சனி, 24 ஏப்ரல், 2021

ஸ்டெர்லைட் ஆலையை அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாமே: உச்ச நீதிமன்றம் கேள்வி

May be an image of text that says 'ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு தகவல் BREAKING NEWS பாடம் கற்கவில்லை மத்திய அரசு சோனியா காந்தி மத்திய அரசின் கொள்கையால் மாநில அரசுகளும் பெரும் SÚN NEWS'

Vivekanadan T :  சென்னை அரசு பொது மருத்துவமனையில் கூட ஆக்சிஜன் சிறிய அளவில்  தயாரிக்கும் கட்டமைப்பு இருக்கிறது....
திராவிட இயக்க தலைவர்கள்  எங்களுக்காக செய்த சாதனை அது ....
ஆனால் மருத்துவ உள்கட்டமைப்பு என்பதையே அறியாத மத்திய பாசிச  ஆட்சியாளர்களால் ,
அரசு மருத்துவ நிறுவனங்களை செயல்படுத்தி தடுப்பூசிகளை தயாரிப்பதை மறுத்து,
தனியார் முதலாளிகளிடம் எல்லா ஒப்பந்தத்தை கொடுத்திவிட்டு,  
பின்பு மத்திய அரசுக்குக் கொடுக்கும் 50% தடுப்பூசிக்கு பழைய விலையான ரூ.150 வசூலிக்கப்படும் என்றும்,
மீதமுள்ள 50% தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.400 என்ற விலையிலும், தனியார் மருத்துவமனைகளுக்கு டோஸ் ஒன்றிற்கு ரூ.600 என்ற விலையிலும் விற்கப்படும் என்று சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது ..?


முதலாவதாக பிஜேபி அரசு தடுப்பூசி குறித்த தனது பொறுப்பை மாநில அரசுகளிடம் கொடுத்து நழுவி கொண்டது. இரண்டாவதாக, தடுப்பூசி தயாரிக்கும் கார்ப்பரேட் முதலாளி மாமாவை  நேரடியாக மக்களைக் கொள்ளையடிக்க வழியை உருவாக்கி இருக்கிறார்கள் ; .
நாடே தடுப்பூசி தட்டுப்பட்டாலும் , ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பட்டாலும் திணறி வருகையில் ஒரு நிறுவனத்தால் சிறிதும் கூச்சமின்றி விலை உயர்வை அறிவிக்க முடியுமா?
காரணம் வெளிப்படையான குரோனி கேபிடலிசம்....
பொறுப்பற்ற பாசிச மோடி அரசு இப்படி அக்கறை இல்லாமல் இருக்கையில் அதனால் உருவான மருத்துவ சேவை பற்றாக்குறையால் மக்கள் திணற ,
இது தான் சாக்கு என்று ஆக்சிஜன் உற்பத்தி செய்வதைக் காரணமாக வைத்து மூடப்பட்ட தமது ஆலையை மீண்டும் இயக்குவதற்கு தங்கள் லாபியை ஆடவிட்டு அனில் அகர்வாலின் ஸ்டெர்லிட் மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருக்கிறது ...
அது மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் 162 கம்பெனிகள் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வழங்கி இருக்கிறது மோடி அரசு,....
இப்படி தாமதமான நடவடிக்கைகள், ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதமாக எடுக்கப்பட்டதாகவும் சந்தேகம் வராமல் இல்லை...
இயற்கை பேரிடர், பெருந்தோற்றுக் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளும், கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துகள் மட்டுமே அதிகளவில் உயர்ந்துள்ளது என்பதே உண்மை...

 

.hindutamil.in   : 2018 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடக்க அரசு விரும்பவில்லை, ஸ்டெர்லைட் ஆலையை எந்த வகையிலும் மீண்டும் திறக்கக்கூடாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ள நிலையில் தங்களை அனுமதித்தால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரித்து தருவதாக வேதாந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அரசியல் கட்சித்தலைவர்கள் நாட்டில் நிலவும் கரோனா இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி வேதாந்தா நிறுவனம் மீண்டும் உள்ளே நுழைய முயல்கிறது இந்த சூழ்ச்சியில் சிக்க யாரும் தயாராக இல்லை என்று அறிக்கை விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் கடுமையான எதிர்ப்பலை கிளம்பியது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை எதிர்க்கொள்ளும் முன் தமிழக அரசு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டியது. இதிலும் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலை வரக்கூடாது என தெரிவித்தனர்.அரசே ஸ்டெர்லைட் ஆலையை ஏற்று நடத்தினால் சரியாக இருக்குமா? என ஆட்சியர் கேள்விக்கு நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தனது தரப்பு வாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதை எதிர்த்தது. வேதாந்தா நிறுவனத்தின் ஆக்சிஜன் தயாரிப்பு கலனை திறப்பதற்கு பதிலாக நாடு முழுவதிலும் உள்ள மற்ற ஆலைகளில் இருந்து ஆக்சிஜனை உற்பத்தி செய்ய மத்திய அரசு கவனம் செலுத்தலாம் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.

மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் தனது வாதத்தில், ”நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை தற்போது அதிகரித்துள்ளது, எனவே இந்த விவகாரத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஆக்சிஜன் தயாரிக்கட்டும் அல்லது தமிழக அரசே ஆலையை கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கட்டும், மொத்தத்தில் ஆக்சிஜன் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோன்சால்வேஸ் தனது வாதத்தில், “ கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது, ஆனால் ஆலையை திறப்பதில் அப்பகுதி மக்களுக்கு கடும் ஆட்சேபனை உள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “பின்னர் ஏன் 3 ஆண்டுகளாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யவில்லை? ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை”. என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு அரசு தரப்பு வழக்கறிஞர், “ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் வசிக்கும் மக்கள், ஆலையை மீண்டும் திறக்க கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் இன்றைய தினம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்தில் நாங்கள் வழங்குகிறோம்.

ஆலையை நாங்களே திறக்கலாம் என்றாலும்கூட அந்த பகுதியில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கின்றது. மக்கள் இன்னும் ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக நம்பவில்லை. 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் போன்று மற்றொரு அசம்பாவித சம்பவம் நடப்பதையும் தமிழக அரசு விரும்பவில்லை”. எனத் தெரிவிக்கப்பட்டது

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தற்போதைய சூழலில் ஆக்சிஜன் அவசியம் தேவை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை அல்ல எந்த ஆலையாக இருந்தாலும் அதன் கட்டமைப்பை பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு,

மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ள நேரத்தில் ஆலை பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதாக அரசு கூறுகிறது என்றால் அந்த நிறுவன விவகாரத்தை ஒதுக்கி விடலாம்

ஆனால் வேதாந்தா நிறுவனத்துடன் பிரச்சனை இருப்பதால், ஆக்சிஜன் தயாரிப்புக்கு எதிர்க்கிறீர்கள் என்றால் ? இது என்ன வகையிலான வாதம், ஆக்சிஜன் தயாரிப்பில் நீங்கள் உங்கள் கடைமையை செய்ய ஏன் மறுக்கிறீர்கள்?” எனக்கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோன்சால்வேஸ் வாதத்தில், “தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை, மேலும் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் இருப்பு உள்ளது என தமிழக அரசு தலைமை வழக்கறிஞரே நேற்று கூறியுள்ளதை கருத்தில் கொள்ளவேண்டும்”. என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தற்போது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் உங்கள் மாநிலத்தின் தேவைக்கு ஆக்சிஜன் இருப்பு அதிகமாக இருக்கிறது என்பதால் ஆக்சிஜன் தயாரிக்க மாட்டோம் என கூறுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கு மீதான விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக