வெள்ளி, 2 ஏப்ரல், 2021

செத்தல் மிளகாயில் ஆபத்தா?

May be an image of food
Farm to Table : செத்தல் மிளகாயில் ஆபத்தா? Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS, Post Graduate Diploma in Legal Medicine (DLM ), MD (Forensic Medicine) (குறிப்பு :- இப்பதிவில் உள்ள படம் வீட்டுத் தோட்டம் செய்பவர் ஒருவரால் நெற்றுக்கு விட்டதாக பகிரப்பட்டது. அதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு இங்கு பகிரப்படுகிறது. இதை உண்பதோ, கையாள்வதோ, நடவு செய்வதோ பின்விளைவுகளைத் தரும் என்பதனை Farm to Table அறிவுறுத்துகிறது.) அண்மையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செத்தல் மிளகாயில் aflatoxin என்ற புற்று நோயினை உருகவாகும் toxin கண்டறியப்பட்டது. இவ்வாறு கண்டறியப்பட்ட செத்தல் மிளகாய் தனியார் களஞ்சியங்களில் இருந்து பாரிய அளவில் அதாவது 20 மெட்ரிக் தொன் என்ற அளவில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது உரிய தரச் சான்றிதழ் வரமுன்னரே இவ்வாறு விடுவிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டுள்ளது .
இந்த செத்தல் மிளகாயில் என்ன பதார்த்தம் உள்ளது? அது ஏவ்வாறான விளைவுகளை மனித உடலில் ஏற்படுத்தும்? என்பது பற்றி பார்ப்போம். இவ்வாறு செத்தல் மிளகாயில் இருந்தது aflatoxin என்ற mycotoxin ஆகும். இது பங்கசு (பூஞ்சன) வகையான Aspergillus flavus, Aspergillus parasiticus , Aspergillus nomius போன்றவற்றில் இருந்து இயற்கையாக வெளியே சுரக்கப்படும் பதார்த்தம் ஆகும். இது மற்றைய பங்கசு வகைகள் மற்றும் நுண்ணுயிரிகள் வளர்வதை தடுக்கும். இதில் aflatoxins, ochratoxins, citrinin, ergot alkaloids, patulin, Fusarium toxins போன்ற பல்வேறு வகைகள் உண்டு.
Aflatoxin மட்டும் 18 வகையான உப வகைகள் உண்டு. இதில் aflatoxin b1 என்பதே மிகவும் ஆபத்தானது, இது class 1 என்ற carcinogen (புற்று நோயினை உருவாக்கும் காரணி ) ஆக வகைப் படுத்தப்பட்டுள்ளது. அதாவது class 1 என்றால் இந்த பதார்த்தம் அடங்கிய உணவு பொருட்களை உட்கொண்டால் நிச்சயமாக புற்று நோய் உண்டாகும் சாத்தியம் உள்ளது. முக்கியமாக ஈரல் புற்று நோய் உருவாகும். இந்த aflatoxin ஆனது வெப்பத்தினால் அழிவடையாது அதன்காரணமாக சமைத்த பின்னரும் இரசாயன ரீதியில் உயிர்ப்பாக காணப்படும். மேலும் இவ்வாறு aflatoxin இனால் பழுதடைந்த உணவுகளை உட்கொண்ட பசுக்களின் பாலில் aflatoxin b1 இன் பக்க விளைபொருள் ஆகிய aflatoxin m1 கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து aflatoxin எவ்வளவு ஆபத்தானது என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.
முக்கியமாக Aspergillus flavus என்ற பங்கசு தானியங்களான சோளம், கச்சான், அரிசி, மிளகு, செத்தல் மிளகாய் போன்றவற்றில் இயற்கையாக வளரும். முக்கியமாக மேற்குறித்த தானியங்களினை வெப்பமான ஈரலிப்பான இடங்களில் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் பொழுதும், மழை நாட்களில் அறுவடை செய்யும் பொழுதும் இந்த பங்கசு தொற்றி கொள்ளும்.
தற்போதைய காலங்களில் பெரும்பாலான வீடுகளில் கறி மிளகாய்த் தூள் செய்வதில்லை மாறாக கடைகளில் இருந்தே வாங்குகிறோம் இவ்வாறு வாங்கும் சந்தர்ப்பங்களில் இவ்வகையான பங்கசு தொற்றுக்கு உள்ளான செத்தல் மிளகாய்களும் நிச்சயம் அரைக்கபட்டு தூளின் ஊடாக எமது உணவில் சேரும்..
இவ்வகையான தொற்றுதல் அடைந்த உணவுகளை உண்பதினால் என்ன சுகாதார சீர்கேடுகள் உண்டாகும்? Aflatoxin இருக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதால் உண்டாகும் நிலை aflatoxicosis என்றழைக்கப்படும். இந்நிலையினால் ஈரல் புற்று நோய், ஈரல் அழற்சி (cirrhosis and Reye’s syndrome), உணவுகள் சமிபாடு அடையாத்தனமை, போன்றன ஏற்படும்.
நாம் உண்ணும் உணவில் எந்த எந்த அளவில் aflatoxin இருக்கலாம்? பல்வேறு நாடுகளில் இதன் அளவானது 0-50mg/kg வரை வேறுபடுகின்றன. அமெரிக்காவில் 5mg/kg அளவினை விட அதிகரித்தல் ஆகாது . இலங்கையில் இது 15mg /kg ஆக இருக்கின்றது (Ref: Clarke’s Analytical Forensic Toxicology).
இவ்வாறு இந்த பங்கசு பாதித்த உணவுகளை அடையாளம் காணுவது? மிளகாயில் கறுப்பு நிறத்தில் இருக்கும் விதைகள் , கச்சானில் கறுப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும் பருப்புகள், சோளத்தில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி, தேங்காய் கொப்பராவின் பழுதடைந்த கறுப்பு நிறமாக பகுதி, வெங்காயம் மற்றும் உள்ளியில் கறுப்பு நிறத்தில் இருக்கும் பகுதி ஆகியன பங்கசினால் பாதிக்கபட்ட பகுதிகள் ஆகும் இவற்றினை மக்கள் உண்பதினை தவிர்ப்பது நல்லது.
எவ்வாறு இந்த பங்கசு தொற்றினை தவிர்ப்பது? நாம் மேற்குறித்த உணவுகளை களஞ்சிய படுத்தும் பொழுது உலர்ந்த, இரலிப்பற்ற இடங்களில் களஞ்சிய படுத்த வேண்டும். இலங்கை மக்களுக்கு இது பற்றிய போதிய அறிவு இல்லை. எம்மில் எத்தனை பேர் சமைக்கும் பொழுது பங்கசு தோற்றிய உணவு பகுதிகளை அகற்றி விட்டு சமைக்கின்றோம் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக