வியாழன், 29 ஏப்ரல், 2021

பரமகுடி மருத்துவர்களை இரவில் கைது செய்து துன்புறுத்திய பரமக்குடி போலீஸ் டி எஸ் பியின் அடாவடி

Sen Balan : இதுபோன்ற மிருகங்களை காவல்துறையிலிருந்து பணிநீக்கம் செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை.
பரமக்குடி அரசு கலைக்கல்லூரி தற்போது தற்காலிக கோவிட் கேர் செண்டராக மாற்றப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக பல ஊர்களில் இருந்தும் இளம் மருத்துவர்கள் அங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அந்த மருத்துவர்களுக்கு தனியான தங்கும் இடமோ, உணவு வசதிகளோ செய்யப்படவில்லை.
இருப்பினும் கொரொனா காலத்தை கருத்தில் கொண்டு அந்தக் கல்லூரியிலேயே தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.
அந்த கோவிட் கேர் செண்டரை நேற்று இரவு 8.00 மணியளவில் சுகாதார துணை இயக்குநர் பார்வையிட வந்துள்ளார்.
அங்கு சோதனை நடத்திய பின் இரவு 8.20க்கு மேல் வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேறிய பின் அங்கு புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட இரண்டு இளம் மருத்துவர்கள் பற்பசை, சோப்பு போன்றவை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பரமக்குடி டிஎஸ்பி  “என்னடா ஊரைச் சுத்திட்டு இருக்கீங்க? நீங்கலாம் டாக்டரா? டாக்டருக்கு எதுக்கு யமஹா பைக்? தூக்கி உள்ள வச்சிருவேன்” என மிரட்டியுள்ளார்.
“நாங்க புதுசா கோவிட் டியூட்டிக்கு வந்திருக்கோம். சோப்பு, பேஸ்ட் வாங்க வந்தோம்” என்று மருத்துவர்கள் பதில் அளித்துள்ளனர்.
“போலிஸ்கிட்டயே பதிலுக்கு பதில் பேசுறியா?” என போலிஸ் ஜீப்பில் இரண்டு மருத்துவர்களையும் ஏற்றி, நடு இரவு வரை பல இடங்களுக்கும் சுற்றியுள்ளார்.
காவல்நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லவில்லை.

அம்மருத்துவர்களை எங்கு கொண்டு சென்றனர் என்றும் தகவல் இல்லை.
கோவிட் செண்டரில் இருந்து மருத்துவர்களை டிஎஸ்பி பிடித்துச் சென்ற தகவல் பலருக்கும் சென்று டிஎஸ்பிக்கு தொலைபேசியில் உயரதிகாரிகள் அழைத்தும் யாருடைய அழைப்பையும் எடுக்கவில்லை. 

இறுதியில் மருத்துவ சங்க நிர்வாகிகளும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் பலமணி நேரம் போராடி அந்த இரு மருத்துவர்களையும் நடு இரவில் மீட்டுள்ளனர்.
 அதன்பிறகு இரு மருத்துவர்களும் குடித்துள்ளனர்,
அதனால் தான் பிடித்து வைத்தேன் எனக் காரணம் கூறியுள்ளார் அந்த டி.எஸ்.பி. இரவு 8.20 மணி வரை சுகாதாரத்துறை இணை இயக்குநருடன் இருந்தவர்கள் அந்த இரு மருத்துவர்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக அல்கஹால் பரிசோதனை செய்து குடிக்கவில்லை என்றும் நிரூபிக்கப்பட்டுவிட்டது. உண்மையில் அந்த டி.எஸ்.பியிடம் இருந்து தான் ஆல்கஹால் நாற்றம் வந்துள்ளதாக கூறுகின்றனர்.  

இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் பயந்து போன அந்த இரு மருத்துவர்களும் மிகை இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இனி மீண்டும் அவர்கள் கோவிட் பணிக்கு வருவார்களா என்பது சந்தேகமே.  
 கோவிட் சிகிச்சையில் இருக்கும் மருத்துவர்களிடமே, குடித்துவிட்டு ரவுடி போல அராஜகம் செய்யும் இவர் சாமானிய பொதுமக்களை எப்படி நடத்துவார்? தமிழ்நாட்டில் சாத்தான்குளம் சம்பவங்கள் எத்தனை முறைதான் மீண்டும் மீண்டும் நடக்கும்?
காவல்துறையில் இருக்கும் இவரைப் போன்ற கரும்புள்ளிகளால் மொத்த காவல்துறைக்குமே அவப்பெயர். காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு  இதுபோன்றோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு,
 காவல்துறை உங்கள் நண்பன்  என இன்னும் நம்பும் பொது மக்களில் ஒருவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக