புதன், 7 ஏப்ரல், 2021

நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை! சரத்குமார் மீதான தண்டனை நிறுத்திவைப்பு ! ராதிகாவுக்கு பிடி வாரண்ட்!

மின்னம்பலம் :செக் மோசடி வழக்கில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் மற்றும் அவரது மனைவி நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் சரத்குமார் மீதான தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த 2014ம் ஆண்டு, 'ரேடியன்ஸ் மீடியா' நிறுவனத்திடம் இருந்து ரூ.1.5 கோடியைக் காசோலை மூலமாகவும், ரூ.50 லட்சம் ரொக்கமாகவும் கடனாக பெறப்பட்டது.

‘இது என்ன மாயம்’ திரைப்படத்தைத் தயாரிப்பதற்காகப் பெறப்பட்ட பணத்தை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரும்பக் கொடுத்த பிறகு, படத்தை வெளியிடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் சரத்குமார் தரப்பு கடனை திருப்பிக்கொடுக்காமல் ‘பாம்பு சட்டை’ படத்தைத் தயாரித்தது. இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் சரத்குமார் தரப்பு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

அதில், ”கடனை கொடுக்கும் வகையில், சரத்குமார் தரப்பில் 7 காசோலைகள் வழங்கப்பட்டன. அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை எனத் திரும்பி வந்துவிட்டது” எனக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டார். 2 வழக்குகளில் ராதிகா மற்றும் ஸ்டீபன் ஆகியோரும் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட்டனர்.

தாங்கள் மோசடி செய்ய நினைக்கவில்லை. வட்டி அதிகமாகக் கேட்டதால் பணத்தை உடனே திரும்பச் செலுத்த முடியவில்லை என்று சரத்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இவ்வழக்கில் இன்று (ஏப்ரல் 7) மூன்று பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், 7 வழக்குகளில் எதிர் மனுதாரராக இருக்கும் சரத்குமாருக்கு தலா ஒரு வருடமும், ராதிகா மற்றும் ஸ்டீபனுக்கு 2 வழக்குகளில் தலா ஒரு வருடமும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் மேல்முறையீடு செய்யும்வரை, தங்களது தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மூவர் தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், சரத்குமார், ஸ்டீபன் ஆகியோரின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. விசாரணைக்கு ஆஜராகாத ராதிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிடப்பட்டது. கொரோனா பாதித்ததால், விசாரணைக்கு ஆஜராகவில்லை என ராதிகா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

-சக்தி பரமசிவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக