வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை!

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை!

minnambalam.com: தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்ற பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமித்தது மத்திய அரசு.  இவரது நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5 இன் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்ய கூடியவருக்கு, 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும், அதில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை சார்ந்த பணி அனுபவமும் இருக்க வேண்டும்.

ஆனால் கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமை தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது. எனவே இவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக மத்திய அரசும் கிரிஜா வைத்தியநாதன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவில் கிரிஜா வைத்தியநாதன் மூன்றரை ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்ததாகவும், தலைமைச் செயலாளராக இருந்த போது அவர் சுற்றுச்சூழல் துறை சார்ந்த விவகாரங்களையும் கவனித்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராகக் கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு முடியும் வரை கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்கத் தடை விதிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள் இந்தப் பதவிக்கு சட்டப்படி தேவைப்படும் தகுதியைக் கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து இந்த வழக்கு ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக