ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

அரக்கோணம் இரட்டை கொலை: நடந்தது என்ன?

அரக்கோணம் இரட்டை கொலை: நடந்தது என்ன?

minnambalam : அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட சோகனூரில் இரண்டு இளைஞர்களின் படுகொலை அதற்குப் பிறகான போராட்டங்கள் தமிழகத்தையே பரபரப்பாக்கிவிட்டன.

திருப்பத்தூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் பெருமாள் ராஜபாட்டை கிராமத்தைச் சேர்ந்த வன்னிய சமூகத்தின் இளைஞர்களுக்கும், சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மூவருக்குப் பலமான அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் சாதி கலவரம் அபாயம் புகைந்துகொண்டு வந்தது. தேர்தல் விரோதத்தால் நடந்த மோதல் என்றும், திட்டமிட்ட சாதி வன்கொடுமை கொலை என்றும், மணல் கொள்ளையில் ஏற்பட்ட மோதல்கள் என்றும் பலரும் பலவிதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை மூன்று நாட்களாக வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் உறவினர்கள். அதனால், அந்த பகுதியில் மேலும் ஏதும் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வடக்கு மண்டல ஐஜி சங்கர், வேலூர் டிஐஜி காமினி, விழுப்புரம் டிஐஜி பாண்டியன், இராணிப்பேட்டை எஸ்.பி. விஜயகுமார், திருப்பத்தூர் எஸ்.பி சிவக்குமார் உட்பட அதிகாரிகளும் போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம்(ஏப்ரல் 9) இரவு அரக்கோணம் சென்ற விசிக தலைவர் திருமாவளவன் இரவு 12.30 மணிவரை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களிடமும் ஊர்க்காரார்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

“இந்த சம்பவத்தில் அதிகாரிகள் நியாயமான முறையில் நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளனர். சேரவேண்டிய அரசு சலுகைகளும் உடனடியாக செய்துகொடுக்கப் பேசியிருக்கிறேன், நீங்கள் சடலத்தை வாங்கி அடக்கம் செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.

அப்போது ஒரு தலித் கட்சியினர் உள்ளே புகுந்து சடலத்தை வாங்கமாட்டோம் என்று பிடிவாதம் செய்துள்ளனர். சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு திருமாவும் புறப்பட்டுவிட்டார். இதையடுத்து நேற்று(ஏப்ரல் 10) டிஐஜி காமினி, டிஐஜி பாண்டியன், எஸ்.பி விஜயக்குமார், சிவக்குமார் நான்குபேரும் தொடர்முயற்சிகளில் ஈடுபட்டதால்,உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த படுகொலை எதற்காக நடத்தப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பதை அறிந்துகொள்ள விசாரணையில் இறங்கினோம்.

ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் (தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விசிக வேட்பாளராகத் திருவள்ளூரைச் சேர்ந்த கவுதம சன்னா, அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ ரவி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். வழக்கமாக பாமக போட்டியிடும் தொகுதியில் விசிகவினர் வீரியமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வார்கள். விசிக வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் பாமகவினர் தீவிரமாக வரிந்துகட்டிக்கொண்டு எதிர் அணியினருக்கு வேலை செய்வார்கள். இதனால் இரு தரப்புக்கும் பல தேர்தல்களில் பல இடங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்ற வரலாறும் உண்டு. அப்படிதான் விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பட்டியல் இனத்தவரும், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வன்னிய சமூகத்தினர் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்தனர். திமுக கூட்டணியில் இருக்கும் வன்னிய சமூகத்தினர் விடுதலைச் சிறுத்தை வேட்பாளருக்காக தேர்தல் பணியாற்றியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

ஆனாலும், அரசியல் ரீதியாக அரக்கோணம் தொகுதிக்குள் இரு தரப்பினருக்கும் சிறு சிறு வாய் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கு பின்னால் முன் பகையும் இருந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மேலும், “ஊரின் அருகில் பாலாறு ஓடுகிறது, அந்த ஆற்றில்தான் பலரும் மணலை கொள்ளையடித்து வருகிறார்கள். இரு சமூகத்தின் இளைஞர்களும் ஒன்றாகத்தான் மணல் வேட்டைக்குப் போவார்கள் ஒன்றாக சேர்ந்து மதுவும் அருந்துவார்கள். மணல் விவகாரத்தில் பட்டியலின சமூகத்தினர் பெரும்பாலும் கூலி வேலைக்கு செல்கிறார்கள். வன்னியர் சமூகத்தினர் மணலை அள்ளி விற்கிறார்கள். இருந்த பிசினஸ் மோட்டிவால் பட்டியிலனத்து இளைஞர்கள் பலியாகிவிட்டார்கள்” என்கிறார்கள் வருவாய்த்துறை அதிகாரிகள்.

தேர்தல் முடிவடைந்து மறுநாள் ஏப்ரல் 7ஆம் தேதி, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அன்று மாலை குருவராஜ பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளனர் சோகனூர் இளைஞர்களும், பெருமாள் ராஜபாட்டை இளைஞர்களும். அங்கே உரசலும் பார்வையால் மோதலும் துளிர்விட்டிருக்கிறது. சோகனூர், பெருமாள் ராஜபாட்டை இரண்டு கிராமத்திற்கும் சுமார் 400 மீட்டர் இடைவெளிதான் இருக்கும். இரண்டு கோஷ்டிகளுக்குள் விரிசல்கள் ஏற்பட்டால் மணல் கொள்ளைக்கு லோடுமேன் ஆள் கிடைக்காது என்பதால் இருதரப்பு இளைஞர்களையும் அழைத்து சமாதானம் செய்யலாம் என்று இரு கிராமத்துக்கும் மத்தியில் காலி பிளாட்டில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

பீர், பிராந்தி என மதுபானங்கள் அருந்திக்கொண்டு. பட்டியல் இனத்தைச் சேர்ந்த எட்டுபேரும், வன்னியர்கள் சமூகத்தைச் சேர்ந்த 15 பேரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு தரப்பினர் திடீரென்று பீர் பாட்டில்களாலும் கட்டையாலும் தாக்க தொடங்கினர். அதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். மூவருக்கு அடிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் குற்ற எண் 80/ 2021 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து, வன்னியர்கள் 20 பேர் மீது புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். அதில் ஒருவர் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனி. காவல்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்துப் பேசினார்கள்.

’சம்பவ இடத்தில் இல்லாதவர்களை சேர்த்தால் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள், உண்மையான குற்றவாளிகள் பெயரை குறிப்பிடுங்கள், நாங்களே முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம்”என்று கூறிய போலீஸார், மேலும்... “ அரசாங்கத்திடம் பேசியிருக்கிறோம். தற்போது இரண்டு குடும்பத்தாருக்கும் தலா நாலரை லட்சம் காசோலை வழங்குகிறோம். குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்தபிறகு ஒரு தொகையை பெற்று கொடுக்கிறோம், இருவருக்கும் விதவை பென்ஷன் மாதம் ஐந்து ஆயிரம், 17% டிஏ வழங்க ஆணைகள் இதோ’ என்று வழங்கிய அதிகாரிகள், ‘ உங்களுக்கு நிலம், வீடு, அரசு வேலை அனைத்தும் வழங்கப்படும். கொலை செய்தவர்கள் குடும்பம் நடுத் தெருவில் நிற்கும் அவர்கள் சிறைக்குப் போவார்கள், பிறகு ஆயுள் தண்டனை கிடைக்கும். இருக்கும் சொத்துக்களையும் அழித்துவிடுவார்கள்’ என்று ஒரு மாதிரியாக நீண்ட நேரம் பேசியதன் பிறகே இளைஞர்களை இழந்த உறவினர்கள் பிரேதத்தைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டு இன்று உடலை அடக்கம் செய்ய இருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மதன் என்பவர் மீது கொலை வழக்கு உட்பட ஐந்து வழக்குகள் உள்ளன. அஜித் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. மேலும் மணல் கடத்தலைத் தடுக்கவந்த தாசில்தார் மீது லாரியைவிட்டு மோதிய வழக்கும் உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக