திங்கள், 26 ஏப்ரல், 2021

தமிழ்நாட்டுக்கு ஆக்ஸிஜன் தேவை; பிற மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது’ – பிரதமருக்கு பழனிசாமி கடிதம்

எடப்பாடி பழனிசாமி
vikatan.com - சே. பாலாஜி : தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை மிகவும்  அதிகமாக இருக்கும் போது ஆக்ஸிஜனை கட்டாயமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது என்பது, தேவை மிகுதியாக இருக்கும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும் – எடப்பாடி பழனிசாமி....இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் தீவிர பாதிப்பால் லட்சக்கணக்கில் மக்கள் மருத்துவமனை படுக்கைகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக, பெரும்பாலான மாநில மருத்துவமனைகளில் நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்ஸிஜன் திரவப் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர்.

ஆக்ஸிஜன் தயாரிப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் எனலாம். ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவும் மாநிலங்களுக்கு விரைவாக உதவும் பொருட்டு மத்திய அரசு ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டரைகளையும், ஒதுக்கீடு அடிப்படையில் திரவம் நிரப்பப்பட்ட லாரிகளையும் அனுப்பி துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை
ஆக்ஸிஜன் பற்றாக்குறை

அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆக்ஸிஜனை அனுப்பி வருகிறது

இந்த நிலையில், தமிழகத்திலும் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டுப் பிற மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கே ஒதுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாக, மாநிலத்தில் சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் தேவையும் அதிகரித்திருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு போதிய அளவில் ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டியதை உறுதி செய்யும் பொருட்டு மாநிலத்தின் தேவைகளை உங்கள் கனிவான கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

தற்போதைய சூழலில், கொரோனா நோய்த்தொற்று பரவலைக் குறைக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தித் திறனானது 400 மெட்ரிக் டன்னாக இருக்கிறது. ஆனால், விரைவில் இங்கு 450 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலை வரக்கூடும்.

2020-ம் ஆண்டில் கொரோனா நோய்த்தொற்றின் முதலாம் அலையின் போது அதிகபட்சமாக 58,000-ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கையானது தற்போது, 1 லட்சத்திற்கும் மேலாக அதிகரித்து விட்டது. அதன் காரணமாக, ஆக்ஸிஜன் தேவையானது மாநிலத்தில் அதிகரித்துள்ளது. போதுமான அளவு ஆக்ஸிஜன் விநியோகத்தை வழங்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

ஆக்ஸிஜன் திரவ உற்பத்தி தொழிற்சாலை
ஆக்ஸிஜன் திரவ உற்பத்தி தொழிற்சாலை

இந்த் நிலையில், சமீபத்திய தேசிய மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு திட்டதில் 220 மெட்ரிக் டன் என தமிழகத்துக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான நிர்ணயத்தின் அடிப்படையில், 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள உற்பத்தி ஆலையிலிருந்து அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள 220 மெட்ரிக் டன் என்ற அளவைத்தாண்டி ஆக்ஸிஜன் நுகர்வு 310 மெட்ரிக் டன் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிற மாநிலங்களில் தமிழகத்தைக் காட்டிலும் குறைந்த அளவிலான கொரோனா நோய்த்தொற்று பாதிப்புகளே பதிவாகி இருக்கின்றன.

இந்த மாநிலங்களில் பெரிய எஃகு தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தென்னிந்தியாவில் அதிக தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னைக்கு ஆக்ஸிஜன் வழங்கும் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை மடைமாற்றுவதில் எந்த நியாயமான காரணமும் இல்லை.

பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்
பிரதமருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதம்

இதை உடனடியாக திருத்த வேண்டும். தமிழகம் இதுவரை பிற மாநிலங்களுக்கு இங்கிருந்து ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்க எந்தவொரு கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை. மற்ற மாநிலங்களுக்கு உதவ எப்போதும் தயாராகவே இருக்கிறோம். இருந்தாலும், தமிழகத்தின் தேவை மிகவும் அதிகமாக இருக்கும் போது ஆக்ஸிஜனை கட்டாயமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்புவது என்பது, தேவைக்கு மிகுதியாக இருக்கும் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

எனவே, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் ஆலையிலிருந்து 80 கிலோ லிட்டர் ஆக்ஸிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் எடப்பாடி பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக