சனி, 3 ஏப்ரல், 2021

அஸ்ஸாம் பாஜக எம்எல்ஏ காரில் வாக்குகள் பதிவான இயந்திரம் வந்தது எப்படி?

BBC :அஸ்ஸாமில் பாஜக வேட்பாளர் ஒருவரது காரில் இருந்து வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம்,
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரட்டாபாரி என்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 4 தேர்தல் பணி அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்யவும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“ஏப்ரல் 1ஆம் தேதி ரட்டாபாரி தனித் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா எம்.வி பள்ளி வாக்குச்சாவடியில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் துரதிருஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டனர்.
ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி, மூன்று தேர்தல் பணி ஊழியர்கள், ஒரு காவலர், ஒரு ஊர்க்காவல் படை வீரர் அந்த குழுவில் இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.
   மேலும்,”தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு ஆயுதம் தாங்கிய காவலர், வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இருந்த அலுவலர்களை பாதுகாப்பு தொடர் வாகனத்தில் அழைத்துச் சென்றார். அன்றைய தினம் ஒரே சாலையில் 1,300 வாகனங்களுக்கும் மேலாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு 9 மணியளவில் நீலம் பஜார் பகுதியில் சென்றபோது தேர்தல் அலுவலர்கள் இருந்த வாகனம் பழுதடைந்தது. இதனால் பாதுகாப்புக்கு சென்ற வாகனத்துடனான தொடர்பை தேர்தல் அலுவலர்கள் வந்த வாகனம் இழந்தது. பின்னர் செல்பேசியில் அந்த பாதுகாப்பு வாகனத்தில் இருந்த அதிகாரியிடம் விவரத்தை அலுவலர்கள் தெரிவித்தனர். அவர் மாற்று ஏற்பாடு செய்வதற்கு உள்ளாக, தேர்தல் அலுவலர்கள், தாங்களாகவே முடிவெடுத்து விரைவாக வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு செல்ல ஏதுவாக கரிம்கஞ்ச் நோக்கிச் சென்ற வாகனத்தில் லிஃப்ட் வாங்கிச் சென்றனர். ஆனால், இரவு 10 மணியளவில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டு கற்களை வீசத் தொடங்கியது. அந்த கும்பல் தலைவன் வாகனம் யாருடையது என கேட்டபோது அதில் இருந்தவர்கள், அருகாமை தொகுதியான பதார்கண்டியில்போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலுடையது என்று பதிலளித்துள்ளனர். அப்போதுதான் தாங்கள் செய்த தவறை உணர்ந்த தேர்தல் அலுவலர்கள், பாதுகாப்பு அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்ட தகவலை தெரிவித்தனர். சம்பவம் பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே மாவட் காவல் கண்காணிப்பாளர், தேர்தல் அதிகாரி சம்பவ பகுதிக்கு விரைந்தனர். விசாரணையில், அநத் கார் பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலின் மனைவியுடையது என தெரிய வந்தது. ஆனாலும், கும்பல் கோபத்துடன் கற்களைக் கொண்டு தாக்கியதில் மாவட்ட எஸ்.பி காயம் அடைந்தார். பிறகு பாதுகாப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில், அது பாதுகாப்பான நிலையில் சீலிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக் கருதப்படும் மூன்று தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரி பணியிடை நீக்கப்படும் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வெளிப்படையாக நடத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், ரட்டாபாரி இந்திரா எம்.வி பள்ளி வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நடந்தது என்ன?

அஸ்ஸாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் இரண்டாவது கட்டமாக 39 தொகுதிகளுக்கான தேர்தல் வியாக்கிழமை நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிந்த சில மணி நேரத்தில் சீலிடப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று காரில் இருப்பது போன்ற ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவத் தொடங்கியது.

அந்த காரானது அருகேயுள்ள மற்றொரு தொகுதியான பதார்கண்டியின் பாஜக வேட்பாளர் கிருஷ்ணேந்து பாலுக்குச் சொந்தமானது என்று அஸ்ஸாமின் மூத்த பத்திரிகையாளர்களுள் ஒருவரான அடானு புயான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். உண்மையில் அந்த பொலீரோ கார், பாலின் மனைவி மதுமிதா பாலின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த வீடியோ வெளியானதும் அரசியல் களம் சூடானது. ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் விவகாரத்தைக் கையில் எடுத்தனர். கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை பிரியங்கா வலியுறுத்தினார். தேர்தல் நேரத்தில் பாஜகவினருக்குச் சொந்தமான வாகனங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கைப்பற்றப்படுகின்றன. அதுபற்றி தெரியவந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரியங்கா கூறியிருந்தார்.

தங்களது வாகனம் பழுதானதால் சாலையில் சென்ற காரில் அதிகாரிகள் வாக்குப் பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றதாக சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் கொண்ட கும்பல் வாகனத்தை மறித்துத் தாக்கியதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. வாக்குகள் பதிவான இயந்திரம் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை கேலி செய்திருக்கும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையத்தின் கார் மோசமாக இருக்கிறது, பாஜகவின் விதியும் மோசமாக இருக்கிறது. இந்திய மக்களாட்சியின் நிலையும் மோசமாக இருக்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இது தொடர்பாக கரீம்கஞ்ச் மாவட்ட பாஜக தலைவர் சுப்ரதா பட்டாச்சார்யாவிடம் கேட்டபோது உண்மையை அறிந்து கொள்ளாமல் பலரும் பேசுவதாகக் கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதானதால், ஓட்டுநர் மட்டுமே வந்த ஒரு காரில் லிப்ட் கேட்டு அவர்கள் வந்ததாகக் கூறிய பட்டாச்சார்யா, சில சமூக விரோதிகள் காரை வழிமறித்துத் தாக்கியதாகக் கூறினார். வாக்குப் பதிவு இயந்திரம் வேறு தொகுதிக்குச் சொந்தமானது, சம்பவம் நடந்தது வேறொரு இடத்தில் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக பாஜக எம்எல்ஏ கிருஷ்ணேந்து பாலை தொடர்பு கொள்ள பிபிசி பல முயற்சி செய்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று அஸ்ஸாமில் மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நடக்க உள்ளது. மே இரண்டாம் தேதி முடிவுகள் வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக