வெள்ளி, 16 ஏப்ரல், 2021

நடிகர் விவேக் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

நடிகர் விவேக்குக்கு இன்று (16/04/2021) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு 'எக்மோ' கருவி மூலம் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதாக திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர். 

 இந்த நிலையில், நடிகர் விவேக்கின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ராஜு சிவசாமி மற்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.


 அப்போது பேசிய மருத்துவர் ராஜு சிவசாமி, "நடிகர் விவேக்கின் உடல்நலக்குறைவுக்கு கரோனா தடுப்பூசி காரணமில்லை. இன்று முற்பகல் 11.00 மணிக்கு சுயநினைவின்றி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் நடிகர் விவேக். அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். எக்மோ உதவியுடன் ஐசியூ பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எக்மோ உதவியுடன் உள்ள விவேக்கின் உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியுள்ளது. இதயத்தின் இடப்புற ரத்தக் குழாயில் அவருக்கு 100% அடைப்பு இருந்தது. விவேக்கிற்கு ஏற்பட்டது இது முதல் மாரடைப்பு; அவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்தது. அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை செய்து இதயக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

 அதைத் தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், "மாரடைப்பு என்பது ஒரு நாளில் ஏற்படாது என மருத்துவர்கள் கூறினர். மிகவும் நல்லெண்ணத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் விவேக். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் மனவேதனை அளிக்கிறது. நடிகர் விவேக்கின் உடல்நிலை தற்போதைக்கு மோசமான நிலையில்தான் உள்ளது. ஆர்டி - பிசிஆர் பரிசோதனை, சி.டி.ஸ்கேனிலும் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும் தொடர்பு இல்லை" இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக