திங்கள், 5 ஏப்ரல், 2021

துணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல் புரளுது கோடி!

மின்னம்பலம் :அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.
ஆனால் முதல்வராக இருந்து துணை முதல்வராகப் பதவி இறக்கம் கண்டதிலிருந்து அரசியல், அதிகாரம், செல்வாக்கு எல்லாவற்றிலும் பன்னீர்செல்வத்துக்கு பல படிகள் சறுக்கல்தான்.
தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது கஷ்டம் என்பதில், அவருக்கு உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சியும் தெம்பும் இருக்கலாம்.
ஆனால் பழனிசாமியைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரச்சினையுமின்றி எம்.எல்.ஏ ஆகிவிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
என்ன காரணமென்றே தெரியாமல், முதல்வருக்கு எதிராக மிக மிகச் சாதாரண வேட்பாளரைத்தான் திமுக தலைமை நிறுத்தியிருக்கிறது.
அதற்கு அவர்கள் சில முன்னுதாரணங்களையும் சொல்லி, முதல்வர் பழனிசாமி ஜெயிப்பது அவ்வளவு எளிதில்லை என்கிறார்கள்  1996ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவைத் தோற்கடித்தவர், 

திமுகவின் பெரிய ஆளுமையோ, தலைவரோ இல்லை. தொகுதி மக்களுக்கே அப்போது பெரிதாக அறிமுகம் இல்லாத சுகவனம்தான். ஆனால் அவர் ஜெயலலிதாவை 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, அகில இந்தியாவையும் அதிர வைத்தார். 

அப்போது உருவத்திலும் மிகச்சிறியதாக இருந்த அவரை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிமுகம் செய்த கலைஞர், ‘யானையின் காதில் புகுந்த எறும்பு’ என்று வர்ணித்தார். இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்தும் இத்தகைய சாதாரண வேட்பாளர் ஒருவரைத்தான் களம் இறக்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அதேநேரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்துக்கு எதிராக, ஒரு காலத்தில் அவராலேயே வளர்க்கப்பட்டு, கவர்ந்திழுக்கும் பேச்சிலும், களப்பணியிலும் கலக்கும் தங்க தமிழ்ச்செல்வனை போட்டியிட வைத்துள்ளார். அருகிலுள்ள ஆண்டிபட்டி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் நின்றால் எளிதில் வென்று விடுவார். ஆனால் பன்னீரை கண்ணீர்விட வைக்க வேண்டுமென்பதற்காகவே அவரை இங்கே ஸ்டாலின் நிறுத்தியிருப்பதாக கட்சிக்காரர்களும் நினைக்கின்றனர்.

பன்னீரை வென்றால் அமைச்சர்; தோற்றால் ராஜ்யசபா உறுப்பினர் பதவி என்ற உத்தரவாதத்தின் பேரிலேயே அவரை அங்கு களம் இறக்கிவிட்டுள்ளதாகவும் பேச்சு இருக்கிறது. அதனால் ‘வந்தால் மலை போனால் முடி’ என்கிற அளவில்தான் தங்க தமிழ்ச்செல்வனும் தரை ரேட்டுக்கு இறங்கி, பன்னீரை விடாமல் ‘தெளித்து’ கொண்டிருக்கிறார். அங்கே கடைசியாக கள நிலவரம் எப்படியிருக்கிறது என்று விசாரித்தால், ‘முதலில் இருந்ததைப் போல அவ்வளவு எளிதாக இல்லை. கொஞ்சம் அசந்தால் தொகுதியை தங்கம் கொத்திவிடுவார்’ என்ற அளவில்தான் இருப்பதாகச் சொல்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள். தொகுதி நிலவரம், உண்மையிலேயே அவ்வளவு கடினமாக இருக்கிறதா அல்லது கடினமாக இருப்பதாகக் கூறி, பன்னீரிடம் பணம் பறிப்பதற்காக கட்சிக்காரர்கள் கதை கட்டி விட்டார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஆனால் எதற்கு ரிஸ்க் என்று ஓபிஎஸ் மகன்களும் தேடி வந்தோரை கவனிப்பதில் துவங்கி வாக்காளருக்கு வாரி வழங்குவது வரை கோடிகளில் குளிப்பாட்டுவதாகச் சொல்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள். இதனால் எதிர்பார்த்ததைவிட பட்ஜெட்டும் பன்னீருக்கு எகிறுவதாகச் சொல்கிறார்கள்.

போடி தொகுதியில் அதிமுக சார்பில் நடக்கும் பட்டுவாடாக்கள் பற்றி பட்பட்டென்று உடைத்துச் சொன்னார் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு மிகவும் நெருக்கமாகத் தேர்தல் பணி செய்யும் நிர்வாகி ஒருவர்...

‘‘அரிதிலும் அரிதாக இந்தத் தொகுதியில் இந்த முறை முக்குலத்தோரும் மோதுகின்றனர். திமுக வேட்பாளர் பிரமலைக்கள்ளர். அதிமுக வேட்பாளர் மறவர். அமமுக வேட்பாளர் அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதனால் முக்குலத்தோரின் வாக்குகள் ஒரு தரப்புக்கு மட்டும் அதிகமாகப் போவதற்கு வாய்ப்பில்லை. இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வர முடியாது என்றாலும், தன்னுடைய அரசியல் எதிர்காலம் ஸ்திரத்தன்மையுடன் இருப்பதற்கு ஜெயித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் பன்னீர் இருக்கிறார்.

இதனால் அவருடைய மகன்கள் இருவரும் களத்தில் நின்று கொண்டு காசை வாரியிறைக்கிறார்கள்.

தன்னுடைய சொந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியும் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் மறவர்களுக்கும், இஸ்லாமியர்கள், பட்டியலின மக்களுக்கு ஓட்டுக்கு 1,000 வீதம்தான் கொடுத்திருக்கிறார்கள். தொகுதியில் கணிசமாகவுள்ள வெள்ளாளர் மற்றும் பட்டியலினத்தில் கீழ்நிலையில் உள்ள சில சமுதாயத்தினர் ஆகியோருக்கு 3,000 வீதமும் கொடுத்துள்ளனர். ஆனால் திமுக வேட்பாளர் பிரமலைக் கள்ளர் என்பதால் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓட்டுக்கு 4,000 ரூபாய் வீதம் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. தொகுதியில் உள்ள 2,77,964 வாக்காளர்களில் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கு இந்தக் கணக்கில் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதே தொகுதியில் முக்குலத்தோருக்கு இணையாக பிள்ளைமார், செட்டியார் சமுதாயத்தினரும் இருக்கின்றனர். இவ்விரு சமுதாயத்தினரும் எப்போதுமே ஒரே மாதிரியாக வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை நிலவுவதால் இரண்டு சமுதாயத்தினரையும் ஒரே மாதிரியாகக் கவனித்துள்ளனர். இதில் பிள்ளைமார் சமுதாயத்தினரின் வாக்குகளைக் கவர்வதற்காக, தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக வ.உ.சிதம்பரனார் வெண்கலச்சிலையை பன்னீர் திறந்து வைத்தார்.

இதே இரண்டு சமுதாயத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு சிவகங்கை காங்கிரஸ் பிரமுகரின் உதவியை நாடினார் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன். திமுக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள், விஐபிக்களின் பரப்புரை, தேர்தல் அறிக்கை, சமுதாய வாக்குகள் என பல விஷயங்களையும் கணித்து அதற்கேற்ப தேர்தல் பணி செய்கிறார்கள். ஆனால் பன்னீர் தரப்பு பணத்தை மட்டுமே பிரதானமாக நம்பியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. செலவு செய்வதில் திமுக வேட்பாளரால் அதற்கு ஈடுதர முடியவில்லை என்பதே உண்மை. திமுக தலைமையிலிருந்து வேட்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட மூன்று கோடி ஸ்வீட் பாக்ஸில் பல லட்சம் பாக்ஸ்கள் குறைந்து விட்டதாகத் தகவல் பரவியுள்ளது. இதுபற்றி மற்ற திமுக வேட்பாளர்களிடம் அவர் விசாரித்தபோது அவர்களும், ‘எங்களுக்கு அஞ்சு குறைச்சலா இருந்துச்சு; ஏழு குறைவா இருந்துச்சு’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் செய்வதறியாமல் திகைத்துக் கொண்டிருந்த தங்கம், தனக்கு வேண்டிய அதிமுக அமைச்சர்கள் சிலரிடம் உதவி கேட்டதாகவும், அவர்களும் உதவியிருப்பதாகவும் தெரிகிறது. இதனால் கடைசி நேரத்தில் அவர் கொஞ்சம் தெம்பாகிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது.

மற்றொரு புறத்தில் வன்னியர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்தது, சசிகலாவைக் கட்சியில் சேர்க்க மறுத்தது போன்றவற்றைச் சொல்லி, தேவர் சமுதாயம் உட்பட இடைநிலைச் சமுதாயங்கள் அனைத்துக்கும் அதிமுக அரசு துரோகம் இழைத்து விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. இதெல்லாம் பன்னீரின் வெற்றிக்குக் குழி தோண்டும் காரணிகளாகவுள்ளன. ஆனால் அனைத்து கருத்துக்கணிப்புகளும் அவர் வென்று விடுவார் என்று சொல்லியிருப்பது மட்டுமே பன்னீருக்கு ஆறுதலாக இருக்கிறது. கடைசி நேரத்தில் அசந்தால் பன்னீர் கண்டிப்பாகக் கண்ணீர்விட வேண்டியிருக்கும்!’’ என்றார்.

தர்மயுத்தத்தில் ஜெயிக்க முடியாத பன்னீர்... தேர்தல் யுத்தத்தில் என்ன செய்யப் போகிறார்?

–பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக