செவ்வாய், 27 ஏப்ரல், 2021

இந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!

இந்திபேசா மாநில முதல்வர்களுக்கு வைகோ கடிதம்!

minnambalam : புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது குறித்து இந்தி பேசாத மாநில முதல்வர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்ரல் 27) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தி பேசாத மாநிலங்களின் முதல்வர்களோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக அல்லாத கட்சிகளின் முன்னணித் தலைவர்களுக்கும் வைகோ எழுதியுள்ள அந்த கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

“இதுவரை இந்தியைப் பரப்பியது போதாது என்று, புதிய கல்விக்கொள்கையின் வழியாக, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்து திணிக்கும் முயற்சிகளை, பாரதிய ஜனதா கட்சி அரசு தொடங்கி இருக்கின்றது. 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுகின்றவர்கள் வெறும் 24000 பேர்தான். பேச்சுவழக்கில் இல்லாத, இறந்து போன ஒரு மொழியின் வளர்ச்சிக்காக, பல நூறு கோடி ரூபாய்கள் செலவில், பல பல்கலைக்கழகங்களைத் தோற்றுவித்து இருக்கின்றார்கள். அதேவேளையில், பல கோடி மக்கள் பேசுகின்ற பெங்காலி, மராட்டி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, மைதிலி உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளின் வளர்ச்சிக்குப் போதுமான நிதி ஒதுக்கவில்லை; நடுவண் பல்கலைக்கழகங்களையும் தொடங்கவில்லை.

புதிய கல்விக்கொள்கை, கல்வியை முழுக்க முழுக்க மைய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கின்றது. கூட்டு ஆட்சித் தத்துவத்தையும், அதிகாரப் பரவலையும் மறுக்கின்றது. மாநில அரசுகளிடம் இருந்து கல்வியை, முற்றுமுழுதாகப் பறித்துக் கொள்வதே, இக்கொள்கையின் நோக்கம் ஆகும். மாநிலங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு குழந்தைகள் சிந்திக்கும் உரிமையை முடக்கி விடுகின்றது. இன்று இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். இந்த ஆண்டில் மட்டும், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

ஆனால், மருத்துவக் கல்வியில் மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கின்ற வகையில், நடுவண் அரசு, நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. அதனால், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவக் கல்வியில் சேருவதற்குப் பெருந்தடையை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேனிலைக் கல்வி இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பு எண்களின் அடிப்படையில்தான் அனைத்து உயர் கல்வியிலும் சேர்க்கை நடைபெற வேண்டும். மாறாக, அதற்கு ஒரு தனித்தேர்வு என்பது, தகுதி, திறமை என்று கூறி, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் கல்வி உரிமையை, முற்று முழுதாகப் பறித்து விடும். நீட் தேர்வு பயிற்சி மையங்கள் என்ற பெயரில் இலட்சக்கணக்கான ரூபாய் கொள்ளை நடைபெறுகின்றது. ஏழைகளுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக ஆகி விடும்.

தற்போது நடைமுறையில் இருக்கின்ற 10+2 என்ற அமைப்பைச் சிதைத்து, 5,3,3,4 என்ற புதிய கல்வி அமைப்பைக் கொண்டு வருகின்றார்கள். அதனால், மாணவர்கள் இடைநிற்றல்தான் கூடுமே தவிர, கல்வியின் தரம் உயராது. இதுகுறித்து, மாநில அரசுகளிடம் எந்தக் கருத்தும் கேட்கவில்லை. மாநில அரசுகளிடம் இருக்கின்ற கல்வியை, முற்று முழுதாகத் தனியார்மயம் ஆக்குகின்ற வகையில்தான் புதிய கல்விக்கொள்கை இருக்கின்றது. மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, தனியார் பள்ளிகள் தாங்கள் ஈட்டுகின்ற இலாபத்தை, முதலீடாக மாற்ற வகை செய்கின்றது. கல்விக் கொள்ளை நடைபெற வழி வகுக்கின்றது.

15 ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து இருந்தாலும், அது உயர்கல்விக்கான தகுதி இல்லை என புதிய கல்விக்கொள்கை சொல்லுகின்றது. அதன்பிறகு, இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வில் பெறுகின்ற மதிப்பு எண்களை வைத்துத்தான் கல்லூரியில் சேர்ப்பார்களாம். இது உயர்கல்விக்கு வழி வகுக்கின்றதா? அல்லது இலட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி பெறுவதைத் தடுத்து, அவர்களைக் கூலித் தொழிலாளர்களாக மாற்றுகின்ற முயற்சியா?

எனவே, இந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து, மாநில மொழிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டவும், சாதி மதப் பாகுபாடுகளை நிலைநிறுத்தி, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கவும் திட்டம் வகுத்துச் செயல்பட்டு வருகின்ற, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் குழுக்கள் இயக்கி வருகின்ற, பாரதிய ஜனதா கட்சி அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து, தாங்கள் விரிவாக ஆய்வு செய்து, தங்கள் மாநிலத்தின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையில், எதிர்ப்புக் கருத்தை வெளிப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்”என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

-வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக