திங்கள், 19 ஏப்ரல், 2021

மன்சூர் அலிகான் பேட்டியில் சில உண்மைகள் இருக்கத்தான் செய்கிறது?

May be an image of 1 person, standing and outdoors
Abilash Chandran : கொரோனா: தேசம் தழுவிய பீதியும் நிஜமும்.அண்மையில் நடிகர் விவேக் காலமானதை ஒட்டி மன்சூர் அலிகான் அளித்த ஆவேசப் பேட்டியை பார்த்திருப்பீர்கள். தடுப்பூசிக்கும், கொரோனா நோய்த்தொற்று மீதான அச்சத்துக்கும் எதிராக அவர் வைத்த குற்றச்சாட்டுகள், சதித்திட்ட கற்பனைகள் தவறாக பலருக்கும் பட்டது. கடுமையான கண்டனங்கள் எழுந்தன. இருந்தாலும், அவர் சொன்னதில் சிறிது உண்மை உள்ளதாகவே எனக்குத் தோன்றியது. இது நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவது தான் - இதுவரை கொரோனாவால் நேரடியாக மரணமுற்றவர்களில் இளைஞர்கள், 60 வயதுக்குக் குறைவானவர்கள் சொற்பமே. Worldometer இணையதளத்தில் இருந்து புள்ளிவிபரத்தை தருகிறேன்:
கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்: 15, 061, 919.
குணமானவர்கள்: 12, 953, 821
இறந்தவர்கள்: 1, 78, 793
அதாவது பெரும்பாலானோர் பிழைத்து விடுகிறார்கள்.
ஒரு சிறிய சதவீதத்தினர் பேர் மட்டுமே மரணமடைகிறார்கள்.
இருந்தும் நாம் ஏன் கொரோனா வந்தால் அடுத்த நிமிடமே மக்கள் விழுந்து துடிதுடித்து இறந்து விடுவார்கள் என அஞ்சுகிறோம்? விபத்திலும், பல்வேறு நோய்களாலும் இதை விட அதிகமானோர் தினசரி இறக்கும் போது ஏன் கொரோனாவுக்கு மட்டும் இவ்வளவு அஞ்சுகிறோம்?
1. அரசு இதற்கு தனி மதிப்பளிக்கிறது - உலகம் முழுக்க அரசுகள் இதை ஒரு தனி ஆபத்து மிக்க நோய்த்தொற்றாக பார்க்கிறது.
2. மக்கள் இடையே வேகமாக பரவுகிறது. காற்று வழி, தொடுகை வழி பரவும் என்பதால், மக்களால் பேசாமல், தொடாமல் இருக்க முடியாது என்பதால் பரவலைத் தடுப்பது மிக மிக சிரமமாக உள்ளது.
3. கொரோனா ஒரு யுத்தத்தை ஒத்திருக்கிறது - அது ஒரு நாட்டை வெளியில் இருந்து வந்து தாக்குகிறது, அரசு பின்வாங்குகிறது, அனைவரும் ஒரே சமயம் பாதிக்கப்படுகிறார்கள். ஆக யுத்த சமயத்தில் ஏற்படும் பாதுகாப்பின்மை, உயிர்பீதி மக்களுக்கு ஏற்படுகிறது. ஒரே வித்தியாசம் நவீன காலத்தில் யுத்தம் சில நாட்களில், வாரங்களில் முடிவதைப் பார்க்கிறோம். ஆனால் கொரோனா தாக்குதல் வருடக்கணக்காய் நீடிக்கிறது. அதனாலே சில மாதங்கள் கொரோனா இல்லாதது போன்று நிதானமாகிறோம் சில நேரங்களில் அது திடீரென வந்தது போன்றும் நாம் அஞ்சுகிறோம்.
4. கொரோனாவுக்கு என மருந்து ஒன்றில்லை. இதனாலே யாராலும் காப்பாற்றப்படாமல் விடப்படுவோம் எனும் அச்சம் தோன்றுகிறது.
ஆனால் இன்னொரு விசித்திரமும் உள்ளது - நாம் கொரோனாவை மறந்து அன்றாட வாழ்க்கைக்கு திரும்பும் போது அது நம்மை ‘பாதிப்பதில்லை’, பீதி குறைகிறது, எந்த தாக்கமும் இல்லை. அரசு ‘இரண்டாம் அலை’, ‘மூன்றாம் அலை’ என அறிவித்து ஊடகங்களில் செய்தியாகும் போது மக்கள் முகக்கவசம் அணிவது, பரஸ்பரம் அஞ்சுவது அதிகமாகிறது.
கொரோனா அச்சம் செயற்கையாக உண்டு பண்ணப்படுவது என நான் நம்புவது இதனால் தான் - கொரோனா வந்து நம் அண்டை வீடுகளிலோ நண்பர்கள் மத்தியிலோ யாரும் கொத்துக்கொத்தாய் சாவதை நாம் காணவில்லை. ஜுரம், உடல் வலி என சிலர் அவஸ்தைப்படுகிறார்கள், சிலர் கடுமையான மூச்சுத்திணறலால் அவஸ்தைப்பட்டு மீண்டு வருகிறார்கள். நான் பார்த்தவர்களில் 90% மீண்டு விடுகிறார்கள். இது பெரும்பாலான தொற்று நோய்களுக்கு உரித்தானது தான். ஆம் உத்தர பிரதேசத்தில் கோவிட் மரணங்கள் 2.5 மடங்கு அதிகமாகி உள்ளன. ஆனால் அங்கே மக்கள் அதிக அளவில் சாவது நோயினால் அல்ல, போதுமான சிகிச்சை அளிக்கப்படாததாலே. ஜுரம் வந்தவர்களை ஆஸ்பத்திரிகளில் இருந்து திருப்பி அனுப்புகிறார்கள், ஆம்புலன்ஸை அழைத்தால் வருவதில்லை, எந்த மருத்துவ உதவியும் இல்லாமல் ஆயிரக்கணானோர் சாலையில் செத்து மடிகிறார்கள். சரியான கட்டமைப்பு வசதிகள் உண்டெனில் இந்த மரணங்களை பெருமளவு குறைத்திருக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.
மன்சூர் அலிகான் இந்த கொரோனா காலங்காலமாக இங்கு இருந்து வந்தது தான் என வெள்ளந்தியாக சொன்ன போது குறித்தது இதைத் தான். இது ஒரு சாதாரண ஜுரம் அல்ல, அதே சமயம் இது ஒரு அசாதாரணமான நோய்த்தொற்றும் அல்ல. இதை நம்மால் சமாளிக்க முடியும், ஆரோக்கியமானவர்களில் பெரும்பாலானவர்கள் மீள முடியும். ஆம் பல்லாயிரம் பேர் தினம் தினம் தொற்றுக்குள்ளாவார்கள், ஆனால் சில வாரங்களில் சிறிய, பெரிய பாதிப்புகளுடன் மீண்டும் விடுவார்கள். அவர்கள் பாட்டுக்கு தம் வேலையை பார்த்துக் கொண்டு செல்ல முடியும்.
நான் இந்த கொரோனா நோய்த்தொற்று துவங்கிய போது இந்நோயை விட நாம் அதிகம் அஞ்ச வேண்டியது பொருளாதார இழப்புகளைத் தான் எனச் சொன்னேன். அதுவே நடந்தது: கொரோனா நோய்த்தொற்று மிக மோசமாக தாக்கியது நமது வாழ்நிலையை, வணிகத்தை, வேலைப் பாதுகாப்பைத் தான். இதை உணர்ந்தே இந்த இரண்டாம் அலையின் போது நள்ளிரவில் பிரதமர் தோன்றி முழு லாக் டவுனை அறிவிக்காமல் இருக்கிறார். அவருக்கே புத்தி வந்து விட்டது.
15 கோடி பேர் குழுமுகிற கும்ப மேளா, தேர்தல் பரப்புரை கூட்டங்களை நாம் தவிர்த்திருக்க வேண்டும். மற்றபடி ஓரளவுக்கு உஷாராக நாம் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதால் பெரிய ஆபத்துக்கள் விளையப் போவதில்லை. தேவையில்லாத ஒரு பீதி நம்மை உருக்குலைத்து வருகிறது. இப்போது அரசு கொரோனாவைக் கையாள்வதைப் போன்றே ஆரம்பத்திலே செய்திருந்தால், பல மாத லாக்டவுனை தவிர்த்திருந்தால், பல லட்சம் பேர் வேலையிழந்து தெருவுக்கு வந்ததை தவிர்த்திருக்கலாம். சிறுவியாபாரிகள் பிச்சைக்காரர்கள் ஆனதைத் தவிர்த்திருக்கலாம். பீதியைக் கிளப்பும் மருத்துவர்களுக்கு செவிசாய்ப்பதை குறைத்திருத்திருந்தால் நிலைமை இன்னும் சீராக இருந்திருக்கும்.
தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும், அப்போது மற்றொரு நோய்த்தொற்று தோன்றினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
இந்த நாடு கொரோனா தொற்றால் அல்ல பீதியாலே அதிகம் சீரழிந்தது என்பதே உண்மை. இதைத் தான் மன்சூரும் தன் வெள்ளந்தியான பேச்சுவழக்கில் சொல்ல வந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக