புதன், 14 ஏப்ரல், 2021

சூயஸ் கால்வாயில் தரை தட்டிய ‘எவா் கிரீன்' கப்பல் பறிமுதல் - எகிப்து அரசு நடவடிக்கை

dailythanthi.com : கெய்ரோ, ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான, உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எவா் கிரீன்' என்ற சரக்கு கப்பல், கடந்த மாதம் 23-ம் தேதி உலகின் முக்கிய நீர் வழித் தடங்களில் ஒன்றான எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றபோது கால்வாயின் குறுக்கே திரும்பி பக்கவாட்டில் தரை தட்டி நின்றது.ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் நீர்வழித்தடமான சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலை இணைக்கும் வழி பாதையாக உள்ளது. இதனால், சர்வதேச நாடுகளில் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்ப்ட்டது. அதன் பின் 6 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின் தரைதட்டி நின்ற கப்பல் மீண்டும் மிதக்கத்தொடங்கியது.இதையடுத்து, சூயஸ் கால்வாயில் நீர்வழிப்போக்குவரத்து மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது. ‘எவர் கிரீன்’ கப்பல் சூயஸ் கால்வாயின் பாதுகாப்பான பகுதியில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கப்பல் தரை தட்டியதால் ஏற்பட்ட பாதிப்பு, நீர்வழிப்போக்குவரத்து தடைபட்டதால் ஏற்பட்ட இழப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ’எவர் கிரீன்’ கப்பல் உரிமையாளர் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடு தரவேண்டும் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் சார்பில் எகிப்து நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு எகிப்து நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் இழப்பீடு வழங்கும் வரை ‘எவர் கிரீன்’ சரக்கு கப்பலை பறிமுதல் செய்ய எகிப்து அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ‘எவர் கிரீன்’ கப்பல் சூயஸ் கால்வாய் நிர்வாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையையே, இழப்பீடு தொகை தொடர்பாக எகிப்து அரசும், ‘எவர் கிரீன்’ கப்பல் நிறுவன நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக