ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நீலச்சங்கி இயக்குனர்களே, உங்கள் முதுகை தங்கக் குச்சியால் சொறிந்துக் கொள்ள பல சம்பவங்களின் அணிவகுப்பு

Raja Rajendran :அன்பும் பண்பும் கொண்ட நீலச்சங்கி இயக்குனர்களே, உங்களின் நீல வண்ணத்துக்காக இங்கு கிட்டும் அளப்பரிய வரவேற்பில் வரலாற்றுக் காலத்தை திரிக்க முயலாதீர்கள். அந்தக் கூர்மையான ஆயுதத்தை தவறாகப் பிரயோகித்தால், அது உங்களைத்தான் துளைத்துப் போடும் ! இதோ நீங்கள் படமெடுத்து, உங்கள் முதுகை தங்கக் குச்சியால் சொறிந்துக் கொள்ள பல சம்பவங்களின் அணிவகுப்பு ! இதை இன்றெடுக்க உங்களுக்குத் துணிவிருக்காது. ஆனால் துணிவு வரும்போது, 2006 க்குப் பின், 2022 க்கு முன் என்று தலைப்பிட்டு, கோழைத்தனமாய் முதுகில் குத்தாதீர்கள் 🙏 1.) இளவரசன் (திவ்யா) படுகொலை & காதல்,
திவ்யாவின் அப்பா தற்கொலை, நீதிமன்ற விளையாட்டுக்கள்.
வன்னிய சாதி வெறி.
ஒரிஜினலாக நடந்தக் காலம் 2013. ஸ்டீல்மங்கை ஆட்சி !
இளவரசன் படுகொலைக்கு முழுமுதற் காரணம் பாமகவின் பாலு !
வழக்கறிஞராக ஹேபியஸ் கார்பஸ் மனு மூலம் மிரட்டி அந்த இணைகளை, பெங்களூருவிலிருந்து வரவழைத்தது, முதலில் இளவரசனை விட்டுப் போக மாட்டேன் என்ற திவ்யாவிடம், அப்பா போய்ட்டாரு, இப்ப உங்கம்மாவையும் கொன்னுடுவோம் என மிரட்டிப் பணியச் செய்தவர் பாலு !
அவர் மீது இங்கு பலருக்கும் சாஃப்ட் பார்வை உண்டு. ஆனால் இந்தப் பாவம் அவரை துள்ளத் துடிக்க கதற வைத்துக் கொண்டே இருக்கும். யாவும் நம் கண் முன் நடக்கும் !
2.) கோகுல்ராஜ் (சுவாதி) படுகொலை
சினிமாக்களில் கூட இவ்வளவு கொடூரங்கள் காட்டப்பட்டதில்லை.
கவுண்டர் சாதி வெறி.
கோகுல்ராஜ் தலையை வெட்டி முண்டமாக தண்டவாளத்தில் வீசியெறிந்தது ரவுடிமாமா யுவராஜ் படை. தலையை வெட்டும் முன் கொடூரமான சித்திரவதை புரிந்தனராம். துணிவாகப் பேசிய கோகுல்ராஜ் நாவையும் துண்டித்திருக்கிறார்கள் !
இந்த வழக்குப் போக்கில் அரசு வழக்கறிஞரையே பிறழ வைத்திருக்கிறார்கள். இதனால் சுவாதியே ரவுடிகளுக்குப் பயந்து கோகுல்ராஜ் பற்றித் தவறாகச் சொல்லியிருக்கிறார் !
பிறகு அரசு வக்கீலைப் பற்றி மேல்முறையீடு செய்ய, நீதிமன்றம்தான் அரசு வக்கீலை மாற்றி நியமித்திருக்கிறது. புதியதாக வந்தவர்தான் பிறழ் சாட்சிகளை சிசிடிவி புட்டேஜ்களை வைத்து அவர்களைத் திரும்பவும் யுவராஜ் கேங்கிற்கு எதிராகப் பேச வைத்திருக்கிறார் !
இதற்கிடையே நடந்த இன்னொரு கோரமான ட்விஸ்ட், இந்த வழக்கை விசாரித்த டி எஸ் பி விஷ்ணுபிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது !
இது ஏனென்று தெரியாதா என்ன ? ஒரு பக்கம் ரவுடிகளின் மிரட்டல். இன்னொரு பக்கம் உயர் அதிகாரிகளின் அழுத்தம். அப்போதும் ஸ்டீல்மங்கைதான் முதல்வர் !
இப்படி ஒரு பெண் உயர் அதிகாரியே தற்கொலை செய்துக் கொண்டாலும் அதுபற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
அதெல்லாம் அவருடைய தனிப்பட்டக் காரணமென சட்டசபையிலேயே தெரிவித்தார் !
இந்த யுவராஜையும் போலிசெல்லாம் கைது செய்யவில்லை. பல்லாயிரம் மக்கள் புடை சூழ அவனே சரணடைந்தான். எங்க மாமா மேல போலிஸ் நகம் பட்டாலும் போலிஸ் ஸ்டேஷன் இருக்காது பார்த்துக்க என்று அவர்கள் மிரட்டியது ஜெயா காதுகளுக்கு கேட்கவே இல்லை !
காவல்துறையைக் கையில் வைத்திருந்த ஜெயாவுக்கு இது மாபெரும் அவமானம். ஆனால், கவுண்டர் வாக்குகளுக்காக அவர் கள்ள மவுனம் சாதித்தார். இதற்காகவே கோவை மண்டலம், அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பது மக்களாட்சிக்கு வெட்கக்கேடு !
இத்துணை திருப்பங்கள் நிறைந்த இந்த அவலங்களை படமெடுக்கும் போது, 2015 என்பதை 2010 என்று மாரி செல்வராஜ்களும், ரஞ்சித்களும், ஷங்கர்களும் திரிக்க மாட்டார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை 😡
அறிவுஜீவி ரசிகர்களும் 2010 யாருடைய ஆட்சி என்று கூகுள் செய்துவிட்டு, அவர் ஆட்சியா, அப்ப சரிதான் என்பார்கள் !
சங்கிகள், காஞ்சிபுரம் பார்ப்பான் தேவநாதனை இஸ்லாமியர் என்றும், திருவள்ளுவரை மயிலாப்பூர் மேன் என்று திரித்துச் சொல்லிக் கொள்வதைப் போல, நீலச்சங்கிகளும் இந்த அருவருக்கத்தக்க ஈனச் செயலை செய்கிறார்கள் !
3.) சங்கர்(கவுசல்யா) படுகொலை.
தேவர் சாதி வெறி.
காதல் மணம் புரிந்து நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருந்த இந்த இணையை, பாட்டி சென்டிமென்ட் மூலம் ஏமாற்றி, நடுரோட்டில் பலர் பார்க்க, துள்ளத் துடிக்கக் கொலை செய்தார் சின்னச்சாமி தேவர். கவுசல்யாவின் தந்தை. 2015. புரட்சித்தலைவி ஆட்சி !
ஆனால், அத்தனை சி சி டி வி ஆதாரங்கள் இருந்தும் கஞ்சா வியாபாரி சின்னச்சாமியை விடுதலை செய்தது எடப்பாடி அரசு. உயர் நீதிமன்றம்தான் விடுத்தது என்றாலும் அரசு வாதாடிய லட்சணத்தை அது காறி துப்பியது !
மறுமணம் புரிந்தாலும் இந்த வழக்கு நீர்த்ததை கவுசல்யா ஏற்கவில்லை !
4.) ஸ்வாதி - ராம்குமார் படுகொலை.
ஆண்டு 2016.
பார்ப்பன சாதி வெறி.
ஸ்டீலமங்கை அத்தனை கேவலமான ஆட்சி புரிந்தும், மீண்டும் வெல்ல மேற்கண்டச் சம்பவங்களுக்கு அவர் குனிந்துக் கொடுத்ததால்தான் என்பதை புரிந்துக் கொண்டிருப்பீர்கள் !
ஆனால் எதற்குமே வராத உங்களின் கோபம், அந்தக் குனிந்த என்ற வார்த்தைக்கு மட்டும் பொத்துக்கிட்டு கிளம்பும் !
குனிந்த என்பதன் நேரடி அர்த்தம், ஆதிக்க இடை நிலைச் சாதியினரின் வாக்குகளுக்காக அடிமையாகிக் கிடப்பது என்பதுதான் !
ஸ்வாதி பார்ப்பனப் பெண். பேரறிவாளி. தீவீர கடவுள் பக்தர். அவருடையச் சித்தப்பா ஆர் எஸ் எஸ்சில் பிரதானப் பதவியை வகிப்பவர் !
இஸ்லாமியருடன் காதல், ரம்ஜான் நோன்பு நோற்றல், ஆள் வைத்து சித்தப்பா செய்த கூலிப்படை கொலை, சிக்க வைக்கப்பட்ட அப்பாவி ராம்குமார், பிடிபடும் போது கழுத்தை துரு பிடித்த பிளேடால் அறுத்துக் கொள்ள வைக்கப்பட்ட நாடகம், இதனாலேயே மீடியாவில் பேச முடியாமல் போன ராம்குமார் ;
மூன்று மாதங்களாகியும் சரிவர குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால் பிணை கிடைக்கவிருந்த பொழுதில், சிறையில் மின்சாரக் கம்பியை ருசித்துச் சுவைத்து மரணம் என்றொரு ட்விஸ்ட் !
போஸ்ட்மார்ட்ட வழக்குப் போராட்டத்தில் பச்சையாக அதிகார வர்க்கம் நடந்துக் கொண்ட விதம், அப்படியே கப்சிப்பென்று ராம்குமார் பெற்றோர் & வழக்கறிஞர்களை அரசு அடங்கச் செய்த அக்கிரமங்கள் !
சாமிகளா, மேற்சொன்ன யாவையுமே தலித்கள் சம்பந்தப்பட்டிருந்த ஒரே காரணத்துக்காக நிகழ்ந்தக் கொடூரங்கள்தான். யாவுமே அம்மையார் ஆண்ட 2011 -2016 களில் நிகழ்ந்தவைகள்.
5.) இவைகளையெல்லாம் விட அட்டகாசமாக, ஒரு முதல்வரையே, இரும்பு மங்கையையே, காலொடித்து, 75 நாட்கள் இட்லி சாப்பிட்டார், அவித்த ஆப்பிள் சாப்பிட்டார் எனக் கதைகள் கட்டி, உலகத்தையே ஏமாற்றியக் கள்ளக் கூட்டம் பற்றி வெப் சீரிஸே எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிஷன். அது ஸ்டாலின் ஆட்சியில்தான் நடந்தது என மனச்சாட்சி இல்லாமல் எடுக்கக் கூடாது !
6.) நந்தீஷ் - சுவாதி படுகொலைகள்
இங்கு காதல் மண இணைகள் இருவரையுமே கொன்று போட்டு விடுகிறார்கள், பெண்ணைப் பெற்ற பிச்சைக்காரக் கபோதிகள்.
ஆமாம். வறுமையில் வாடினாலும் அந்த நாய்களுக்கு சாதி மட்டும் உயிருக்கும் மேலாம் !
கமல்தான் இதில் வில்லன்.
காதல் மணம் புரிந்த நந்தீஷ் - சுவாதி, பெற்றோரின் குணமறிந்து இவர்களின் கண்படா தூரத்தில் தனியாக வாழ்வோம் என முடிவெடுக்கிறார்கள் !
இவர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியாத சுவாதியின் பெற்றோர் கண்களுக்கு, டிவியில் மக்கள் நீதி மய்ய நிகழ்ச்சி ஒன்றில், நந்தீசும், சுவாதியும் இருப்பது தெரிகிறது !
அன்று மட்டும் அந்த மக்கள் நீதி மய்ய நிகழ்ச்சியில் இந்த இணை கலந்துக் கொள்ளாமலிருந்திருந்தால், ஒருவேளை இன்றளவும் உயிரோடு இருந்திருக்கலாமோ என்னவோ ?
2018. எடப்பாடி அய்யாவின் வெற்றி நடை போடும் ஆட்சி. எடப்பாடி அய்யாவின் சாதி ஆட்கள்தான் சுவாதியின் பெற்றோர்.
ஓசூரில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றதை அறிந்த, சுவாதியின் பெற்றோர் கூட்டம் அங்கு போய், நடந்ததை எல்லாம் மறந்துட்டோம், முறைப்படி நம்ம குலதெயவ்க் கோயில்ல போய் சாமி கும்பிட்டுட்டு, சாங்கியமெல்லாம் செஞ்சாத்தான் நீடூழி வாழ்வீங்க என்று ஏமாற்றுகிறது சுவாதியின் உறவினக்கும்பல்.
சுவாதியின் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி, மாமாக்கள் என்கிற ஒட்டுமொத்த சாதிவெறி முட்டாக்கூட்டம் !
தமிழக - கர்நாடக எல்லையில், காவிரிக்கரை ஓரத்தில் இருந்த அவர்களுடையக் குலதெய்வக் கோவில், காடு சூழ்ந்தது. ஆள் அரவமும் குறைவு.
மனமுருகி கண்களை மூடி வேண்டிக் கொண்டிருந்த அந்த இளம் குருத்துகளின் தலையிலேயே ஓங்கி அடித்து, காட்டுக்குள் இழுத்துச் செல்கிறது அந்தக் கூட்டம் !
நம்பி வந்தவர்களின் கைகளை பின்பக்கமாய்க் கட்டிப் போட்டு, வெறி தீர உருட்டுக் கட்டை, இரும்புக் கம்பிகளால் அடித்திருக்கிறது. ரத்தச் சேற்றில் அரைகுறை உயிரோடு இருந்த அவர்களை அப்படியே ஓடும் காவிரி ஆற்றில் தள்ளிவிட்டு, தன் சாதிப்பெருமையைக் காத்திருக்கிறது அந்தக் காட்டுமிராண்டிக் கும்பல் !
இரு நாட்கள் கழித்து, உப்பி, அழுகிச் சிதைந்து கரை ஒதுங்கின அந்த உடல்கள். கர்நாடக காவல்துறைக்கு உடனடியாகத் துப்பு கிட்டியது !
உடனடியாக அனைவரையும் வளைத்துத் தூக்கி விட்டார்கள். இரண்டு மாநில விசாரணையில் அவர்களுக்கு அந்த இளம் குருத்துக்களை கொன்றதில் துளியளவு கூட குற்றவுணர்வு ஏதுமில்லை. காரணம் அவர்களைப் பொத்திப் பாதுகாத்த மாநில அரசு !
இதுபோக, கடந்தப் பத்தாண்டு கால ஆட்சியில், இன்னும் பல படுகொலைகள், பகிரங்க அரசு ஆதரவுடன் நிகழ்ந்திருக்கின்றன !
சான்றாக தூத்துகுடி படுகொலைகள், சாத்தான்குளப் படுகொலைகள்.....
பொள்ளாச்சி, நாகர்கோவில் பாலியல் வன்முறைகள்......
கொடநாடு எஸ்டேட் மர்மக் கொலைகள் ......
இதையெல்லாம் அடுத்த பாகத்தில் பார்ப்போம். இவைகளெல்லாம் சினிமாக்களாக நிச்சயம் உருமாறும். ஒன்று, அதற்கும் ஆளுங்கட்சி அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்றோ, அல்லது வருடங்களை மாற்றி ஏமாற்றவோ செய்வார்கள் !
இனி  விட மாட்டோம் ! 
 
vikatan : கோகுல்ராஜ் கொலையில் நடந்தது என்ன? வெளியானது ஸ்வாதி பகிர்ந்த தகவல்கள் வீ கே.ரமேஷ்  . 

சேலம் பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்திருக்கிறது. 4.9.2018 அன்று கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன் வாக்குமூலம் அளித்து இந்த வழக்கை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

சேலம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ். இவரும், தன்னோடு கல்லூரியில் சக மாணவியாகப் படித்த ஸ்வாதியும் நெருங்கிப் பழகிவந்தார்கள். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கு வந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜும் அவருடைய ஆட்களும் கோகுல்ராஜை மிரட்டிக் கூட்டிச் சென்றார்கள். அதற்கான ஆதாரம், அந்தக் கோயிலில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமரா ஃபுட்டேஜில் பதிவாகியிருந்ததாகச் சொல்லப்பட்டது.

இரவு ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர்கள் கோகுல்ராஜைத் தேடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த நாள் பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது. அதையடுத்து தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கோகுல்ராஜ் தரப்பில் வாதிட தமிழக அரசு நியமித்த சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வாதிட மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு என்பவரும் ஆஜராகி வாதாடுகிறார்கள்.

இவ்வழக்கின் விசாரணைக்காக 4.9.2018 அன்று யுவராஜ் தரப்பில் தலைமறைவாக உள்ள அமுதரசு, சுட்டுக் கொல்லப்பட்ட ஜோதிமணியைத் தவிர யுவராஜ், தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் (எ) சிவக்குமார், யுவராஜ் கார் டிரைவர் அருண், சங்கர், செல்வராஜ், ரவி என்கிற ஶ்ரீதர், ரஞ்சித், சதீஷ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, சந்திரசேகர் ஆகிய 15 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன், ஸ்வாதி, ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ் சந்துமீனா ஆகியோர்  ஆஜரானார்கள்.

இவ்வழக்கு சரியாக 11:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. முதலில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கைலாஷ் சந்துமீனா கூண்டில் ஏறி பதில் அளித்தார், ``பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே டிராக்கில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 2015 ஜூன் 24-ம் தேதி ஒரு வாலிபர் உடல் கிடந்தது. உடனே ஈரோடு ரயில்வே போலீஸுக்குத் தகவல் கொடுத்தோம்'' என்றார். அவரை குறுக்கிட்ட யுவராஜின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜு, பின்வருமாறு கேள்வி எழுப்பினார்.

கே.ஜி.,: ``குறித்த நேரத்தில்தான் ரயில் வந்ததா?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ஆமாம்''.

கே.ஜி.,: ``கீ மேன் பெயர் என்ன?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ராஜன்''.

கே.ஜி.,: ``ரயிலின் பெயர், நெம்பர் என்ன?''

ஸ்டேஷன் மாஸ்டர்: ``ஏற்கெனவே எழுதிக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

அவரை அடுத்து கோகுல்ராஜ் அண்ணன் கலைச்செல்வன் பெயர் கூப்பிடப்பட்டது. கலைச்செல்வன் கூண்டில் ஏறி நின்று தன் வாக்குமூலத்தைத் தெரிவித்தார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி நடந்தவற்றை முழுமையாகச் சொல்லச் சொன்னார்.

அதையடுத்து கோகுல்ராஜின் அண்ணன் கலைச்செல்வன்: ``2015 ஜூன் 23-ம் தேதி காலை சுமார் 6:30 மணிக்கு நண்பர்களைப் பார்த்துட்டு

வருவதாக எங்க அம்மாவிடம் சொல்லிட்டு என் தம்பி கோகுல்ராஜ் வீட்டைவிட்டுக் கிளம்பினான். 10:30 மணிக்கு அம்மா அவனுக்கு போன் பண்ணினாங்க. அவன், போனை எடுக்கலை. கொஞ்ச நேரத்தில் புதிய நெம்பரிலிருந்து அம்மாவுக்கு போன் வந்தது. அந்த போனிலிருந்து கோகுல்ராஜ் பேசினான். `எங்கடா இருக்கே'னு கேட்டதற்கு, `வெளியில ஃப்ரெண்ட்ஸ்கூட இருக்குறேன். வந்திடுவேன்' என்று சொன்னான்.

ஆனால், மாலை 5:00 மணி ஆகியும் வீட்டுக்கு வரலை. போன் பண்ணினால் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. இதையடுத்து, எங்க ஊரிலிருந்து கோகுல்ராஜுடன் கல்லூரிக்குச் செல்லும் நண்பர்களிடம் போய்க் கேட்டேன். அவர்கள், `காலையில் கல்லூரி வாகனத்தில் வந்தான். திருசெங்கோட்டிலேயே இறங்கிட்டான். சாயந்திரம் கல்லூரி வாகனத்தில் வரவில்லை' என்று சொன்னார்கள். அதன் பிறகு வீட்டுக்கு வந்து என் தம்பி நெம்பருக்கு போன் பண்ணிட்டே இருந்தோம். சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. தொடர்ந்து, இரவு சுமார் 8:40 மணிக்கு போன் பண்ணியபோது, `ஏய்... கோகுல்ராஜ் எங்கடா இருக்கே'னு கேட்டதற்கு, `வெளியில இருக்குறே'னு பதில் வந்தது. ஆனா, அது அவனுடைய வாய்ஸ் இல்லை. அதனால, `யாரு பேசறது'னு கேட்டதற்கு, `அவனோட ஃப்ரெண்டு'னு சொல்லிட்டு போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்க.

அன்று இரவு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அடுத்த நாள் அதிகாலை ஃபேஸ்புக்கில் அவனுடைய கல்லூரி நண்பர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பார்க்கலாம் என்று தேடினேன். அதில் பாலமுருகன் நெம்பர் இருந்தது. அவருக்கு, போன் பண்ணி கேட்டேன். `நான் வேற செக்‌ஷன்... அவன் வேற செக்‌ஷன். கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக் ராஜாவிடம் கேட்டுப் பாருங்கள்' என்று அவருடைய நெம்பரைக் கொடுத்தார்.  

அதையடுத்து கார்த்திக்ராஜாவிடம் பேசினேன். அவர், `நேற்று உங்க தம்பியும், எங்ககூடப் படிக்கும் ஸ்வாதியும் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குப் போனாங்களாம். அங்கு யுவராஜ் என்பவர் மிரட்டி ரெண்டு பேரு செல்போனையும் பிடுங்கிட்டு கோகுல்ராஜைக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. ஏதோ பிரச்னை ஆயிடுச்சுபோல, ஸ்வாதியிடமே பேசிப் பாருங்க'' என்று ஸ்வாதியின் அம்மா நெம்பரைக் கொடுத்தார்.

அதையடுத்து ஸ்வாதி அம்மா நெம்பருக்கு போன் பண்ணினேன். ஸ்வாதி எடுத்துப் பேசினாங்க. `நானும் கோகுல்ராஜும் நேற்று திருச்செங்கோடு மலைக்கோயிலுக்குப் போனோம். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு உட்கார்ந்திருக்கும்போது, `யுவராஜ் அண்ணன் உங்களைக் கூப்பிடறாங்க'னு சொல்லி ரெண்டுபேரு வந்து சொன்னாங்க. நானும், கோகுல்ராஜும் அங்கே போனோம். வெள்ளைக்காரிலிருந்து வெளியே வந்த யுவராஜ், எங்க செல்போன்களைப் பிடுங்கிக்கொண்டு எங்களைத் தனித்தனியே மிரட்டி விசாரிச்சாங்க. ரெண்டு பேரும் லவ்வரா, என்ன சாதினு கேட்டாங்க.

கோகுல்ராஜ் முதல்ல ஃப்ரெண்டுனு சொன்னான். பிறகு அவன் தலையில அடிச்சதும் லவ் பண்ணுவதாகச் சொன்னான். உடனே கோகுல்ராஜை அடிச்ச அவுங்க, தீரன் சின்னமலை என்று எழுதி இருந்த அந்த வெள்ளைக் காரில் ஏத்திக்கொண்டு போனாங்க. என்னைக் கோயிலுக்கு வந்த ஒரு தம்பதிகூட அனுப்பிட்டாங்க' என்றார். `ஏன், அவன் எங்களுக்கு போன் பண்ணலை'னு கேட்டேன். `என் போனையும் பிடுங்கிட்டுப் போயிட்டதால பேச முடியவில்லை' என்றவரிடம், `சரி... திருச்செங்கோடு வாங்க... போலீஸில் புகார் கொடுக்கலாம்' என்று நான் சொன்னதற்கு, `இல்லை... அண்ணா நான் ஈரோட்டுக்கு வந்திடுறேன்' என்று சொன்னாங்க. இதையடுத்து, ஸ்வாதி பேசிய அனைத்தையும் ரெக்கார்டு பண்ணிக் கொண்டோம்.

கொஞ்சம் நேரம் கழித்து ஸ்வாதி, `அண்ணா திருச்செங்கோடே வர்றேன். நீங்களும் அங்கேயே வாங்க' என்று சொன்னார். அதையடுத்து நான், அம்மா, மாமா எல்லோரும் திருச்செங்கோடு போனோம். திருச்செங்கோடு பஸ் நிலையத்தில் ஸ்வாதியும், கார்த்திக்ராஜாவும் இருந்தாங்க. அவுங்களைக் கூட்டிக்கொண்டு திருச்செங்கோடு காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவரிடம் புகார் கொடுத்தோம். ஒரு மணி நேரம் கழித்து அந்தக் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் வந்தார். அவரிடம் சம்பவத்தைச் சொன்னோம். `யுவராஜ், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர்' என்று கூறி அவருக்கு போன் செய்து ஸ்டேஷனுக்கு வரச் சொன்னார்.

அதற்குப் பிறகு, எங்க அம்மா போனுக்கு ஈரோடு ரயில்வே போலீஸார் போன் பண்ணி, பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையத்தில் உள்ள தண்டவாளத்தில் கல்லூரி ஐ.டி. கார்டுடன் ஓர் உடல் கிடப்பதாகத் தகவல் வந்தது. அதையடுத்து, காவல் துறையினர் என்னைக் கூட்டிட்டுப் போனார்கள். நான் போய்ப் பார்த்தேன். அது என் தம்பியின் உடல்'' என்று பேச முடியாமல் விக்கித்தார்.

சிறிது நேரம் கழித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தவர், ``பிறகு, பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ஈரோடு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். `எங்க தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. இவ்வழக்கைக் கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும்' என்பதால் நாங்கள் கையொப்பம் போடவில்லை. அதையடுத்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார்கள். 27-ம் தேதி பிரேதப் பரிசோதனை செய்தார்கள். ஆனால் நாங்கள், `குற்றவாளிகளைப் பிடித்தால்தான் உடலை வாங்குவோம்' என்று கூறி உடலை வாங்கவில்லை. அதையடுத்து 6 பேரைக் கைதுசெய்தார்கள். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் 2-ம் தேதி உடலைக் கொடுத்தார்கள். நாங்கள் வாங்கிச் சென்று அடக்கம் செய்தோம்'' என்றார்.

இவை அனைத்தையும் யுவராஜும் அவருடைய ஆட்கள் 14 பேரும் கூண்டுக்குள் நின்று சிரித்த முகத்துடனுயே கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதையடுத்து, இவ்வழக்கு 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்து வேனில் அமர்ந்திருக்கும்போது கோகுல்ராஜ் அம்மா கோபம் கொண்டு, ``என் குழந்தையைக் கொன்ற நீங்கள் நல்லா இருக்க மாட்டீங்க, நாசமா போயிடுவீங்க'' என்று மண்ணைவாரி தூற்றினார். கதிரேசன் என்ற எஸ்.ஐ. ``கோர்ட் வளாகத்துக்குள் சத்தம் போடக் கூடாது'' என்றதால், கோகுல்ராஜ் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு, ``எங்க பையனைக் கொலை செய்த யுவராஜ், கட்சி அலுவலகத்துக்கு வருவதைப்போல வர்றான். அவுங்க கட்சிக்காரங்க கும்பலா நீதிமன்றத்துக்குள்ளே வரவேற்பு கொடுப்பதைப்போல கும்பலா வர்றாங்க. அதையெல்லாம் கேட்க மாட்டீங்களா, மகனைப் பறிகொடுத்த நாங்க பேசக் கூடாதா'' என்று கேட்டார்கள்.

மகனைப் பறிகொடுத்தவர்களுக்குத்தானே வலி தெரியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக