செவ்வாய், 6 ஏப்ரல், 2021

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்!

பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து  மறைந்தார்!

 மின்னம்பலம் :மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் நிறுவனர் வே.ஆனைமுத்து முதுமை காரணமாக தனது 96 வயதில் இன்று (ஏப்ரல் 6) காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், “ ‘என் வாழ்வை திசைமாற்றியவர் மறைந்தார்’  நான் பயணிக்க வேண்டிய திசை என்ன என்று புரியாமல் இருந்த 1992-ஆம் ஆண்டு நிறப்பிரிகை பத்திரிகை சார்ந்த நடவடிக்கைகளில் நண்பர்களாக ஆன கிராமியன், துப்பாக்கி தொழிற்சாலை அழகேசன் ஆகியோரை ஒரு நாள் மாலை திருச்சி கோட்டை ஸ்டேஷனில் சந்தித்தேன். ஏதெனும் ஒரு வாசிப்புக் குழு (reading group) உருவாக்க திட்டம்.

அப்போது நண்பர் கோ.ராஜாராம் நீங்களெல்லாம் ஃபிரெஞ்சு, ஐரோப்பிய அறிஞர்களைத்தான் படிப்பீர்கள்; பெரியாரையெல்லாம் படிக்க மாட்டீர்களா என்று கேட்டு எனக்கு கடிதம் எழுதியிருந்ததைக் கூறினேன். அதனைத் தொடர்ந்து பெரியாரை வாசிக்கலாம் என நினைத்தோம். எப்படி வாசிப்பது, எதை வாசிப்பது என்ற கேள்வி எழுந்தபோதுதான் கிராமியன் சொன்னார், ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் மூன்று வால்யூம் இருக்கிறது. அவற்றை வாசிக்கலாம் என்றார். அவரே அந்த வால்யூம்களை நண்பர்களிடம் கடனாகப் பெற உதவி செய்தார். சேர்ந்து படிக்க ஒரு நண்பரின் அறையையும் ஏற்பாடு செய்தார்.

முப்பத்திரண்டு வயதில் என் வாழ்க்கையை திசைமாற்றிய அந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த மூன்று தொகுப்புகளும் ஒரு புதிய ராஜன் குறையை உருவாக்கின. அ.மார்க்ஸ் கொடுத்த உற்சாகம்/ அழுத்தத்தால் பெரியாரியம் குறித்து நான் எழுதிய கட்டுரை நிறப்பிரிகையில் வெளியானது. என்னை ஆய்வாளனாக, எழுத்தாளனாக அடையாளம் காட்டியது.

ஐயா ஆனைமுத்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் தினத்தன்று மறைந்துவிட்டார். அவருக்கு என் மனமார்ந்த அஞ்சலிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்.

எஞ்சியுள்ள வாழ்நாளிலும் அவருக்கும், அவருடைய பெரியார் சிந்தனைகள் தொகுப்பிற்கும் கடன் பட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக