புதன், 21 ஏப்ரல், 2021

DrTrupti Gilada : நிலைமை மிகமோசம்; உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம்” : மும்பை மருத்துவரின் கண்ணீர் வீடியோ!

kalaingarseythikal - Prem Kumar : இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் தொற்றுப்பரவலின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அதிலும் பல இடங்களில் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்காமல் காத்திருக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. அதாவது தற்போது வரையே 80 சதவீதமான படுக்கைகள் நிரம்பிவிட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

 இதனால் ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்ட பலவும் நோயாளிகளுக்கு கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் உள்ள மோசமான சூழல் குறித்து கண்ணீருடன் மருத்துவர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அச்சத்தை ஏற்பட்டுள்ளது.

மும்பை அரசு மருத்துவமனையில், தொற்றுநோய் நிபுணராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் ட்ருப்தி கிலாடா. இவர் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை பேசி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கண்ணீர் ததும்ப பேசும் ட்ருப்தி கிலாடா, “பெருந்தோற்றுக் காலத்தில் நாங்கள் உதவியற்றவர்களாக இருக்கின்றோம்.

இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையை, இதற்கு முன்பு நாங்கள் யாரும் கண்டதில்லை. இந்த சூழலில் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். நாங்கள் அதிகமான நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இங்கு படுக்கை இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு கொரோனா வரவில்லை என்றாலோ, கொரோனாவில் இருந்து மீண்டு வந்திருந்தாலோ உங்களை நீங்களே சூப்பர் ஹீரோ என நினைக்க வேண்டாம். அதேவேளையில் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக நினைக்காதீர்கள். அவ்வாறு நினைத்திருந்தால் அது தவறு என இந்த நிமிடமே தெரிந்துகொள்ளுங்கள்.

பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவ முடியாது. கொரோனா எல்லா இடங்களிலும் உள்ளது. அதனால் மாஸ்க் அணியாமல் வெளியே செல்லாதீர்கள். தகுதியுள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள். தடுப்பூசி கடுமையான பாதிப்பை தடுக்க உதவும்” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக