துட்டு வந்திருக்கோம். இந்த வேலையெல்லாம் தமிழ்நாட்ல வச்சுக்காதீங்க. தமிழ்நாடு இதுக்கான இடமில்ல. எங்க யாரு எதை பேசணும்னு தெரிஞ்சுகொண்டு பேசுங்க. நாகாக்க வேண்டும். திருக்குறளை புதுசா பிரதமர் கண்டுபிடிச்சு சொல்லிக்கிட்டிருக்காரு. அதனால யாகாவராயினும் நாகாக்க” என்று அண்ணாமலைக்குப் பதில் கூறியிருக்கிறார் கனிமொழி.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக