வெள்ளி, 23 ஏப்ரல், 2021

இந்திய பாகிஸ்தானிய பயணிகளுக்கு கனடா தடை 30 நாட்களுக்கு இந்த தடை என அறிவிப்பு

லங்கா ஸ்ரீ : இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமானங்களை கனடா 30 நாட்களுக்கு தடை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மக்கள் ஆக்ஸிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறையால் பரிதவித்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கையும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், பல மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
தற்போது நாட்டின் முதன்மையான பல நிறுவனங்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தாமாகவே முன்வந்து இலவசமாக மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கி வருகிறது.
பெடரல் அரசு கண்டுகொள்ளாத நிலையில், பொதுமக்கள் சக மனிதர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.



இந்த நிலையிலேயே, கடந்த இரண்டு வாரங்களில், கனடாவில் தரையிறங்கிய 100 க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் குறைந்தது ஒருவருக்காவது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கனடா பெடரல் அரசு தெரிவித்துள்ளது.
இதில் 32 விமானங்கள் இந்தியாவில் இருந்து கனடா வந்தவை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே அடுத்த 30 நாட்களுக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பயணிகள் விமான சேவைகளுக்கு கனடா தடை விதித்துள்ளது.
கனடாவில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளில் 1.8% பேர்கள் விமான பயணிகள் எனவும், தற்போதைய சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து விமான சேவையை ரத்து செய்வதன் மூலம் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் என்றே கனேடிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக