ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

சுப்புலட்சுமி ஜெகதீசன் தமிழ்நாட்டின் முதல் பெண் சபாநாயகர்?

தமிழகத்தின் முதல் பெண் சபாநாயகர் சுப்புலட்சுமி ஜெகதீசன்?

minnambalam : ஸ்டாலின் கொடைக்கானல் விசிட் முடிந்ததில் இருந்து, சில முக்கியமான தகவல்கள் திமுகவின் டாப் லெவலில் ஓடிக் கொண்டிருக்கின்றன. அடுத்த இவர் யார், அடுத்த அவர் யார் என்பதுதான் இந்த விவாதத்தின் முக்கியப் பொருள்.

திமுகவின் சீனியர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு பதவியை நினைத்தோ, குறிவைத்தோ தீவிரமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கையில், சில பேருக்குதான் தானாகவே பதவி தேடி வரும் நிலையும் உள்ளது.   திமுகவின் இப்போதைய துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் சீனியர்களில் ஒருவர். அதுவும் பெண் சீனியர்களில் முதன்மையானவர். அடிப்படையில் ஆசிரியையான சுப்புலட்சுமி ஜெகதீசன் திராவிட இயக்கத்தின் மீது பற்றுகொண்டவர்.

1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல் முறை ஆட்சி அமைத்தபோது மொடக்குறிச்சி தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் வெற்றிபெற்று எம்ஜிஆர் அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக பணியாற்றிய சுப்புலட்சுமி ஜெகதீசன், பிறகு திமுகவில் இணைந்தார். திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின் திமுகவினர் உள்ளிட்ட பலர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன். சுமார் ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்த சுப்புலட்சுமி பிறகு விடுதலை செய்யப்பட்டார்.1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் சுப்புலட்சுமி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் அனுபவம் பெற்ற சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் துணைப் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். 73 வயதான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த தேர்தலில் சீட் கேட்கவே இல்லை. திடீரென ஸ்டாலின் அவரை அழைத்து, ‘நீங்க மொடக்குறிச்சி தொகுதியில் நிக்கணும்’ என்று கேட்டதும் அவரது உத்தரவை நிறைவேற்றினார்.

ஸ்டாலின் இப்படிக் கேட்டதற்குப் பின்னால் ஒரு கணக்கு இருக்கிறது.

ஐபேக் சுப்புலட்சுமி ஜெகதீசனைப் பற்றி நல்ல ரிப்போர்ட் கொடுத்திருந்ததோடு அவரைப் போன்ற அனுபவம்மிக்கவர்களை திமுக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் விருப்ப மனுவே கொடுக்காத நிலையிலும் ஸ்டாலின் அவரை தேர்தலில் போட்டியிட வைத்தார்.

கொடைக்கானல் பட்டியல்படி சுப்புலட்சுமி ஜெகதீசனின் நீண்ட அரசியல் அனுபவத்தைக் கருத்தில்கொண்டு அவருக்கு அடுத்து அமையும் திமுக ஆட்சியில் சபாநாயகர் பதவி அளிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. கொங்கு மக்களுக்கு திமுகவின் சார்பில் மரியாதை செய்த மாதிரியும் இருக்கும், தமிழ்நாட்டில் இதுவரை பெண்கள் சபாநாயகர் பதவியை அலங்கரித்ததே இல்லை. எனவே ஒட்டுமொத்தமாக பெண் இனத்தையும் மரியாதை செய்த மாதிரி இருக்கும் என்பதால் சுப்புலட்சுமி ஜெகதீசனை சபாநாயகர் ஆக்கலாம் என்ற திட்டம் ஸ்டாலினிடம் இருக்கிறது.

தற்போதைய சபாநாயகர் தனபாலும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுப்புலட்சுமி ஜெகதீசன் சபாநாயகர் ஆகிறார் என்றால் தற்போது நீண்ட காலமாக அவரிடம் இருக்கும் துணைப் பொதுச் செயலாளர் பதவி வேறு ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும். அதற்கான போட்டிகளும் இன்னொரு பக்கம் திமுகவுக்குள் தொடங்கிவிட்டன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக